நிருத்தம் பழம்படி ஆடும் கழல்
இறைவன் ஆடும் ஆடல்களை பலரும் பலவிதமாகச் சொல்ல திருநாவுக்கரசு நாயனார் சற்று மாறுபட்டு இயற்கையோடு தொடர்புபடுத்தி தமது தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் முன்னோர்கள் அதிலும் சைவசமயப் பெரியோர்கள் பூதம் என்று இன்றைய தமிழர் சொல்வது போல பேய், பிசாசு, பூதம் என்ற வரிசையில் சொல்லும் பூதத்தை சொல்லவில்லை. அவர்கள் இயற்கையிலுள்ள ஐம்பெரும் பூதங்களின் செயற்பாடுகளை இறைவனின் செயல்களாகக் கண்டனர் என்பதை கருத்தில் பதித்தல் நன்று.
“நாதன்காண் பூதகண மாட ஆடும் சொக்கன் காண்”
- (பன்.தி: 6: 7: 2)
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களும் ஆட இறைவன் ஆடுவதாகச் சொன்னதோடு,
“............உலகம் முற்றும்
இரிக்கும் பறையோடு பூதங்கள் பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் எம்மை ஆள்வனவே”
- (பன்.தி: 4: 82: 4)
எனவும் கூறியுள்ளார்.
இதிலே இரிக்கும் என்பது அச்சுறுத்தும் என்ற கருத்தைத் தரும். உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் ஒலியோடு ஐம்பூதங்கள் பாட இறைவன் நிருத்தம் ஆடுவாராம். அவர் ஆடுவதோ பழம்படி. புதுப்படி அல்ல பழம்படி. அது பழமையான ஆடல் வடிவம். இயற்கை தோன்றிய காலத்திலேயே அந்த ஆடல்வடிவமும் தோன்றியது. இயற்கையின் சுழற்சியில் நிருத்தனார் ஆடும் பழம்படியே பேரழிவுகளாகும். அதனாலே அவரை அழித்தல் கடவுளாக்கினர் போலும். உலகம் முழுவதையும் அஞ்சச் செய்யும் ஒலியோடு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் எப்படிப் பாடுகின்றன என்பதையும் நிருத்தனார் எப்படி நிருத்தம் செய்கிறார் என்பதையும் கொஞ்சம் பார்த்து மகிழ்வோம்.
கோரத்தாண்டவம்
நிலம், திடீரென நடுங்கிக் குமுறிச்சினந்து, எரிமலையாக ஓங்கிஎழுந்து, பேரோசையுடன் பயங்கரமாக வெடித்துச்சிதறி, வானமெங்கும் கரும்புகை மூடி இருள்சூழ அனற்குழம்பாக உயிர்களை எல்லாம் அச்சுறுத்துகிறது. எரிமலை உண்டான போது எழுகின்ற ஒலியே, இரிக்கும் பறையோடு நிலம் என்னும் பூதம் பாடும் பாடல். அந்தப் பாடலுக்கு நிலம், எரிமலையாக வெடித்து கோரமாக சிதறி ஓடுவதே நிருத்தனார் கெக்கலித்து ஆடும் பழம்படி. பழம்படி என்பது ஆட்டக்கெலிப்பு. மட்டற்ற ஆசையில் மூழ்கி ஆடுதல். எரிமலையால் உண்டாகும் அழிவுகள் யாவும் நடனராஜனின் கோரத்தாண்டவம் ஆகும்.
துளங்கெரியாடல்
நிலத்தினுள் இருந்து எழுந்து எரிமலையாக கக்கி, அனற்குழம்பாக ஓடும் நெருப்பே, காட்டுத் தீயாகவும் கனன்று எரிகிறது. நிலம் கனன்று எரிமலையாக குமுரியதும் காட்டுத்தீயாய் சுழல்ன்று எரிந்ததும் ஒரே நெருப்பே. ஆனால் அதன் தன்மை மாறுபடுகிறது. காட்டுத்தீ உண்டாக்கும் ஒலியே நெருப்பாகிய பூதம் பாடும் பாடல். பசுமையாக இருந்த பச்சைக்காடும் பற்றி எரிந்து பிடிசாம்பலாக மாறும். அதுவே இறைவன் தீயாய் தீக்குள் நின்று ஆடி, தீஏந்தி ஆடும் துளங்கெரியாடல். அதனை
“துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி ஆடுமாறே”
- (பன்.தி: 4: 22:1)
என திருநாவுக்கரசு நாயனார் கூறியுள்ளார்.
வீசிதாண்டவம்
நீர் மழையாகப் பொழிந்தும், வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியும், சுனாமியாக எழுந்தும் வரும்போதும் எழும் ஒலிகளே நீராகிய பூதத்தின் பாடல். நீரின் தண்மையான தன்மையில் இருந்து மாறி, உக்கிரமாக யாவற்றையும் தன் வயிற்றினுள் அள்ளி எடுத்து நிலத்தை கழுவித் துடைத்துச் செல்லுமே அதுவே மேலும் கீழுமாய் வீசி தாண்டவமாய் இறைவன் ஆடும் பழம்படி.
சங்காரத் தாண்டவம்
காற்று புயல் என்றும், சூறாவளி என்றும் ‘ஊ’ என இரைச்சலிட்டு கட்டுக்கடங்கா கோபாவேகத்துடன் பாடுவதை கேட்டிருப்பீர்கள். நிலத்தொடு வானம் தொட முறுகி நின்று சுழன்று சுழன்று ஆடும் காற்றின் சங்காரத் தாண்டவத்தில் எத்தனை ஆயிரம் ஆயிரம் உயிர்களும் பொருட்களும் அழிந்து ஒழிகின்றன. இந்த சங்காரத் தாண்டவமும் காற்றின் பாடலுக்கு இறைவன் ஆடும் பழம்படியே.
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய இந்நான்கு பூதங்களுக்கும் ஆகாயம் உதவுவதோடு, ஊழிமுடிவின் ஊழிக்கூத்தாய் பெரும் பங்கு வகிக்கின்றது. ஊழிக்கூத்தாகிய பழம்படியை
“மண்பாதாலம் புக்கு மாக்கடல்மூடி மற்று ஏழுலகும்
விண்பால் திசை கெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே”
- (பன்.தி: 4: 94: 9)
என்று திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் செப்பியுள்ளார்.
எனவே தமிழர் ஐம்பெரும் பூதங்களால் ஏற்படும் இயற்கையின் பேரழிவுகள் யாவற்றையும் இறையாடலாக, தாண்டவமாக, கூத்தாகக் கண்டனர். அதனால் இயற்கையே தமது கடவுளாகக் கண்ட தமிழரின் கடவுள் கொள்கை போற்றுதலுக்கு உரியது. எனவே இறையாடல் ஆகிய இயற்கையால் வரும் பேரழிவு இயற்கையின் சுழற்சியாய் இறைவனாய் ஒடுங்கி விரிகிறது. அதற்கு அழிவில்லை.
இனிதே,தமிழரசி.
No comments:
Post a Comment