Friday 6 July 2012

தோல் அழகு 3


எண்ணெய்த் தன்மையான தோல்

எமது தோலால் உண்டாக்கப்படும் எண்ணெய் தோலின் நீர்த்தன்மையைப் பாதுகாத்து தோலில் ஏற்படும் வரட்சியைத் தடுக்கின்றது. அதே நேரம் தேவைக்கு அதிகமான எண்ணெய்யை தோல் உற்பத்தி செய்யும் போதே முகம் எண்ணெய்த் தன்மையாகவும் மினுமினுப்பாகவும் இருப்பதோடு பருக்களும் கரும்புள்ளிகளும் வருகின்றன. இயற்கையாக உங்களுக்கு எண்ணெய்த் தன்மையான தோல் இல்லாது இருந்தாலும் வேறுகாரணங்களாலும் எண்ணெய்த்தன்மை ஏற்படலாம். உதாரணமாக
  • நீங்கள் பாவிக்கும் மேக்கப்
  • உங்கள் உணவுப் பழக்கம்
  • காலநிலை மாற்றம்
  • நீங்கள் கருவுற்றிருக்கும் போதும், உங்கள் பருவவயதில் ஏற்படும் ஹோமோன் மாற்றத்தாலும் (Hormonal Changes) எண்ணெய்த்தன்மை வரலாம்.
உங்கள் முகம் மத்தியான நேர வெய்யிலில் எண்ணெய்த் தன்மையாகவோ மினுமினுப்பாகவோ இருக்கின்றதா? இருப்பின் உங்களுக்கு எண்ணெய்த் தன்மையான தோல் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இத்தோல் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிகமான பருக்கள் காணப்படும். ஆனால் அவர்கள் நீண்ட நாட்களுக்கு இளமையாகத் தெரிவார்கள். இத்தன்மையான தோல் உள்ளவர்களுக்கு அதிகமான பாதிப்பைக் கொடுப்பது அவர்களின் தோலில் படியும் அழுக்குகளே. தோல் எண்ணெய்த்தன்மையாக இருப்பதால் காறில்லுள்ள தூசுகள் அதில் ஒட்டி தோலை அழுக்காக்குகிறது. 
எனவே இத்தோல் உள்ளவர்கள்
  • ஒவ்வொரு நாளும் குளிப்பதோடு காலை மாலை மறக்காது சுடுநீரில் முகம் கழுவுவது அவசியம்.
  • கிழமைக்கு இரண்டு தரமாவது முகத்துக்கு நீராவி பிடிப்பது நல்லது.
  • எண்ணெய்த் தன்மை இல்லாத (Oil Free) மேக்கப் பொருட்களைப் பாவிக்க வேண்டும்.
  • கொழுப்புச் சத்துள்ள உணவுகளை மிகக்குறைவாக உண்ண வேண்டும்.
  • 2 : 1 என்ற விகிதத்தில் கியூகும்பர் (cucumber) சாறும், எலுமிச்சம் சாறும் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவி வரலாம். அல்லது முகப்பற்று (Face Mask) போடலாம்.
முகப்பற்று - எண்ணெய்த் தன்மையான தோல் உள்ளவர்களுக்கு:
2 அங்குல நீளமான கியூகும்பர் (cucumber) துண்டு
1 தேக்கரண்டி எலுமிச்சம்சாறு
1 தேக்கரண்டி தேன்
1 முட்டை வெள்ளைக் கரு
இவற்றை பசைபோல் அரைத்து முகத்தில் பற்றுப்போட்டு (கண்ணில் படாது) பத்து நிமிடங்களின் பின் கழுவவும். 
அவசர உணவுகளிலுள்ள (Fastfood)  அயடின் (iodine) எண்ணெய்த் தன்மையான தோல் உள்ளவர்களுக்கு மேலும் அதிகமான பருக்களை உண்டாக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவசர உணவுகளுக்கு காசை வீணாக்காது நல்ல காய்கறி, கீரை, பழவகைகளை வாங்கி உண்டு, முகப்பரு இல்லாது வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment