Friday 13 July 2012

குறள் அமுது - (38)


குறள்: 
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
  இன்சொலன் ஆகப் பெறின்”                               - 92
பொருள்:
மன நிறைவோடு ஒருவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதை விட அவரைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க இனிமையாகப் பேசுவதே நல்லது.
விளக்கம்:
அகம் என்பது மனம். ஈதல் என்றால் கொடுத்தல். அகனமர்ந்து ஈதல் மனம் மகிழ்ந்து கொடுத்தலாகும். முகனமர்ந்து என்பது முகம் மலர்ந்து எனப் பொருள் தரும். இந்நாளில் பொருளுக்கே முதலிடம் கொடுக்கிறோம். ஆனால் அந்தப் பொருளைவிட , அன்பு பொங்க மனநிறைவோடு சொல்லும் இனிய சொற்களே பெருமதிப்புப் பெற்றவையாகும்.

அன்பு ஊற்றெடுக்கும் நெஞ்சிலே கயமை, வஞ்சனை, சூது, வாது என்பன தோன்றுவதில்லை. அங்கே இனிமையும் மகிழ்ச்சியிமே குடியிருக்கும். நாம் இனிமையை விரும்பும் அளவுக்கு கயமையை, கசப்பை விரும்புவதில்லை. இனிமையே எமக்கு இன்பம் தரும். பிறந்த குழந்தையும் விலங்கும் கூட அன்பால் விளையும் இனிமையையே விரும்பும், பொருளை கொட்டிக் கொடுத்தால் மகிழுமா? அங்கே, எங்கே பொருளுக்கு மதிப்பு? 
“இன்சொல்லால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்”
என்கின்றது நல்வழி. வெப்பம் மிகுந்த சூரியனின் கதிரொளியால் பொங்காத கடல் குளிர்ந்த நிலவின் கதிரொளியால் பொங்கும். அதுபோல், இவ்வுலக உயிர்களும் இனிய சொல்லால் அல்லாமல் கொடிய சொல்லால் மகிழாது என்கிறார் ஔவையார்.
படியாத மாணவருக்கு நீ நன்றாகப் படிப்பாய் உன்னால் முடியும் என இன்முகத்தோடு ஆர்வம் ஊட்டி வந்தால் அவனும் வல்லவனாக வருவான். இது போல் மனச்சோர்வு அடைந்தோரிடமும் உடல் ஊனம் உற்றோரிடமும், நோய் வந்தோரிடமும், முதியோரிடமும் நாம் முகம் மலர்ந்து இனிமையுடன் தன்நம்பிக்கையை வளர்த்தால் அவர்களும் தமது தாழ்வு மனப்பான்மையை மறந்து மகிழ்வுடன் வாழ்வர்.
உலகோருக்கு மனம் மகிழ்ந்து பொருளை வாரிக் கொடுப்பதைவிட முகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறி எல்லோரும் மகிழ்வோடு இனிது வாழ்வது நன்றாகும்.

No comments:

Post a Comment