Tuesday 10 July 2012

சங்ககாலத் தந்தையர் - பகுதி 3

பெண்களின் அழகில் மயங்கி பெண்கேட்டு வந்த அரசரையும், அரசரென்றாலும் பெண் கொடுக்க மறுக்கும் தந்தையரையும், அதனால் நாட்டுக்கு வரப்போகும் அழிவை எண்ணிக் கலங்கிய புலவர் சிலரையும் புறநானூறு சொல்கிறது. அழகிய நங்கையரை திருமணம் செய்ய பெண்கேட்டு வந்தால் பல காரணங்கள் கூறி தந்தையர் மறுப்பர். அதில் ஒன்று ‘தன்னை முறைப்படி வணங்காதவர்க்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்கமாட்டேன்’, எனக் கூறுதல். அப்படிக்கூறிய தந்தையை 
“தன் தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்”  
எனும் புறநானூறுப் பாடல்வரி காட்டுகிறது.
பெண்கேட்டு வருபவரை இழிவாகப் பேசி, மகளைக் கொடுக்க மறுப்பதை ‘மகட்பாற்காஞ்சி’ என சங்க நூல்கள் கூறும். மகளைக் கொடுக்க தந்தையர் மறுத்தால், அரசர் அவர்களுடன் போர் செய்வதும், எதுவித பொருத்தமும் இல்லாது தன் மகளை விரும்பிய அரசர் மீது தந்தையர் போர் தொடுப்பதும் மகட்பாற்காஞ்சி (மகள் மறுத்தல்) என்றே அழைக்கப்பட்டது. பழங்குடித் தலைவர்கள் தம்மை எதிர்த்து வந்த அரசர்க்கு மகளிரைக் திருமணம் செய்து கொடுக்க அஞ்சியது (பயந்தது) மகட்பாற்காஞ்சி என்பதை
“நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடஞ்சிய மகட் பாலானும்”                      
என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். மகள் மறுத்தலால் வரப்போகும் போர்களை எண்ணி, சங்ககாலப் புலவர் பலர் வருந்திக் கூறியிருக்கிறார்கள். அவர்களில் பரணரே பல பாடல்களில் பெண் காரணமாய்ப் போரிட்டு அழிவதை எண்ணிக் கலங்கி இருப்பதை சங்க இலக்கியத்தில் காணலாம். ‘தந்தை ஒருவன் மகள் தர மறுத்ததால், வேந்தன் நெற்றி வியர்வையை வேல் முனையால் துடைத்தவாறு கொடிய சொற்களால் பேசுவைதையும், அவளது தந்தையும் நீட்டி முழங்கிப் பேசுகிறானே அல்லாமல் பணிவாகப் பேசாததையும், அவரது அந்த நிலையால் கூறிய பற்களும் அகன்ற கண்களும் மாமை நிறமும் உடைய அவள் மரத்தில் பட்ட சிறுதீ போல் தான் பிறந்த ஊருக்கே அழிவைத்தரும் அணங்காயினாள் என்பதை  
“நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின், வைஎயிற்று
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறுதீ போல 
அணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே”             - (புறம்: 349)
என்று மதுரை மருதனிளநாகனார் எனும் சங்ககாலப்புலவர் புறநானூற்றில் படம் பிடித்துக்காட்டுகிறார்.
தந்தையர் மகள் கொடுக்க மறுத்ததற்கு காரணம் இருந்தது. பழங்குடி மரபில் வந்த சங்ககாலத் தந்தையர், இன்றைய இலங்கை, இந்திய அரசியற் தலைவர்கள் போலிருந்த அரசர்களுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். அவர்கள் தமது மறக்குலப் பெண்களை எண்குணம் நிறம்பியவர்க்கே கொடுத்தனர். பெருங்கதை அந்த எண்குணத்தை
“இளமையும், வனப்பும், இல்லொடுவரவும்
வளமையும் தறுகணும் வரம்பில்கல்வியும்
தேசத்தமைதியும் மாசில்சூழ்ச்சியும்
எண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட்கொடை நேரார் மதியோர்”
என்கிறது.
அன்றைய தந்தையர் இளமையும், அழகும், குடிப்பெருமையும், செல்வமும், அஞ்சாநெஞ்சமும், துறைபோகக் கற்ற அறிவும்,  தாம் வாழும் தேசத்தின் அமைதியை விரும்புதலும், குற்றமில்லா நுண்ணறிவும் ஆகிய எட்டு தகுதியும் உடையவர்க்கே தமது மகளிரைக் கொடுத்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது.
திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கவேண்டிய பத்து  பொருத்தங்களை தொல்காப்பியர்
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”             - (தொல்: 269)
எனக்கூறியுள்ளார். 
பிறப்பு, குடும்பம்[குடிமை], வலிமை[ஆண்மை], வயது[ஆண்டு], அழகு[உருவு], காதலன்பு[நிறுத்த காமவாயில்], ஒழுக்கம்[நிறை], அருள், உலக அறிவு[உணர்வு], செல்வம்[திரு] ஆகிய பத்துப் பொருத்தங்களும் திருமணம் செய்யும் ஆண், பெண் இருவருக்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்றே தொல்காப்பியர் இச்சூத்திரத்தில் கூறியுள்ளார். இதனுடன் ஒப்பிட்டு இன்றைய சோதிடர் கூறும் பத்து திருமணப் பொருத்தங்களையும் பாருங்கள். சோதிடர் கூறுவது எவ்வளவு பேதமை என்பது அப்போதாவது எமக்குப் புரியுமா? கணவனும் மனைவியும் வலிமை, வயது, அழகு, அன்பு, ஒழுக்கம், அருள், அறிவு என ஒத்திருந்தால் அந்த வாழ்வு எவ்வளவு இனிமையானதாக இருக்கும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரிடம் இருந்த அறிவுத் தெளிவு  எம்மிடமிருந்து எங்கே போனது?  
மகள் காதலித்தவனுடன் சென்றுவிட்டாள். அவளைத்தேடிச் செல்லும் செவிலித்தாய், எதிரே வருபவரிடம் ‘கருநிறத் தாடியும், பெரிய கையும், வைத்தகுறி தப்பாது அம்பெய்து மகிழும் ஆற்றலும் உடைய தந்தையின் ஊரெனெ’, தந்தையின் பெருமையைச் சொல்கின்றாள்.
“மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை 
வல்வில் அம்பின் எய்யா வன்மகிழ்த்
தந்தை தன் ஊர் இதுவே”                          - (நற்றிணை: 198)
நற்றிணையில் வரும் இப்பாடல் சங்ககாலத் தந்தையர் தாடி வைத்திருந்ததைக் காட்டுகிறது.
இன்னொரு செல்வம்மிக்க தந்தையின் செல்லமகள் மணம் முடித்து கணவன் வீட்டிற்குச் சென்றாள். அவளது கணவனின் குடும்பம் வறுமையில் வாடியது. அதை அறிந்த தந்தை மகளின் வறுமை போக்க பொருள் கொடுத்து அனுப்பினான். அவளோ அதை வாங்க மறுத்துவிட்டாள். அதைப் பார்த்த தாய்
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றம் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு ள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கறல் போல
பொழுது மறுத்து உண்ணூம் சிறுமதுகையளே!”        
                                                       - (நற்றிணை:110)
என்கிறாள். 
தேன்கலந்த பாலை பொற்கலத்தில் இட்டு ஒரு கையில் ஏந்தி, பூப்போன்ற மென்மையான சிறுதடியால் வெருட்டி உண்ணென்று சொல்ல, முத்துக்களை பரலாகப் போட்ட பொற்சிலம்பு ஒலிக்க செவிலியருக்கும் பிடிபடாமல் ஓடி உண்ணமாட்டேன் என மறுத்து  சொற்கேளாது சிறுபிள்ளைத் தன்மாக விளையாடித் திரிந்த என்மகள் இத்தகைய அறிவையும் ஒழுக்கத்தையும் எப்படி அறிந்தாள்? அவளை மணம் செய்து கொண்ட கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததற்காக தந்தை கொடுத்த செழிப்புள்ள உணவை உண்ணாது, ஓடு நீரின் நுணங்கு போல ஒருபொழுது உணவை மறுத்து உண்கின்ற உறுதியை எங்கு பெற்றாள்?”, எனத் தாய் வியக்கின்றாள்.
இவ்வாறு இல்லறவாழ்க்கையில் இணைந்து மக்களைப் பெற்று மகிழ்ந்த இளம் தந்தையரை ஐங்குறு நூறு மிக அழகாகக் காட்டுகிறது. மகனோ, மகளோ குழந்தை பெற்றதை அறிந்தால் செவிலித் தாய்மார் சென்று பார்ப்பர். அப்படிப் பார்க்கச் சென்ற செவிலித்தாய் ஒருத்தி
“மாலை முன்றிற் குறுங்காட்டின்நகை
மனையோள் துணைவியாகப் புதல்வன்
மார்பில் ஊரு மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித்தம்ம பாணனது யாழே”            - (ஐங்குறு நூறு: 410)
எனச் சொள்கிறாள்.
நேரமோ மாலைப் பொழுது. முற்றத்தில் அவனருகே குறுநகை காட்டி இனிமையாக சிரிக்கும் மனைவி தோழியாக இருக்கிறாள். புதல்வனோ அவனது மார்பில் தவழ்கிறான். அந்த இனிமையான பொழுதிற்கு யாழிசை கூட ஒத்ததாக இருக்காது. பாணரது யாழ் நோய் பிடித்தது போலச் சிணுங்குமாம். இப்படித் தான் வளர்த்த மகன் - இளம் தந்தையாகி; மனைவி, குழந்தையுடன் மகிழ்ந்திருந்த போது அதைப்பார்த்து மகிழ்ந்த செவிலித்தாய் எங்கே! இன்றைய தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் சூழ்ச்சித்தாயர் எங்கே?

புதல்வனைக் கட்டி அணைத்தான் தந்தை, மென்மொழியாகிய மழலை பேசும் புதல்வனின் தாயோ இருவரையும் கட்டி அணைத்தாள். இப்படி இவர்கள் தந்தை, தாய், குழந்தை என அணைத்தபடி கிடப்பது மிகவும் இனிமையானது. இப்பெரிய உலகில் பெறக்கூடிய நன்மைகள் யாவற்றையும் உடனே அது தரும் என ஐங்குறு நூறு கூறுகின்றது.
மகன் சிறுதேர் ஓட்டி தளர்நடை நடந்து வருகிறான். அதனை ஓர் இளம் தந்தை காண்கிறான். 
“புணர்ந்த காதலியிற் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றதே
அகன் பெரும் சிறப்பில் தந்தை பெயரன்
முறுவலின் இன்நகை பயிற்றிச் 
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே”     
                                    - (ஐங்குறு நூறு: 403)
‘மிக்கபெரும் சிறப்புடைய என் தந்தையின் பெயரனாகிய எனது மகன், முகம் மலர்ந்து சிரித்தபடி சிறுதேர் உருட்டி தளர்நடை நடந்து வருவதைக் கண்டு, என்னோடு சேர்ந்த காதலியைவிட மகனிடம் உண்டாகும் காதல் பெரிதாகின்றதே’, எனக்கூறும் இளம் தந்தையாக சங்ககாலப் புலவர் காட்சி தருகின்றார். சங்ககாலத்தில்  தனது பிள்ளையின் மகனை பெயரன் என அழைத்தனர் என்பதையும் இப்பாடல் தருகிறது. நாம் பேரன் என்கிறோம். தந்தையர் ஒப்பர் மகன் எனும் பழமொழிக்கு இணங்க பண்டைக்கால தந்தையரில் இருந்து காலங்காலமாக தந்தையர் தம் கருத்தில் மாறாது தொடர்ந்து வருகின்றனர். எனினும் சங்ககாலத் தந்தையரிடம் இருந்த ஓர்ப்பும், பரிவும், மனிதநேயமும்  இன்றைய உலகமயமாக்கலில் மெல்லக் கரைந்து போவது தெரிகிறதா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment