Saturday 21 July 2012

ஈழத்து வரலாற்று மங்கையர்


ஈழத்தமிழராகிய நாம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் மூதுரைக்கு இணங்க உலகெலாம் தழுவி வாழ்கிறோம். ஈழத்து மண்ணை மனத்திரையில் மீட்டிப்பார்ப்பதுடன் எங்கள் காலம் மெல்ல நகர்கிறது. 
ஈழவரலாற்றின் சுவட்டில் இருந்து ஈழத்து மங்கையர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடியுமா? இதிகாசங்களிலும், புராணங்களிலும், சங்கத்தமிழிலும் ஓரிரு இடங்களில் பெண்களைக் குறிப்பிட்டு இருப்பினும் அதனையும் நாம் கண்டு கொள்வதில்லை. இத்தகைய எமது போக்கு வருங்காலச் சந்ததியினர் நம் இனத்தை அடையாளம் காணமுடியாத நிலைக்கு இட்டுச்செல்லும். இந்தநிலை மாறவேண்டும். 
போன நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஈழத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் பெண்கள் மரியாதைக் குறைவாக நடாத்தப்பட்டார்கள். இது உலகவரலாறு கூறும் கசப்பான உண்மை. ஆனால் உலகெலாம் ஆணாதிக்கம் தலைவிரித்தாடிய பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஈழத்து பெண்கள் கலாச்சாரத்தின் விழுதுகளாக விளங்கியிருக்கிறார்கள். அன்று தமிழ்ச்சாதியை ஈழமங்கையர் என்னும் விழுதுகள் தாங்கி நிறுத்தியதால் இன்றும் எம் கலாச்சாரப் பண்புகளை இழக்காமல் இருக்கிறோம். அந்த விழுதுகள் எமக்குத் தந்து சென்ற கலாச்சார வரலாறு என்ன?
  Photo: Seedpearl

ஈழத்தின் முத்தும், மணியும், வாசனைத் திரவியங்களும் உலகமக்களை கவர்ந்து இழுத்த காலமது. ‘யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்டால் நல் முத்துக்களைப் பெறலாமென’ ஆசைகாட்டி எகிப்திய அரசனுக்கு புவனேகபாகு தூதும் அனுப்பினான். தூதன் எகிப்தின் தலைநகரான கைரோவை (Cairo) சென்றடைய முன்பு புவனேகபாகு இறந்ததால், யாழ்ப்பாண அரசு அப்படையெடுப்பில் இருந்து தப்பியது. முத்துச் சலாபத்திற்காக சிங்கள, கலிங்க, சாவக, தமிழக அரசர்கள் யாழ்ப்பாண அரசின் மேல் போர் தொடுத்த வண்ணம் இருந்தனர். போர்களில் ஆண்கள் மடிந்ததால் பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டதாலோ, வழி வழி வந்த வழக்கத்தாலோ, அரசின் ஆதரவாலோ பெண்கள் பல துறைகளிலும் வேலை செய்தனர். அது ஏன் என்பதற்கு வரலாற்று ஆசிரியர்களே விளக்கம் அளிக்க வேண்டும்.                                       


பதின்மூன்றாம், பதின்நான்காம் நூற்றாண்டுகளில் ஈழத்துக் கடற்கரையில் நாவாய்களும் மரக்கலங்களும் வந்து பொருள்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தன. [இதற்கு மார்க்கோ போலோவின் வரலாறும் சான்று பகர்கின்றது.] வெளிநாட்டு வணிகர் மட்டுமன்றி மரக்கோவைகளில் (கப்பல்) ஆடவரும் பெண்டிரும் வந்து இறங்கினர். அவர்கள் ஈழத்தின் முத்தையும், மணியையும், சங்கையும் அவற்றாலான நகைகளையும், பல வண்ணச் சேலைகளையும், அழகிய சித்திரங்கள் தீட்டிய மெல்லிய துணிகளையும், மருந்துகள், மூலிகைகள், யானைகள் போன்றவற்றையும் வாங்கிச் சென்றனர். இதனால் கடற்கரையோரம் பலாப்பழத்தில் ஈ மொய்த்தது போல் காட்சியளித்தது.

கடைகளில் ஈழத்துப் பெண்கள் பொருள்களை விலைகூறி விற்றார்கள். தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிய வெளிநாட்டவர்கள், அவற்றை காசுக்கு வாங்கியதோடு, பண்டமாற்றாகவும் வாங்கினர். அங்கிருந்த சில கடைகள் தாளிப்பனை பனையோலையால் செய்த குடை நிழற்கீழ் இருந்தன. ஒரு கடையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பொருட்களை ஒருத்தி வைத்து விற்றாள். அக்கடைக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு உணவு உண்ணும் பிளாவை, ‘தலைக்கு அணியும் அணிகலன்’ எனக் கூறி விசிறியுடன் விற்றாள். அவளது கடையில் பலவண்ணப் பாய்கள் இருந்தன. அப்பாய்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இன்னொரு பெண் முத்துக்களையும், மணிகளையும், பவளங்களையும், சங்கு மணிகளையும், கோர்த்து அழகிய நகைகள் செய்து கடையில் விற்றாள். அக்கடையில் மரப்பலகைகளில் பலவிதமான மாலை, காப்பு, தலையணி, காதணி, காலணி போன்றவற்றின் சித்திரங்கள், பலவண்ணங்கள் கொண்டு கீறி இருந்தன. அவற்றைப் பார்த்து விரும்பிக் கேட்போருக்கு அவற்றைப்போல் செய்து கொடுத்தாள். அங்கே அவற்றைச் செய்து கொடுக்க சில பெண்கள் வேலை செய்தனர்.

பல மொழிகள் தெரிந்த பெண்கள் தமக்குத் தெரிந்த மொழிகளை கிளி, சொல்லறிபுள் (மைனா) போன்ற பறவைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவ்வவ் மொழி பேசுவோருக்கு அவற்றை விற்றார்கள். பெண்களில் சிலர் மொழி பெயர்ப்பாளராயும், சிலர் ஒற்றர்களாயும் அரசுக்குக் கீழ் வேலை செய்தனர். மங்கை ஒருத்தி காவலனுடன் சென்று வெளிநாட்டு வணிகரிடம் சுங்கவரி அறவிட்டாள்.
சரஸ்வதி மகாலயம் என்று ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. [இன்றும் ஈழத்து சில  பாடசாலைகளை வித்தியாலயம் (உ +ம்: நயினாதீவு மகாவித்தியாலயம்) என்று நாம் அழைப்பது இதன் வழியொட்டியே என நினைக்கிறேன்.] இந்த சரஸ்வதி மகாலயத்தில் ‘வான சாஸ்திரம், வர்ம சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், நயன சாஸ்திரம், கணித சாஸ்த்திரம், பரத சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களை கற்பித்தார்கள். குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தை பாலரோகம் (children disease), வாதரோகம் (rheumatism), பித்த ரோகம் (gall-bladder disease), சுர ரோகம் (heat disease), சன்னி ரோகம்(delirium), வலி ரோகம் (epilepsy), சல ரோகம் (diabetes), மேக ரோகம் (venereal disease), குட்ட ரோகம் (leprosy) எனப்பல பிரிவுகளாகப் பிரித்துப் படிப்பித்தார்கள். வைத்திய சாஸ்திரத்தை ‘திருவி’ என்பவள் கற்பித்தாள் என வீரமாதேவியின் நாட்குறிப்புச் சொல்கிறது. 
“விருப்புடன் வைத்திய சாஸ்திரம் விளக்கும்
திருவியெனும் தையல் துருவித் தெளிந்து
பயன்மரம் உள்ளூர் பழுத்தது போல 
நயனுடையவெல்லாம் நயந்தே சொல்லப்
பயனடைந்தார் ஆங்கே பயின்றோர் தாமே”  
                                            - (வீரமாதேவி நாட்குறிப்பு ) 
சுற்றிவரப் பூந்தோட்டத்தால் அமைந்த ‘பல்லவ விசிகை’ [விசிகை - வைத்தியசாலை] மருத்துவ ஆராய்ச்சி கூடமாக விளங்கியது. மருத்துவ ஆராய்ச்சியை பன்னிருவர் கொண்ட குழு செய்தது. அதில் ‘உசிதன்’ என்பவன் ‘பிரமாணிகனாக’ (ஆணை இடுபவன்) இருக்க, அவன் மனைவி ‘கமலபாணி’ என்பவள் ‘பொதுவியாக’ இருந்தாள். அதாவது ஆராச்சியின் முடிவை யாருக்கும் சார்பற்ற முறையில் தீர்மானிப்பவளாகத் திகழ்ந்தாள். கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்த போதும், கணவன் இன்ன ஆராய்ச்சி செய்யவேண்டும் எனக்கட்டளையிட, மனைவி ஆராய்ச்சியின் முடிவை நிர்ணயிப்பவளாக விளங்கியது ஈழத்தமிழர் நாகரிகத்தின் செழுமையைக் காட்டுகிறது. 
தாமனை
பயணம் செய்வோர் குதிரையிலும், தேரிலும், பல்லக்கிலும் சென்றதை வரலாற்றால் நாம் அறிவோம். ஆனால் ஈழத்தின் தெருவிலே யானை சிறு வீட்டையே இழுத்துச் சென்றது. அந்தத் தாமனை உணவுப் பொருட்களையும், உடைகளையும், குழந்தைகள் தூங்கும் கட்டிலையும், ஆயுதங்களையும், யானைக்கு வேண்டிய தீனையும் (உணவு), சுமந்து சென்றது. (பயணம் செய்யும் வீடு - ‘தாமனை’, என வீரமாதேவி குறிப்பிடுகிறாள்). ‘கவிகை‘ என்பவள் யானையால் தாமனையை ஓட்டிச் சென்ற கணவனை குழந்தையுடன் தாமனையுள் உறங்க விட்டு, யானைக்கு நெல்லும் கரும்பும் கொடுத்து களைப்பாற விட்டாள்.    

மதயானை கட்டும் மன்னா
          எனை அழைத்துப் போனால்
இளம்பிடியைக் கட்டேனோ
          உனை ஒல்லக் கூடாதோ”
                                - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                      - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
என்பது ஈழத்து நாட்டுப் பாடல். இப்பாடலைப் பாடியவள், ‘இளம் பிடியைக் கட்டமாட்டேனா?’,  எனக் கேட்க, கவிகை பெரும் களிற்றையே கட்டி தீனி போட்டிருக்கிறாள். (பிடி - பெண்யானை, களிறு - ஆண்யானை).
அத்தாமனைகள் பணக்காரரிடமே இருந்தன. அரசுக்குச் சொந்தமான தாமனையில், மருத்துவர்கள் சென்று மூலிகை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் அதில் நோயாளியையும், ஆராய்ச்சிக்கு வேண்டிய பொருட்களையும் ஏற்றிச் சென்றனர்.
ஈழத்தமிழர் நாகரிகம் 14ம் நூற்றாண்டில் எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதற்கு வீரமாதேவி கூறிய ஈழத்து வரலாற்று மங்கையரே ஆதாரம். நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் வாழ்ந்து வரலாறாய் நிற்கும் அந்த மங்கையரை வாழ்த்துவோம்.

[பின்குறிப்பு: பாண்டியப் பேரரசின் மன்னனாக வீற்றிருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி பி 1268 - கி பி 1311), மகள் வீரமாதேவி (கிபி 1311) இலங்கை வந்து புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்தாள். அவள் எழுதிய சுயசரிதையில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளாள்] 
இனிதே, 
தமிழரசி.
(1997ம் ஆண்டு எழுதியது, MIOT முத்தமிழ்மாலை மலரில் 2001லும், 2007ல் சுடரொளியிலும் வெளிவந்தது.)

No comments:

Post a Comment