குறள்:
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் - 580
பொருள்:
மதிக்கத்தக்க கண்ணோட்டமெனும் நாகரிகத்தை விரும்புபவர் தமக்கு நஞ்சு ஊற்றுவதைக் கண்டும் அந்த நஞ்சை உண்டு நிறைவடைவர்.
விளக்கம்:
உலக உயிர்கள் யாவும் ஏதோ ஒருவகையில் அன்புக்கு அடிபணிகின்றன. அந்த அன்பு மற்ற உயிர்களிடத்தில் மனநெகிழ்ச்சியை உண்டாக்கின்றது. அதனைக் கண்ணோட்டம் என்றும் கூறுவர். நாகரீகம் என்றால் என்ன? மனிதமனத்தின் பண்பாட்டால் விளைந்த கண்ணோட்டமே நாகரீகமாகும். அதாவது மனிதமனத்தின் மிக உயர்ந்த பண்பட்ட நிலையை நாகரீகம் என்றனர்.
அந்த நாகரீகத்தை உலகுக்கு அளித்தவர்கள் தமிழர்களாகிய நாகர்களே. நாகரிகம், நாகரீகம் ஆகிய இரு சொற்களையும் தற்காலத் தமிழில் சொல்கிறோம். நாகர் + இகம் = நாகரிகம். இகம் என்பது இவ்வுலகம்/ இம்மை எனும் கருத்தைத் தரும். நாகர் + ஈகம் நாகரீகம் ஆகப்புணரும். ஈகம் என்றால் விருப்பம். நாகர்களால் விரும்பப்பட்டவை நாகரீகம் ஆனது. ஆதலால் நாகரீகம் என்னும் சொல்லே அதன் தன்மையைச் சொல்கிறது. பகட்டான ஆடை அணிகலங்களை அணிந்து ஒய்யாரமாக நடத்தலே நாகரீகம் என எண்ணுவது தமிழர் பண்பாட்டிற்கு முரணானது. கூழைக்குடித்தாலும் கந்தை அணிந்தாலும் மனிதப்பண்பை இழக்கக் கூடாது.
ஒருவரின் தலைமைப் பொறுப்பும், புகழ், பதவி, பொருள் போன்றனவும் அவர் அன்பு செலுத்தும் சிலருக்கே பொறாமையை ஏற்படுத்தும். பொறாமையின் காரணத்தால் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உயிரையும் எடுக்கத் துணிவர். அவரின் கண்முன்னே நஞ்சை ஊற்றி குடி எனக்கொடுப்பர், பொறாமை அவர்களின் மனிதப் பண்பை எரிப்பதால் அப்படிச் செய்வர்.
யார் கொடுத்தால் விருப்புடன் நஞ்சைக் உண்பர் என்பதை மிக தெளிவாக நற்றிணை எடுத்துக் கூறியுள்ளது.
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரீகர்" - (நற்றிணை: 355)
நண்பர்[நட்டோர்] ஒருவர் முன்னுக்கு இருந்து நஞ்சை ஊற்றிக் கொடுத்தால் சிறந்த நாகரீகம் உள்ளவர் அதனை உண்பர் என்கிறது.
அன்பெனும் மனநெகிழ்ச்சியாகிய கண்ணோட்டம் உடையவர் தன்னால் விரும்பப்படுபவர் தரும் நஞ்சை மிக்க மகிழ்ச்சியோடு எடுத்து குடித்து அமைதியடைவர். நஞ்சு இடுவதைக் கண்டும் பொறுத்திருக்கும் பொறுமை - அதை எடுத்து உண்ணும் துணிபு - உண்ட பின்பும் தன் உயிர் வேதனையைப் புலப்படுத்தாது இருக்கும் அமைதி என்னும் படி நிலைகளை அடைய மனம் பண்பட்டு இருத்தல் அவசியம். அப்படி பண்பட்ட மனமுடையோரே நாகரிகம் உடையோராவர். அந்த மனநிலை எமக்கு வருமானால் நாமும் நல்ல நாகரீகம் உடையவராக வாழலாம். கண்ணோட்டம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுதலே இக்குறளின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment