Sunday, 29 July 2012

ஆறுமோ! இந்த வலி!


தீருமோ இந்த வடு!
தெருவிற் கிடந்து புரண்டு
பாராய்! என் செல்வமென்றே
பாவிபடு துயரணைத்தும் 
நேராய் சென்று தாக்காதோ!
நைந்து அழ மாட்டாமல்
ஊராரும் திகைத்தனரே!
உருக்குலைந்த பண்டமாய்
போராரின் பிண்டமாய்
போயொழிந்த வாழ்வுதனை
வாரி அணைத்தழுவதற்கு 
வடியாத கண்ணீரை
சீராய் எடுத்தே நல்
செங்குருதிச் சேர்த்து
நீராய் பருகிடுவீர்!
நீள் நிலத்தீர்!
நீரும் நிலமும் காற்றும் வானும் 
நெருப்பாய் கனன்று எரியினும்
ஆறுமோ! இந்த வலி!
கூறுமோ! பதில் இவ்உலகு!
இனிதே,
தமிழரசி.

Saturday, 28 July 2012

தோல் அழகு 5


நுண்ணுணர்வுள்ள தோல்

மனிதரில் 50% ஆனோர் தோலின் நுண்ணழற்சித் தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். நுண்ணுணர்வு உடைய தோலே அழற்சிக்கு உள்ளாகின்றது. காலநிலை மாற்றமும், சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் ஒவ்வாமையும், நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஒவ்வாமையும் கூட நுண்ணுணர்வு உள்ள தோலின் அழற்சிக்கு காரணமாக இருக்கின்றன. இவற்றுக்கும் மேலாக தோலைச் சுத்தம் செய்யவும், பாதுகாக்கவும் பாவிக்கும் சோப், கிறீம் போன்றவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் தோலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. எல்லாவிதமான இரசாயனப் பொருட்களும் எல்லோருடைய தோலுக்கும் ஒத்துவராது. 

எனவே நுண்ணுணர்வுள்ள தோல் உள்ளவர்கள் அவர்களது தோலுக்கு அழற்சி ஏற்படுத்தும் இராசயனப் பொருட்கள் சேர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு ஏற்படுத்தும் அழற்சியின் அளவு மற்றவருக்கு இல்லாமல் இருக்கும். எனவே ஒருவர் பாவிக்கிறார் என்று அதே பொருளை நீங்களும் வாங்கிப் போடாதீர்கள். சிலவேளை அது உங்களுக்கு அழற்சியைத் தரக்கூடும். அழகுசாதனப் பொருட்கள் உங்கள் தோலில் அழற்சியை ஏற்படுத்துவதைக் கண்டால் அப்பொருட்களை வாங்கும் பொழுது, அதில் என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து எந்த இராசாயனப் பொருள் உங்களுக்கு அழற்சியைத் தருகின்றது என்பதை அறிக. புதிய பொருளாக இருந்தால் தோலின் மிகச்சிறிய இடத்தில் பூசி, அழற்சி ஏற்படுகின்றதா என்பதை பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.

இத்தகைய தோல் உள்ளவர்கள் எப்போதும் சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். கொதிநீரில் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. 

Friday, 27 July 2012

அடிசில் 31

முருங்கக்காய்க் கறி

                                            - நீரா -















தேவையான பொருட்கள்:
முருங்கக்காய்  -  400 கிராம்
வெங்காயம்  -  1 
பச்சை மிளகாய்  -  2 
மிளகாய்த்தூள்  -  2 தேக்கரண்டி
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½தேக்கரண்டி
வெந்தயம்  - ½தேக்கரண்டி
தட்டிய உள்ளிப் பல்லு  -  4/5
எண்ணெய்  -  3 தேக்கரண்டி
பால்  -  1 மேசைக் கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1.  முருங்கக்காயின் தோலின் நாரை வார்ந்து, மூன்று அங்குல நீளத் துண்டுகளாக வெட்டி கழுவிக் கொள்க.
2.  வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக வெட்டிக் கொள்க.
3.  ஒரு பாத்திரத்தினுள் வெட்டிய முருங்கக்காய், வெங்காயம், பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை பால் தவிர்ந்த மற்றப் பொருட்களை இட்டு முருங்கக்காயை மூடும் அளவிற்கு தண்ணீர் விட்டு, கலந்து கொள்க.
4.  அப்பாத்திரத்தை அடுப்பில் வைத்து மெல்லிய நெருப்பில் வேகவிடவும்.
5.  முருங்கக்காய் வெந்ததும் பாலும், கறிவேப்பிலையும் சேர்த்து வற்றிவரும் பொழுது இறக்கவும்.

Wednesday, 25 July 2012

முத்திக் கனியே! என் முத்தமிழே!!



பிறப்பைக் கண்டு மகிழும் நாம் இறப்பைக் கண்டு துவள்கின்றோம். காரணம் என்ன? நாம் பார்த்துப்  பேசிப் பழகி, அன்பு செலுத்தி மகிழ்ந்த ஒருவர், நிரந்தரமாக எம்மைவிட்டு இல்லாது ஒழிகின்றார். மீண்டும் எப்போ, எப்பிறவியில் அவரின் அன்பை பண்பை நாம் காண்போம்? அந்த ஏக்கத்தால் எமக்கு மிஞ்சுவதோ வெறுமை. மனவெறுமையில் நாம் தவிப்பது நன்றா? அது எமக்கு என்ன நன்மையைத் தரும்? நாம் அதனை சிந்திப்பதில்லை. அன்பும் பாசமும் எம் சிந்தையின் தெளிவை சிதறடித்து விடுகின்றது.

பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு. பிறந்தது யாவும் இறக்கும். அதுவே இயற்கையின் நியதி. உலக இயற்கையை இயக்கும் சக்தி எம்மையும் இயக்குகின்றது. அச்சக்தி அழிவற்றது.  நாம் அதனை அடிக்கடி மறந்து மமதையில் ஆழ்கின்றோம். அச்சக்கி எம்முள் சேர்ந்து கொள்வதை நாம் பிறப்பு என்கிறோம். அச்சக்தியின் இயக்கத்தாலேயே இயங்குகிறோம். எம் இயக்கவிசை நின்றதும் நாம் ஆடி அடங்கிய பம்பரமாக வீழ்கிறோம். அதனை நாம் இறப்பு என்கிறோம். 

எம்மை இயக்கும் அவ்வதிசய சக்தியை இறைவன் என அழைக்கிறோம். இறைவனாகிய கண்ணுதலான் உயிர்களை என்ன எல்லாம் செய்விக்கின்றான் என்பதையும், அவன் அப்படிச் செய்வதை அறியும் திறத்தையும் அவனே எமக்கு காட்ட வேண்டும் என்பதையும் திருநாவுக்கரசர்

“ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
          அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
          உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே
          பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே 
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
          காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே

என தேவாரத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

அவனே தன்னை எமக்குக் காட்டுவான் என நாம் சும்மா இருக்கலாமா? அதற்கான தகுதியை நாம் அடையவேண்டாமா? அதற்கு வழி என்ன? ஒன்றைத் தேடினால் தானே அது கிடைக்கும். அழிவற்ற அப்பரம்பொருளை நாம் எப்படித் தேடுவது. தேவர்கள் போல் நாமும் அமுதம் அருந்தலாமா? 

தேவர்களாலும் பரம்பொருளை அறிய முடியவில்லை. ஆதலால் அமுதத்தைவிட சிறந்த பொருள் வேறு ஏதாவது இருக்கின்றதா? இருக்கின்றது. அது ஓர் அற்புதக்கனி. எழுதியவர் யார் என்பதை அறிய முடியாத ‘தமிழ்விடு தூது' அமுதத்தை விடச்சிறந்தது, முத்திக்கனி என்கின்றது. சிந்தையுள் சிவன் இருப்பான். சிந்ததையே புத்தி. புத்தியை மெருகூட்ட முத்தமிழை தேடி உண்ணுங்கள். 

தமிழ்விடு தூது, முத்திக் கனியான முத்தமிழை உண்டால் இறப்பை  வென்று இறைவனை அடையலாம் என்கின்றது.

“தித்திக்கும் தெள்ளமுதே தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்”

என ஒருமுறை சென்று இறைவனை என்னிடம் அழைத்து வா என்கிறது. நாமும் முத்தமிழால் முத்திக்கனி சுவைப்போமா?
இனிதே,
தமிழரசி.

Tuesday, 24 July 2012

வாழும்வழி நன்குணர்ந்த 'மாமனிதன்'


முப்பதாம் ஆண்டு நினைவஞ்சலி
25 - 07 - 2012
தோற்றம்:12 - 03 1914           மறைவு: 25 - 07 - 1982
புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் வாழ்ந்த முத்துக்குமார் நாகம்மை தம்பதியினரின் மகனாய்ப் பிறந்து வளர்ந்து, புங்குடுதீவு வல்லன்/மடத்துவெளி இராமலிங்கம் தம்பிப்பிள்ளையின் மகள் மகேஸ்வரிதேவியை மணந்து, இல்லறத்தின் பயனாய் பெற்ற மகளுக்கு தமிழரசி எனப்பெயரிட்டு அழைத்தவரும், இலங்கையின் பல இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து, பல பேரறிஞர்களை உருவாக்கியவருமான அமரர் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழுபெருந் தீவகமும் ஏத்தெடுப்ப
          இனிதோங்கி எழுந்த நல்லோன்
வாழும்வழி நன்குணர்ந்த ‘மாமனிதன்’
          முத்துடையார் மரபில் வந்த
ஆழமிகு பேரறிஞன் ஆறுமுகன்
           பண்டிதனெம் அண்ணல் நாமம்
ஏழ்பிறப்பும் மறப்போமோ எம்இனிய
            வழிகாட்டி! குருவே! வாழி!
  • அவரின் மாணவன் வித்துவான் சி ஆறுமுகம்.

பண்டிதர் என்றால் அவர் ஒருவர் தான்
பாண்டித்தியம் உடையவரும் அவரே தான்
புங்குடுதீவு தந்த ஞானச்செல்வர்களில்
புகழ் பூத்த பொது நலத்தொண்டன்
சிறியேனைப் பெரியோன் ஆக்கினார்
சேவையே வாழ்வாக வாழ்ந்தார்
பண்டிதமணி என்றால் போதும் 
பலமுறையும் பக்தி ததும்ப வணங்குவார்
இளையப்பர் என்றால் இன்பம் ஓங்குவார்
இதயம் நிறைந்த இன்ப ஆசான்
குரு சீட பரம்பரைக்கோர் 
கோதிலாச் சீடர் அவர்
சிந்திப்பார் தெளிந்து பேசுவார்
வந்திப்பார் வாழ்பவரை வாழ்த்துவார்
எந்தப் பொருளையும் எளிதாய் விளக்குவார்
எதிலும் பற்றில்லா இல்லற ஞானி
இறுதிக் காலத்தில் இதயத்தில் என் கைவைத்து
இன்பமாய் உணர்வு தந்தார்
கருகிக்கருகி சிவப்பேற வேகின்ற கட்டையிலே
உருகிக் கிடக்கின்ற போதிலும்
உன் அன்பை மறப்பேனோ உத்தமனே!
உலகம் உள்ளளவும் உன்புகழ் வாழ்க!
  • அவரின் மாணவன் திருப்பூங்குடி ஆறுமுகம்.

எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய்பொறுக்கும்
அத்தன்மைத் தாயதொரு ஆசானை நாமிழந்தோம்!
கற்றவரை மதித்துக் காசினியில் ஏற்றிவைக்கும்
நற்றமிழில் வல்லோனை நாமிழந்து விட்டோமே!
இனத்தார் துயர்துடைக்க எந்நேரமும் முந்தும்
மனத்தானை எண்ணி மனங்கலங்கி நிற்கின்றோம்.
ஈயும் உளங்கொண்டு இரவா உளம் படைத்த
தூயோனை எண்ணிமிகத் துயருழந்து வாடுகிறோம்.
  • அவரின் மாணவி பண்டிதை புனிதவதி பாலசுந்தரம்.

வித்துவனாய் பண்டிதனாய் விரிக்கும் நூல்கள்
          விளக்கும்போக்கில் விரிவுரையின்
தத்துவனாய்த் தர்க்கநூல்கள் சார்ந்தவனாய்
           தனித்துவமாய் தகைசான்ற
அற்புதமாம் ஆய்வுரைகள் ஆற்றும்ஆறு
            அருள்முகமாய் ஆண்டமேனி
பொற்புறவே புகழுடம்பாய் புனிதபாதம்
            போந்ததுவே பொலிவுதானே.
  • அவரின் மாணவன் கவிஞர் நாக சண்முகநாதபிள்ளை.

எனது சிறிய தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களிடம் நான் படித்தேன். எனது சிறுபிராயத்தில் அவர் அடிக்கடி எமக்குச் சொன்ன அவரது பொன்னான சொற்றொடர் ஒன்றை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன். 
“பணத்தை செலவு செய்தாலும் மனத்தை செலவு செய்யாதே
மனம் வாசனையானால் வாய்ப்பது முத்து” 
பணம், பொருள் போன்றவை கள்வராலும், நயவஞ்சகராலும் எம்மிடமிருந்து சூரையாடப்படலாம். அதை நினைத்து நினைத்து வருந்தி மன உளைச்சலால், மனதை பேதலிக்கச் செய்து, மனநோயாளர்களாக நாம் ஆகிவிடக் கூடாது. நம் மனதில் வஞ்சகம் பொறாமை போன்ற அழுக்குகள் சேர்ந்து கெட்ட வாசம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மனத்தை அன்பு, கருணை போன்ற நல்லபண்புகளால் நிறைத்து எந்நேரமும் வாசமுள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்திருப்போருக்கு மன அழுத்தங்கள் இருப்பதில்லை. அவர்களது வாழ்க்கை முத்தாய் ஒளிரும். இப்படிச் சொல்லி எம்மை வாழ்வாங்கு வாழ வழிநடத்திய அவர் ‘ஈழத்து முத்தாவார்’.
  • அவரின் மாணவி மங்கையற்கரசி (காந்தி) மாணிக்கவாசகர்.

இனிதே,
தமிழரசி.

Monday, 23 July 2012

குறள் அமுது - (39)


குறள்:
“அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்”                           - 768

பொருள்:
படைக்கு மாற்றானைச் சென்று தாக்கும் வீரமும் மாற்றான் படைவந்து தாக்கினால் தாங்கும் ஆற்றலும் இல்லை எனினும் தோற்றப் பொலிவால் படை பெருமை பெறும்.
விளக்கம்:
தன்னை எதிர்ப்பவரைச் சென்று தாக்கி வீரத்துடன் போர்புரிதல் அடல்தகை எனப்படும். எம்மை பிறர் வந்து தாக்கினால் அவர்களை எதிர்த்து தாக்கமுடியாது, அவர்களது தாக்குதலை தாங்கும் சக்தியையும் இழந்து நிற்கும் இயலாமையை திருவள்ளுவர் அடல்தகையும் ஆற்றல் இல் எனினும்’ எனக் கூறுகிறார். 
சிலர் நல்ல உயரமாகவும் மொத்தமாகவும் பார்ப்பதற்கு கொடூரமானவராகவும் இருப்பர். அப்படிபட்டோரிடம் அவரை எதிர்த்துத் தாக்குபவரை திருப்பித் தாக்கும் வீரமும் எதிரி கொடுக்கும் அடியை தாங்கிக் கொள்ளும் உடல்  உறுதியும் இல்லாதிருக்கலாம். ஆனால் அத்தகையோரின் தோற்றப்பொலிவைக் கண்டோர்  தாக்குவதற்கு தயங்குவர். அவரது கோழைத்தனம் எதிரிக்குத் தெரியாதபடியால் அவரது தோற்றமே எதிரியைப் பயந்து நடுங்கி அலறவைக்கும். இது போன்று, படையின் தோற்றப்பொலிவை படைத்தகை என்பர். 
தாக்க வருபவர் எம்மை தாக்காது தடுக்க அந்த தோற்றப்பொலிவு ஆயுதமாகப் பயன்படும். ஈழத்தில் உள்ள எம் உறவுகள் பிறரைத் தாக்கும் அடல்தகை இல்லாது தம்மைத் தாக்குபவரை எதிர்த்து நிற்கும் ஆற்றலும் அற்று இருக்கிறார்கள். புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ள நாம் ஒன்றாக இணைந்து எமது தோற்றப் பொலிவை உலகுக்குக் காட்ட வேண்டும். நாம் ஒன்றுகூடுவதால் வரும் தோற்றப்பொலிவே எம் உறவுகளை மாற்றார் தாக்காது தடுக்கும் ஆயுதமாகப் பயன்படும். 
வீரத்துடன் போர்புரிதல், எதிர்த்து நிற்கும் ஆற்றல் இரண்டும் இல்லை என்றாலும் தோற்றப் பொலிவால் ஒற்றுமையால் பயன் பெறலாம். 

Sunday, 22 July 2012

பாட்டி! பாட்டி! எங்கே போறாய்? - பகுதி 1

ஆசைக்கவிதைகள் - 38

நாட்டுப் பாடல்கள் யாவும் அன்றைய தமிழரின் வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் தாம் நடந்து செல்லும் நடைப் பயணத்தின் களைப்புத் தெரியாது இருப்பதற்காக வழிநடைப் பாடல்களைப் பாடிச்சென்றனர். அப்பாடல்கள் நொடிகளாகவோ கேள்வி பதிலாகவோ இருந்தன. பெரும்பாலும் சிறுவர்களுடன் நடந்து செல்பவர்கள் எப்படிப்பாடுவர் என்பதை இந்த ஆசைக்கவிதை காட்டுகிறது. முதியோர் சொல்வதில் இருந்து சிறுவர்கள் கேள்வி கேட்பர். சிறுவர்களின் கேள்விக்கு முதியோர் பதில் சொல்வர். அந்தக் கேள்வி பதில் தொடர்கதையாய் நீண்டு செல்லும். பாவற்குளத்து நாட்டுப்பாடலான இப்பாடலும் அப்படிக் கேள்வி பதிலாய் நீண்டு சென்ற ஒரு பாடலே. 

பாட்டி! பாட்டி!
எங்கே போறாய்?
குளத்துக்குப் போறன் 
என்ன குளம்?
பாகற்குளம்
என்ன பாகல்?
குருவிப் பாகல்
என்ன குருவி?
ஊர்க் குருவி
என்ன ஊர்?
மணி ஊர்
என்ன மணி?
கண் மணி
என்ன கண்?
நெற்றிக் கண்
என்ன நெற்றி?
பிறை நெற்றி
என்ன பிறை?
வளர் பிறை
என்ன வளர்?
கரு வளர்
என்ன கரு?
முட்டைக் கரு
என்ன முட்டை?
மீன் முட்டை 
என்ன மீன்?
குளத்து மீன்
என்ன குளம்?
இந்தக் குளம் / பாகற்குளம்.

                                         -  நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                               - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 


எப்படி இந்த நாட்டுப்பாடல் தொடர்கிறது என்பதை அடுத்த ஆசைக்கவிதையில் பார்ப்போம்.
இனிதே,
தமிழரசி.

Saturday, 21 July 2012

ஈழத்து வரலாற்று மங்கையர்


ஈழத்தமிழராகிய நாம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் மூதுரைக்கு இணங்க உலகெலாம் தழுவி வாழ்கிறோம். ஈழத்து மண்ணை மனத்திரையில் மீட்டிப்பார்ப்பதுடன் எங்கள் காலம் மெல்ல நகர்கிறது. 
ஈழவரலாற்றின் சுவட்டில் இருந்து ஈழத்து மங்கையர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடியுமா? இதிகாசங்களிலும், புராணங்களிலும், சங்கத்தமிழிலும் ஓரிரு இடங்களில் பெண்களைக் குறிப்பிட்டு இருப்பினும் அதனையும் நாம் கண்டு கொள்வதில்லை. இத்தகைய எமது போக்கு வருங்காலச் சந்ததியினர் நம் இனத்தை அடையாளம் காணமுடியாத நிலைக்கு இட்டுச்செல்லும். இந்தநிலை மாறவேண்டும். 
போன நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஈழத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் பெண்கள் மரியாதைக் குறைவாக நடாத்தப்பட்டார்கள். இது உலகவரலாறு கூறும் கசப்பான உண்மை. ஆனால் உலகெலாம் ஆணாதிக்கம் தலைவிரித்தாடிய பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஈழத்து பெண்கள் கலாச்சாரத்தின் விழுதுகளாக விளங்கியிருக்கிறார்கள். அன்று தமிழ்ச்சாதியை ஈழமங்கையர் என்னும் விழுதுகள் தாங்கி நிறுத்தியதால் இன்றும் எம் கலாச்சாரப் பண்புகளை இழக்காமல் இருக்கிறோம். அந்த விழுதுகள் எமக்குத் தந்து சென்ற கலாச்சார வரலாறு என்ன?
  Photo: Seedpearl

ஈழத்தின் முத்தும், மணியும், வாசனைத் திரவியங்களும் உலகமக்களை கவர்ந்து இழுத்த காலமது. ‘யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்டால் நல் முத்துக்களைப் பெறலாமென’ ஆசைகாட்டி எகிப்திய அரசனுக்கு புவனேகபாகு தூதும் அனுப்பினான். தூதன் எகிப்தின் தலைநகரான கைரோவை (Cairo) சென்றடைய முன்பு புவனேகபாகு இறந்ததால், யாழ்ப்பாண அரசு அப்படையெடுப்பில் இருந்து தப்பியது. முத்துச் சலாபத்திற்காக சிங்கள, கலிங்க, சாவக, தமிழக அரசர்கள் யாழ்ப்பாண அரசின் மேல் போர் தொடுத்த வண்ணம் இருந்தனர். போர்களில் ஆண்கள் மடிந்ததால் பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டதாலோ, வழி வழி வந்த வழக்கத்தாலோ, அரசின் ஆதரவாலோ பெண்கள் பல துறைகளிலும் வேலை செய்தனர். அது ஏன் என்பதற்கு வரலாற்று ஆசிரியர்களே விளக்கம் அளிக்க வேண்டும்.                                       


பதின்மூன்றாம், பதின்நான்காம் நூற்றாண்டுகளில் ஈழத்துக் கடற்கரையில் நாவாய்களும் மரக்கலங்களும் வந்து பொருள்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தன. [இதற்கு மார்க்கோ போலோவின் வரலாறும் சான்று பகர்கின்றது.] வெளிநாட்டு வணிகர் மட்டுமன்றி மரக்கோவைகளில் (கப்பல்) ஆடவரும் பெண்டிரும் வந்து இறங்கினர். அவர்கள் ஈழத்தின் முத்தையும், மணியையும், சங்கையும் அவற்றாலான நகைகளையும், பல வண்ணச் சேலைகளையும், அழகிய சித்திரங்கள் தீட்டிய மெல்லிய துணிகளையும், மருந்துகள், மூலிகைகள், யானைகள் போன்றவற்றையும் வாங்கிச் சென்றனர். இதனால் கடற்கரையோரம் பலாப்பழத்தில் ஈ மொய்த்தது போல் காட்சியளித்தது.

கடைகளில் ஈழத்துப் பெண்கள் பொருள்களை விலைகூறி விற்றார்கள். தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிய வெளிநாட்டவர்கள், அவற்றை காசுக்கு வாங்கியதோடு, பண்டமாற்றாகவும் வாங்கினர். அங்கிருந்த சில கடைகள் தாளிப்பனை பனையோலையால் செய்த குடை நிழற்கீழ் இருந்தன. ஒரு கடையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பொருட்களை ஒருத்தி வைத்து விற்றாள். அக்கடைக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு உணவு உண்ணும் பிளாவை, ‘தலைக்கு அணியும் அணிகலன்’ எனக் கூறி விசிறியுடன் விற்றாள். அவளது கடையில் பலவண்ணப் பாய்கள் இருந்தன. அப்பாய்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இன்னொரு பெண் முத்துக்களையும், மணிகளையும், பவளங்களையும், சங்கு மணிகளையும், கோர்த்து அழகிய நகைகள் செய்து கடையில் விற்றாள். அக்கடையில் மரப்பலகைகளில் பலவிதமான மாலை, காப்பு, தலையணி, காதணி, காலணி போன்றவற்றின் சித்திரங்கள், பலவண்ணங்கள் கொண்டு கீறி இருந்தன. அவற்றைப் பார்த்து விரும்பிக் கேட்போருக்கு அவற்றைப்போல் செய்து கொடுத்தாள். அங்கே அவற்றைச் செய்து கொடுக்க சில பெண்கள் வேலை செய்தனர்.

பல மொழிகள் தெரிந்த பெண்கள் தமக்குத் தெரிந்த மொழிகளை கிளி, சொல்லறிபுள் (மைனா) போன்ற பறவைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவ்வவ் மொழி பேசுவோருக்கு அவற்றை விற்றார்கள். பெண்களில் சிலர் மொழி பெயர்ப்பாளராயும், சிலர் ஒற்றர்களாயும் அரசுக்குக் கீழ் வேலை செய்தனர். மங்கை ஒருத்தி காவலனுடன் சென்று வெளிநாட்டு வணிகரிடம் சுங்கவரி அறவிட்டாள்.
சரஸ்வதி மகாலயம் என்று ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. [இன்றும் ஈழத்து சில  பாடசாலைகளை வித்தியாலயம் (உ +ம்: நயினாதீவு மகாவித்தியாலயம்) என்று நாம் அழைப்பது இதன் வழியொட்டியே என நினைக்கிறேன்.] இந்த சரஸ்வதி மகாலயத்தில் ‘வான சாஸ்திரம், வர்ம சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், நயன சாஸ்திரம், கணித சாஸ்த்திரம், பரத சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களை கற்பித்தார்கள். குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தை பாலரோகம் (children disease), வாதரோகம் (rheumatism), பித்த ரோகம் (gall-bladder disease), சுர ரோகம் (heat disease), சன்னி ரோகம்(delirium), வலி ரோகம் (epilepsy), சல ரோகம் (diabetes), மேக ரோகம் (venereal disease), குட்ட ரோகம் (leprosy) எனப்பல பிரிவுகளாகப் பிரித்துப் படிப்பித்தார்கள். வைத்திய சாஸ்திரத்தை ‘திருவி’ என்பவள் கற்பித்தாள் என வீரமாதேவியின் நாட்குறிப்புச் சொல்கிறது. 
“விருப்புடன் வைத்திய சாஸ்திரம் விளக்கும்
திருவியெனும் தையல் துருவித் தெளிந்து
பயன்மரம் உள்ளூர் பழுத்தது போல 
நயனுடையவெல்லாம் நயந்தே சொல்லப்
பயனடைந்தார் ஆங்கே பயின்றோர் தாமே”  
                                            - (வீரமாதேவி நாட்குறிப்பு ) 
சுற்றிவரப் பூந்தோட்டத்தால் அமைந்த ‘பல்லவ விசிகை’ [விசிகை - வைத்தியசாலை] மருத்துவ ஆராய்ச்சி கூடமாக விளங்கியது. மருத்துவ ஆராய்ச்சியை பன்னிருவர் கொண்ட குழு செய்தது. அதில் ‘உசிதன்’ என்பவன் ‘பிரமாணிகனாக’ (ஆணை இடுபவன்) இருக்க, அவன் மனைவி ‘கமலபாணி’ என்பவள் ‘பொதுவியாக’ இருந்தாள். அதாவது ஆராச்சியின் முடிவை யாருக்கும் சார்பற்ற முறையில் தீர்மானிப்பவளாகத் திகழ்ந்தாள். கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்த போதும், கணவன் இன்ன ஆராய்ச்சி செய்யவேண்டும் எனக்கட்டளையிட, மனைவி ஆராய்ச்சியின் முடிவை நிர்ணயிப்பவளாக விளங்கியது ஈழத்தமிழர் நாகரிகத்தின் செழுமையைக் காட்டுகிறது. 
தாமனை
பயணம் செய்வோர் குதிரையிலும், தேரிலும், பல்லக்கிலும் சென்றதை வரலாற்றால் நாம் அறிவோம். ஆனால் ஈழத்தின் தெருவிலே யானை சிறு வீட்டையே இழுத்துச் சென்றது. அந்தத் தாமனை உணவுப் பொருட்களையும், உடைகளையும், குழந்தைகள் தூங்கும் கட்டிலையும், ஆயுதங்களையும், யானைக்கு வேண்டிய தீனையும் (உணவு), சுமந்து சென்றது. (பயணம் செய்யும் வீடு - ‘தாமனை’, என வீரமாதேவி குறிப்பிடுகிறாள்). ‘கவிகை‘ என்பவள் யானையால் தாமனையை ஓட்டிச் சென்ற கணவனை குழந்தையுடன் தாமனையுள் உறங்க விட்டு, யானைக்கு நெல்லும் கரும்பும் கொடுத்து களைப்பாற விட்டாள்.    

மதயானை கட்டும் மன்னா
          எனை அழைத்துப் போனால்
இளம்பிடியைக் கட்டேனோ
          உனை ஒல்லக் கூடாதோ”
                                - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                      - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
என்பது ஈழத்து நாட்டுப் பாடல். இப்பாடலைப் பாடியவள், ‘இளம் பிடியைக் கட்டமாட்டேனா?’,  எனக் கேட்க, கவிகை பெரும் களிற்றையே கட்டி தீனி போட்டிருக்கிறாள். (பிடி - பெண்யானை, களிறு - ஆண்யானை).
அத்தாமனைகள் பணக்காரரிடமே இருந்தன. அரசுக்குச் சொந்தமான தாமனையில், மருத்துவர்கள் சென்று மூலிகை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் அதில் நோயாளியையும், ஆராய்ச்சிக்கு வேண்டிய பொருட்களையும் ஏற்றிச் சென்றனர்.
ஈழத்தமிழர் நாகரிகம் 14ம் நூற்றாண்டில் எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதற்கு வீரமாதேவி கூறிய ஈழத்து வரலாற்று மங்கையரே ஆதாரம். நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் வாழ்ந்து வரலாறாய் நிற்கும் அந்த மங்கையரை வாழ்த்துவோம்.

[பின்குறிப்பு: பாண்டியப் பேரரசின் மன்னனாக வீற்றிருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி பி 1268 - கி பி 1311), மகள் வீரமாதேவி (கிபி 1311) இலங்கை வந்து புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்தாள். அவள் எழுதிய சுயசரிதையில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளாள்] 
இனிதே, 
தமிழரசி.
(1997ம் ஆண்டு எழுதியது, MIOT முத்தமிழ்மாலை மலரில் 2001லும், 2007ல் சுடரொளியிலும் வெளிவந்தது.)