Sunday 1 January 2012

நமசிவய மந்திரத்தை பேணிக்காத்தது யார்?

இராவணனும் அவன் மனைவி வண்டமரோதியும்
களனி விகாரை

இறைவனை அடைவதற்காக அழுதவர் என்ற கருத்தில் 'அழுதழுது அடியடைந்த அன்பர்' என்னும் பெருமைக்குரியவர் மாணிக்கவாசகர். அவர் தம் மணிவாக்கால்
"உந்துதிரைக் கடலைக் கடந்து அன்று
        ஓங்கு மதில் இலங்கை அதனில்
பந்தணை மெல் விரலாட்கு அருளும்
        பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே"
                                                          - (ப.திருமுறை: 8: 143: 5)
எனக்கூறி கதறி அழுததை இத்திருவாசகம் காட்டுகிறது. அலை மோதும் கடலைக் கடந்து, அந்நாளில் ஓங்கி எழும் மதில் [தூங்கு எயில்] உள்ள இலங்கையில் பந்து விளையாடும் மெல்லிய விரலை உடையவளுக்கு அருளிச்செய்த பரிசை அறிந்தவர் எனது தலைவன்[சிவன்] ஆவார்' என்கிறார். அவள் இறைவனிடம் பரிசு பெறக்காரணம் என்ன? அவளது பக்தியா? வேறு காரணம் உண்டா? சிவனார் மட்டும் அறிந்த பரிசை பெற்றவள் யார்? 

இறைவன் ஆன்மாக்களுக்கு அளிக்கும் பரிசையும் அதற்கான காரணத்தையும் அளந்தறிய முடியாது. எனினும் சைவச்சான்றோர் அவற்றைத் தொட்டுக்காட்டிச் சென்றுள்ளனர். மாணிக்கவாசகரே "நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!"
எனப்போற்றிய 'நமசிவய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பேணிக் காத்தவள் அவள். அவளே இராவணனின் மனைவி. அவளின் பெயரை 'வண்டமர் ஓதி' எனத் திருஞான சம்பந்தக் குழந்தை தான் பாடிய ஐந்தெழுத்துப் பதிகத்தில் பதிவு செய்து வைத்திருப்பதைக் காணமுடிகிறது.

வண்டமரோதி என அழைக்கப்படுபவள் யார்? நம்மில் எத்தனை பேர் அவளின் உண்மையான பக்தியை அறிந்து வைத்துள்ளோம்? பெண் என்பதாலா? அல்லது எமது அறியாமையாலா? அவள் எதனைப் பேணினாள் என்பதையாவது நாம் அறிந்தோமா?  வண்டமரோதி பற்றிய செய்தியை கோயில் அறக்காவலர் அழைத்துவரும் சைவசமய சொற்பொழிவாளர்களும் சுவாமிமார்களும் சொல்கிறார்களா? ஏன் இந்த நிலை? இனியாவது அந்தநிலை மாறவேண்டும். எம் இளம் தலைமுறையினராவது எம் சைவசமய நூல்கள் என்னென்னவற்றை பொதிந்து வைதிருக்கின்றன என்பதை நன்கு அறிய வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கு குறிப்பிடுகின்றேன்.

பஞ்சாக்ஷ்ர மந்திரம் என்றதும் சொல்லத் தெரிந்த எமக்கு ஐந்தெழுத்து மந்திரம் என்றால் சொல்லத் தெரிவதில்லை. திருஐந்தெழுத்து எனச்சொல்லப்படுகின்ற 'ந ம சி வ ய' என்ற ஐந்து எழுத்தையுமே அஞ்செழுத்து (ஐந்தெழுத்து) மந்திரம் எனத் தமிழிலும், பஞ்சாக்ஷ்ர மந்திரம் என்று வடமொழியிலும் கூறுவர். நமசிவாயப் பதிகம் தெரிந்த அளவிற்கு ஐந்தெழுத்துப் பதிகம் எமக்குத் தெரிவதில்லை. நமசிவாயப்பதிகம் என்றதும் "சொற்றுணை வேதியன்" எனப்பாடும் எம்மில் எத்தனை பேர்  ஐந்தெழுத்துப் பதிகம் என்றதும்
"துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே"           
                                                          - (ப.திருமுறை: 3: 22: 1)
எனப்பாடுவோம்? 

அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய ஐந்தெழுத்துப்பதிகத்தின் எந்த ஒரு தேவாரத்திலும் பஞ்சாக்ஷ்ரம் என்ற சொல்லோ அன்றேல் பஞ்சாக்ஷ்ர மந்திரம் என்றோ இல்லை. இப்பதிகத்தின் ஒவ்வொரு தேவாரத்திலும் அவர் 'அஞ்செலுத்துமே' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். அவர் தன்னை தமிழ்க்குழந்தையாகவே இனம் காட்டியவர். ஆனால் மிகப்பழைய பன்னிருதிருமுறைப் புத்தகங்கள் தவிர்ந்த மற்றைய பன்னிருதிருமுறைப் புத்தகங்களில் எல்லாம் பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்றே இப்பதிகம் அழைக்கப்படுகின்றது. இப்படி பேர் மாற்றம் செய்தோரே எம் மாற்றத்திற்கு காரணர். இப்படி பல குளறுபடிகளை இனங்கண்டு களையவேண்டிய நிலை இருக்கிறது. இவற்றை உலகெங்கும் சைவசமய மாநாடு நடத்துவோர் திருத்தம் செய்யவேண்டிய கடைப்பாடு உடையோர் ஆவர்.

திருஞானசம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு தேவாரப்பதிகத்திலும் எட்டாவது தேவாரத்தில் இராவணனைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஐந்தெழுத்துப் பதிகக்தின் எட்டாவது தேவாரத்தில் இராவணனனைப் பற்றிச்சொல்லும் இடத்தில் வண்டமரோதியையும் சொல்கிறார்.
 வண்டமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.                
                                                          - (ப.திருமுறை: 3: 22: 8)
ஒன்றை போற்றிப் பாதுகாத்தலே பேணுதலாகும். இத்தேவாரம் 'வண்டமரோதி எனும் பெண்[மடந்தை] போற்றிப் பாதுகாத்ததும் பண்டைய இராவணன் பாடி ஈடேறியதும் அடியவர்கள் சொல்லி வணங்க அவர்களுக்கு முழுமையை - முத்தியை அளிப்பதும் 'ந ம சி வ ய' எனும் அஞ்செழுத்துமே' என்கின்றது.

இத்தேவாரத்தின் படி 'ந ம சி வ ய' எனும் அஞ்செழுத்து மந்திரத்தை வண்டமரோதி பேணிக்காத்தாள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.  மாந்தை மாண்மியம் மயனின் மகளை வண்டமரோதி எனச்சொல்கிறது. மயனின் மகளே இராவணனின் மனைவி.  

மாணிக்கவாசகரின் திருவாசகமும்
"ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்கு
பேரருளின்பம் அளித்த பிரான்"

                                                          - (ப.திருமுறை: 8: 18: 2) 
எனக்கூறுமிடத்தில் வண்டமரோதியை வண்டோதரியாகக் காட்டும். 

வண்டமரோதி நம் வாய்ச்சொல்லின் பலுக்கலில் வண்டோதரியாகி கம்பராமாயணத்தில் மண்டோதரியானாள். ஓதி என்றால் கூந்தல். வண்டு அமரும் கூந்தலையுடைய வண்டமர் ஓதி, போற்றிப் பாதுகாத்துத் தந்த ஐந்தெழுத்து மந்திரமாகிய  'ந ம சி வ ய' மந்திரத்தை உரத்துச் சொல்லும் நாம் அவளை மட்டும் மறந்தது ஏன்? மேலே உள்ள புடைப்புச்சிற்பப் படத்தில் இராவணனும் வண்டமரோதியும் இருக்கிறார்கள். இச்சிற்பம் களனி விகாரையில் உள்ளது. அதில் இராவணன் சிவன் கொடுத்த வாளுடன் காணப்படுகிறான்.

கோயில்களில் வீடுகளில் இறுதிச்சடங்குகளில் மாணிக்கவாசகர் பாடிய 'நமசிவாய வாழ்க!' எனத் திருவாசகத்தைப் பாடி வண்டமர் ஓதி மடந்தை பேணின ந ம சி வ ய மந்திரத்தை போற்றும் நாம் அவளையும் [வண்டமரோதியையும்] போற்றுவோமா! அவளை நம் பண்டைத் தமிழர் களனி விகாரையில் புடைப்புச்சிற்பமாகச் செய்திருந்தும் நாம் புறக்கணிக்கலாமா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment