குறள்:
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி” - 226
பொருள்:
ஒன்றும் இல்லாதவனின் கொடிய பசியைத் தீர்த்தலே பொருளுள்ளவன் தனது பொருளை சேமித்து வைக்க வேண்டிய இடமாகும்.
விளக்கம்:
அற்றான் - தனக்கென ஏதும் இல்லாதவன். காசு, பணம், வீடு, வாசல், குடும்பம், குழந்தை, சொத்து, சுகம் ஏதும் இல்லாதவன். ஏழ்மையாலோ நோயாலோ, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அழிவுகளாலோ, போர்களாலோ, வஞ்சனையாலோ ஏதும் இல்லாதவனாக ஆக்கப்பட்டவன். பிழைக்கவழி தெரியாததாலோ, வலது குறைந்ததாலோ ஏதும் அற்றவனாக இருப்பவன். இப்படி யாராக இருப்பினும் அவன் யாதும் அற்றவனே.
இவ்வாறு ஒன்றும் அற்றவன் என நாம் நினைப்பவன் இடமும் ஒன்று இருக்கிறது. அதுவே அழிபசி. என்றும் தீராத பசி. அறாத பசி. உண்ண உண்ணப் பெருகும் பசி. காலையில் உண்டோமே என்று மாலையில் பசியாது இருக்குமா? அது தொடர்ந்தும் அழியாதிருப்பதால் அது அழிபசி.
இதைப்பார்த்தே நம் முன்னோர்
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்” - (நல்வழி -26)
என்றார்கள்.
எனவே மனிதனை விட பசி மிக ஆற்றல்கூடியது. பசியின் ஆற்றலில் மனிதப்பண்புகள் அழிந்து போய்விடும். எம் உயிர் உள்ளவரை எம்மோடு தொடர்ந்து வருகின்ற மனிதப்பண்புகளை மட்டும் அல்ல எம்மையே அழித்து ஒழிக்க வல்லது பசி. ஆதலால் பசிக்கு திருவள்ளுவர் ‘அழிபசி’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
பெற்றான் யார்? முன்னோரது செல்வத்தையோ அரச மாணியத்தையோ தனது முயற்சியால் உழைத்த பொருளையோ பெற்றவனே பெற்றானாவான். சேமித்து வைக்கும் நிதி வைப்பு எனப்படும். உழி என்பது இடம். பொருள் சேமித்து வைக்கும் இடமே வைப்புழி. வைப்பு + உழி = வைப்புழி. ஏதோ ஒரு வகையில் பொருளைப் பெற்றவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா! உங்களிடம் பொருள் இருக்கிறதா? அதனை ஏதும் அற்றவர்களின் அழியாப்பசியைத் தீர்த்து அவர்களின் வயிற்றில் சேமியுங்கள் எனக்கூறும் குறள் இது.
No comments:
Post a Comment