Tuesday 3 January 2012

குறள் அமுது - (16)


குறள்: 
தேவர் அனையர் கயவர் அவரும்தான்
மேவன செய்து ஒழுகலான்                  - 1073
பொருள்: 
கயவர்கள் தாம் விரும்பியதைச் செய்து நடப்பதால் தேவரைப் போன்றவர்களே 
விளக்கம்: 
இத்திருக்குறள் கயமை எனும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது குறளாகும். தாம் விரும்பியதைச் செய்து நடத்தலை மேவன செய்து ஒழுகல் என்பர். அதாவது தம் எண்ணப்படி நடப்போர். எமக்குத் தெரியாத ஒன்றைப் புரியவைக்க தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது உவமையாகும். உவமை அணியை பொதுவாக பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என மூன்றாகப் பிரிக்கலாம். இதில் ஓர் உவமையைச் சொன்னாலே மற்றவர் புரிந்துகொள்வர். ஆனால் இக்குறளோ இம்மூன்று உவமைகளையும் காட்டி நிற்கிறது. 
தேவர்களுக்கும் கயவர்களுக்கும் கயமை என்ற பண்பு பொதுவானது. அது பண்புவமை. தாந்தோன்றித்தனமாக நடக்கும் செயல் பொதுவானது. அது தொழிலுவமை. அவர்களது செயலால் மற்றவர் அனுபவிக்கும் துன்பம் பொதுவானது. அது பயனுவமை. இப்படி நாம் கயவரை அறிந்து கொள்ள தேவரை எடுத்துக்காட்டி இருப்பதால் தேவர்கள் வடிகட்டிய கயவர் என்பது வள்ளுவப் பெருந்தகையின் முடிபாகும். தமிழ்ச்சாதியில் திருவள்ளுவரே தேவரை கயவர் என இனம் காட்டியவர். தேவர் கர்ணனின் கவசகுண்டலம் முதற்கொண்டு அவன் செய்த தர்மத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனைக் கொன்றதை மகாபாரதம் சொல்கிறதல்லவா? அது தேவரின் கயமைச் செயல் தானே!
இரக்கம், நீதி, நேர்மை ஏதும் அற்று தமது இன்பத்திற்காக வாழ்பவரே கயவர். தாம் ஒன்றைச் செய்யவேண்டும் என்று நினைத்தவுடனேயே எதுவித கேட்டுக்கேள்வியும் இன்றி எவரையும் அடித்து அழித்து எவரின் உடமையையும் பறித்து, தம் பொருள் போல இன்பம் காண்பர். முதுமை அடைய அடைய கழுகு பிணத்தை விரும்புவது போல கயவரும் முதுமை அடைய அடைய கொடிய தீய செயல்களையே விரும்பிச் செய்து இன்பம் காண்பர் என்று நாலடியார் சொல்கிறது.

தேவரும் கயவரும் தமது இன்பத்திற்காக பிறருக்குத் தீமை செய்யும் கயமை எனும் பண்பில் ஒத்தவரே என்பதை வள்ளுவர் இக்குறளில் எடுத்துச் சொல்கிறார். ஆதலால் வாழ்க்கையில் கயமையை நீக்கி செழுமையாக வாழ்வோம்.

No comments:

Post a Comment