Thursday 5 January 2012

திருக்கேதீஸ்வரமும் ராகு கேதுவும்



எப்போது பொருட்கள் மலிந்து கிடக்கும்? அளவுக்கு அதிகமாக பொருட்கள் இருக்கும் பொழுதே அவை மலிந்து கிடக்கும். வையம் என்றால் உலகம். சுந்தரமூர்த்தி நாயனார் உலகமக்கள் மலிந்திருந்த ஒரு கடலைக் கண்டார். அதனை வையம் மலிகின்றகடல் என்றார். அந்தக்கடல் எந்நேரமும் உலகமக்களால் நிறைந்தபடியே ‘மாதோட்ட நன்நகரில்’ இருந்ததாம். மாதோட்ட நகரின் வளமும் புகழும் எவ்வளவுக்கு  உலகெல்லாம் பரவி இருந்திருந்தால் வையம் மலிகின்ற கடல் எனச் சொல்லியிருப்பார். அதனை பாலாவிக் கரையில் இருந்த திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் போற்றும் அவரது தேவாரத்தில்  

“வெய்யவினையாய அடியார் மேல் ஒழித்து அருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பையேயேர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான் திருக்கேதீச்சரத்தானே”
எனக் குறிப்பிடுகிறார்.
அத்தனை வளத்தோடு இருந்த மாதோட்ட நகரில் இருந்த திருக்கேதீஸ்வரக் கோயிலை இராகுகேதுக்கள் வழிபட்டனர் எனும் பண்டையோர் உரையை சுந்தரமூர்த்தி நாயனார் இப்பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இருந்தும் நமது உரையாசிரியர்களின் தப்பான கருத்துக் கணிப்பால் அப்பதிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. 

அத்தேவாரத்தையும் விளக்க உரையாசிரியர் ஒருவரின் கருத்தையும் முதலில் பாருங்கள். 

“அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழுது ஏத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்ட நன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கண் அரவு அசைத்தான்திருக் கேதீச்சரத் தானே”

பிளவு செய்த பிறையைச் சூடியவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையுடைய அந்தணர்களும் தேவர்களும் வணங்கித் துதிக்க மரக்கலம் நிறைந்த, கடல் சூழ்ந்த மாதோட்டம் என்னும் நல்ல நகரத்தில் பாலாவியாற்றின் கரைமேல் பாம்பைக் கட்டியுள்ளவனாய்க் காணப்படுகின்றான். இந்த விளக்க உரையை 1995 ல் வித்வான் M நாராயண வேலுப்பிள்ளை என்பர் எழுதியுள்ளார். உங்களில் எத்தனை பேர் இந்த உரையை ஏற்றுக்கொள்வீர்கள்? 

வித்துவான் வேந்தன் அவர்கள் எழுதிய 10ம் வகுப்பு சமயப் புத்தகத்திலும்  வேத அங்கங்கள் மொழிகின்ற என்ற கருத்தையே கூறியிருந்தார். அப்பெருமகன் அதில் அந்தணர்களைக்  சுட்டவில்லை என நினைக்கிறேன். 




















இத்தேவாரத்தின் முதல் அடியை ஒவ்வொரு சொல்லாகப் பிரித்துப் பார்த்தால்  திருக்கேதீஸ்வரம் இராகு கேது வழிபட்டதலம் என்பதைக் காணலாம்.
அங்கம் + ஒழி = அங்கம்மொழி
அந்நாள் அரவு + அமரர் = அன்னாளரவமரர் 
தொழுது + ஏத்த = தொழுதேத்த 
என்றே இச்சொற்கள் புணர்ந்துள்ளன[சேர்ந்துள்ளன].

"அங்கம் ஒழி அந்நாள் அரவு அமரர் தொழுது ஏத்த

அங்கம் என்பது உறுப்பு. இங்கே தலையைக் குறிக்கின்றது. 
ஒழி - நீங்கிய/துண்டிக்கப்பட்ட [தலை நீங்கிய]. 
லை துண்டிக்கப்பட்ட அந்த நாளில் ராகு கேது எனும் பாம்புகளாகிய [அரவு] தேவர்கள் [அமரர்] தொழுது போற்ற[ஏத்த] என்பதே இத்தேவார அடி சொல்லும் கருத்தாகும்.

எனவே அத்தேவாரம்
“அங்கம் ஒழி அந்நாள் அரவு அமரர் தொழது ஏத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கண் அரவு அசைத்தான் திருக்கேதீச்சரத் தானே”
என்றும், 
அதன் விளக்கம்
‘‘கப்பல்  நிறைந்திருக்கும் கடலையுடைய மாதோட்ட நகரில் பாலாவிக் கரையின் மேலுள்ள திருக்கேதீச்சரத்து இறைவன், இளம்பிறையைச் சூடி, சிவந்த கண்ணுள்ள பாம்பை ஆட்டினான். அவனே தலை [அங்கம்] துண்டிக்கப்பட்ட அன்று அரவு அமரர்களான ராகு கேது வணங்கிப் போற்ற இருந்தவன்" என்றும் இருக்கவேண்டும். (பாலாவி - ராகு கேது நீராடிய புனித தீர்த்தம் என்பது வழி வழியாக வரும் நம்பிக்கையாகும்.) 
திருக்கேதீச்சரத்தில் நடந்த திருவாசகவிழாவில் (1974) பல அறிஞர்கள் இருந்த சபையில் நான் இதனை எடுத்துக்கூறினேன். அப்போது நான் சிறியவளாக இருந்தும் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். அந்த சபையில் நான் பேசமுன்னர் எனது கருத்துக்கு மதிப்பளித்த திருச்சி மலைக்கோட்டை வித்துவான் தி பட்டுச்சாமி ஓதுவார் அவர்களையும், ஈழத்து சிவனடியார் திருக்கூட்டத்து திருக்கேதீச்சர திருவாசகமடத்தின் காவியாடை அணியாப் பெருந்துறவியாய் வலம்வந்த  சி சரவணமுத்து சுவாமியப்பா அவர்களையும் நினைவுகூற வேண்டியவளாக இருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருக்கேதீச்சரத்தைத் தவிர்ந்த மற்றைய கோயில் வாயில்களை இத்தேவாரத்தின் உண்மையான கருத்து சென்றடையவில்லை. இத்தேவாரத்தில் இக்கருத்தைச் சொன்னவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்பதை இதனை வாசிப்போர் மனதில் பதித்தல் நன்று. தேவாரக் கருத்துக்களில் உள்ள பிழைகளைக் களைய வேண்டிய பொறுப்பு சைவத் தமிழ் உலகையே சாரும். அவர்கள் இதனை காய்தல் உவத்தல் இன்றி செய்யவேண்டும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment