Thursday 26 January 2012

மணிபூங்குன்று தந்த போரின் சுவடு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகநேயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லி மனிதநேயத்தின் மாசற்ற சன்றோனாக உயர்ந்து நிற்பவர் மணிபூங்குன்றனார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என அவர் முழங்கிய இடமே  மணிபூங்குன்று. அப்பாடலில் 
"கல்பொருது இரங்கும் மல்லற் பேராற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல"                - (புறம்: 192: 8 - 9)
என்று இன்றும் ஒட்டிசுட்டானுக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் பேராற்றைக் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் தற்போது அப்பாடலை எழுதுவோர் பேரியாறு என மாற்றி எழுதி எமது வன்னிமண்ணின் வரலாற்றை மழுங்கச் செய்கின்றனர். மணிபூங்குன்றனார் என்ற அவரது பெயரையும் கணியன் பூங்குன்றனார் எனவும் எழுதுகின்றனர். இவற்றைக் கண்டும் காணாதவர்களாக நாம் இருப்பது தவறு. இப்படியான இடைச் செருகல்களே தமிழரின் வரலாற்றைச் சிதைத்து நாம் நாடு இழந்து மாற்றான் நாட்டு வீதியில் நிற்பதற்குக் காரணமாகும். 

வீரமும் போரும் தமிழரின் மறம் என எண்ணி வாழ்ந்தவன் தமிழன். அதனால் அவன் காலங்காலமாக இழந்தவை எண்ணில் அடங்கா. உலகெலாம் கூடி நடத்திய இன்றைய வன்னிப்போரை மட்டுமா ஈழத்து வன்னிமண் கண்டது? அதற்குமுன் எத்தனையோ போர்களைக் கண்ட களபூமியது. சோழரும், சாவகரும், சிங்களவரும், போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும்,  ஆங்கிலேயரும் தாக்கத் தாக்க எதிர்த்து நின்று களமாடி பகைவரை வென்றாரும் வீழ்ந்தாருமாய் வாழ்ந்த தமிழரின் களபூமிதானே வன்னிமண்.

அப்படி நடந்த ஒரு போரில் பேராற்றங்கரையிலிருந்த மணிபூங்குன்றில் வாழ்ந்தோரில் பலர் அழிந்தனர். அங்கே உயிர் தப்பியவர்களில் வயதான ஒரு கிழவனும் கிழவியும் இருந்தனர். அவர்களுக்கு உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லாது எல்லோரும் இறந்துபோயினர். அந்த ஊரே அழிந்து உண்ண உணவற்று இடுகாடாயிற்று. அவர்களால் அங்கு வாழமுடியாத நிலை. உயிர் தப்பியோர் வேறு வேறு ஊருக்குப் போய்விட்டனர். ஆதலால் அவர்கள் இருவரும் அந்த தள்ளாத வயதிலும் வேறு ஊர் செல்வதற்கு ஆற்றங்கரையில் ஓடத்திற்காக காத்திருந்தனர்

(இக்காலத்தைப் போல அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. போர்களில் யானை, குதிரை அழிய நேர்ந்தால் தரைவழியில் செல்வதைவிட படகில் செல்வது மிகவும் வசதியாக இருந்தது. தமிழில் ஆறு என்பதற்கு வழி என்ற காரணப்பெயரும் இருக்கிறது.)

 (1870ல் இலங்கையில் யானை வயல் உழுததற்கான ஆதாரம்)
[Image courtesy: Wade G Burck]

அந்நாளில் வன்னிப்பகுதி மக்களிடம் ஐம்பது, நூறு ஏக்கர் என வயல் நிலம் இருக்கும். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிர்களை மாடு கொண்டு போரடிக்கலாம் (சூடு மிதிக்கலாம்). ஐம்பது ஏக்கர்,  நூறு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை மாட்டைக் கொண்டு அடிக்க முடியுமா? அதனால் ஆனை கொண்டே போரடிப்பர். பெரும் வீரர்களே ஆனையைக் கொண்டு சூடுமிதிப்பர்.



ஓடத்திற்காக காத்திருந்த போது அந்த மூதாட்டிக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. இளமையில் சிங்கம் போலிருந்த தன் காதற்கணவன் முதுமையில் துன்பப்படுவதையும் போரால் ஊர் அழிந்ததையும் யாருமற்றவராய் தாமிருப்பதையும் ஓடத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் நாட்டுப்பாடலாக வடித்திருக்கிறார் அந்த மூதாட்டி.


பெண்:  மாடுகட்டிப் போரடிச்சா
                      மாளாது என்னு சொல்லி
             ஆனகட்டி போரடிச்ச
                       ஆளான சிங்கமல்லோ!
பெண்:  ஆடுகட்டக் கூடாம
                      அல்லற்படு நாளாச்சு
             ஊரு சனமெல்லாமே
                       கூண்டோடு போயாச்சி
பெண்:  ஓடுகின்ற ஆற்றோரம்
                       ஓடம்வரும் காத்திருப்பம்
             தேடிவர யாரிருக்கா
                        தேம்பியழக் கூடலயே!
                                                     நாட்டுப்பாடல் (மணிபூங்குன்று - பேராற்றங்கரை) 
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment