Monday 2 January 2012

ஆதிரையானும் ஆதிசிதம்பரமும் - பகுதி 2

சங்ககாலத்தில் மட்டுமல்ல 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதிரைநாள் விழா மயிலாப்பூர் கபாலீச்சரம் கோயிலில் நடந்ததை திருஞானசம்பந்தர் பூம்பாவையை  உயிர் பெற்றெழப் பாடிய பதிகத்தில் 

ஊர்திரை வேலை உலாவும்  உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்”                - (ப.திருமுறை: 2: 47: 4)

எனக் கேட்பதால் அறியலாம். 


முத்துவிதானம் இல்லாத இன்றைய ஆரூரர்


சிவனை “ஆதிரை நாள் உகந்தானாய்” காட்டும் திருநாவுக்கரசர்

“முத்து விதான மணிபொற்கவரி முறையாலே
பக்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்” 
                    - (ப.திருமுறை: 4: 21: 1)
எனத் தொடங்கும் இத்திருவாரூர் தேவாரப்பதிகம் முழுவதும் "ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்" எனப்பாடிப்  பரவியிருப்பது அவரது காலத்தில் கூட ஆருத்ரா தரிசனம் என்று நம் தமிழ் முன்னோர்கள் அழைக்கவில்லை என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. இருந்தும் கோயில் அறக்காவலர் கண்களில் இதுவரை அப்பதிகமும் தெரியாது மறைந்திருப்பது பெருவியப்பே!

இருபத்தேழு நட்சத்திரங்களில் சிவனின் ஆதிரை நட்சத்திரத்திற்கும் திருமாலின் ஓண நட்சத்திரத்திற்கும் திரு எனும் அடைமொழியைச் சேர்த்து திருவாதிரை என்றும் திருவோணம் என்றும் அழைப்பது இன்றைய வழக்கம். அன்று ஆதிரையான் ஆக இருந்த சிவன் இன்று திருவாதிரையான் ஆக  மாறியுள்ளார்.  ஆதிரை வடமொழியில் ஆர்த்ரா எனக் கூறப்படும். அதனாலேயே நாம் இன்று சிவனின் ஆதிரைக் காட்சியை வடமொழி வாய்ப்பட்டு ஆருத்ரா தரிசனம் என்கிறோம். சிவன் யார் யாருக்கு மார்கழி ஆதிரை நட்சத்திரத்தன்று காட்சிகொடுத்து, காட்சி கொடுத்த நாயகனானார் என்பதைப் பார்ப்போம். 

ஒருகாலத்தில் இலங்கை இந்தியாவடன் சேர்ந்த ஒரு நாடாகவே இருந்தது என இதிகாசங்களும் புராணங்களும் இலக்கியங்களும் சொல்கின்றன. கடல்கோள்களால் குமரிக்கண்டம் கடலினுள் மூழ்கியது. அப்பொழுது இராவணனின் நகரங்கள் பலவும் மூழ்கின. அதன் பின்னரே இலங்கைத் தனித்தீவாக மாறியது.  இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்திலும் குமரியாற்றுக்கு இடைப்பட்ட திடராகவே இலங்கை இருந்தது. தமிழில் ஓர் ஆற்றின் இடையே அகப்பட்டுள்ள நிலப்பகுதியை இலங்கை என்றும் அரங்கம் என்றும் அழைப்பர். அதாவது ஆற்றிடைக்குறையை தமிழில் இலங்கை என்பர். 

இலங்கையில் இயக்கரும் நாகரும் வாழ்ந்தனர் என்பதை இலங்கையின் வரலாறு சொல்கிறது. இன்றைய இலங்கையின் வரை படத்தில் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக ஓரு நேர் கோட்டை முல்லைத்தீவுக்கு சற்றுக் கீழே தொடங்கி மிகுந்தலைக்கு மேலாக  புத்தளம் வரை கீறினால் மேலேயுள்ள பாகத்தில் நாகரும் கீழேயுள்ள பகுதியில் இயக்கரும் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைக் காணலாம். பரிபாடலும் மதுரையை நாகர் நகராகக் கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் நாகரின் அரசனாக மயனையும் இயக்கரின் அரசனாக இராவணனையும் இனம் காணலாம். நாகரின் அரசனான மயனின் மகளை வண்டமரோதி என திருஞானசம்பந்தர் கூற வண்டோதரி என மணிவாசகர் கூறியதை இன்றைய தேவார திருவாசக நூல்கள் காட்டும். ஓதி என்றால் கூந்தல் எனவே திருஞானசம்பந்தரின் தேவாரம் கூறும் வண்டு + அமர் + ஓதி என்பதற்கு வண்டு அமரும் கூந்தலை உடையவள் எனப்பொருள் கொள்ளலாம். வண்டமரோதி பின்னாளில் வண்டோதரியாகி, கம்பரது இராமாயணத்தில் மண்டோதரியாகி நிற்கிறாள். திருஞானசம்பந்தர்

"வண்டமரோதி மடந்தை பேணின
பண்டைய இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே"                                
- (ப.திருமுறை: 3: 22: 8) 

தாழம்பூ


என இத்தேவாரத்தில் திருவைந்தெழுத்தை வண்டமரோதி பேணிக்காத்ததையும் அந்த ஐந்தெழுத்தைப் பாடி இராவணன் உய்வடைந்ததையும் சொல்கிறார்.

வண்டமரோதி சிறுவயதிலிருந்து சிவனையே நினைத்து வாழ்ந்தாள் என மாந்தை மாண்மியம் சொல்கிறது. இன்றைய தமிழகத்திலிருக்கும் உத்தரகோசமங்கை மயனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவன் தன் மகளான வண்டமரோதிக்காக உத்தரகோச மங்கையில் ஒரு கோயிலைக்கட்டினான். அவளும் அந்தச் சிவனையும், மாஎந்தைச் சிவனையும் தாழம்பூவால் பூசைசெய்து வழிபட்டு வந்தாள். மற்றைய கோயில்கள் போல் அல்லாமல்  உத்தரகோசமங்கையில் இன்றும் தாழம்பூவாலும் பூசை நடைபெற அதுவும் ஒரு காரணம் என்பர். அவளுக்காக சிவன் உத்தரகோசமங்கையில் திருநடனம் ஆடிய பின்னரே சிதம்பரத்தில் ஆடியதால்  அது ஆதிசிதம்பரம் என அழைக்கப்படுகிறது. 

அவள் இராவணனைத் திருமணம் செய்து தென்னிலங்கைக்குச் சென்றபின் உத்தரகோசமங்கை சிவனை நினைந்து நிகும்பலையில் தவஞ்செய்தாள். (காட்டாமணக்கு நிலத்தை நிகும்பலை எனத் தமிழில் சொல்வர்). அவளுக்கு அருள்புரிய விரும்பிய சிவன், உத்தரகோசமங்கையில் இருந்த ஆயிரம் முனிவர்க்கும் அசரீரியாக வண்டமரோதிக்கு காட்சி கொடுக்க தென்னிலங்கை செல்கிறேன்.  வேதாகமச் சுவடிகளை காத்திருங்கள். என்னை இராவணன் தொட்டதும் இங்குள்ள தீர்த்தக் குளத்திலே தீப்பிழம்பு தோன்றும்’ எனக்கூறி நிகும்பலை சென்றார்.

சந்தனக்காப்பிட்ட உத்தரகோசமங்கை மரகத நடராசர் 

சிவன் வண்டமரோதிக்கு கைக்குழந்தையாகக் காட்சி கொடுத்தார். அவள் அக்குழந்தையை எடுத்து இராவணனிடம் கொடுத்தாள். இராவணன் அக்குழந்தையை கையில் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தான். அக்கணம்  குழந்தை மறைந்தது. உத்தரகோசைமங்கைக் குளத்தில் தீப்பிளம்பு எழுந்தது. ஒரு முனிவரைத் தவிர மற்றைய 999 முனிவர்களும் அத்தீப்பிளம்பில் கலந்தனரென உத்தரகோசைமங்கை புராணமும், மாந்தை மாண்மியமும் பேசும். அந்தமுனிவரே மாணிக்கவாசகராய்ப் பிறந்தாராம். இறைவன் இராவணனின் மனைவிக்கு திருவருள் செய்த திறத்தை மாணிக்கவாசகரும் குயிற்பத்தில்

"ஏர் தரும் ஏழுலகு ஏத்த எவ்வுருவும் தன் உருவாய்
ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்கு 
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறைமேய பிரானை
சீரிய வாயால் குயிலே! தென்பாண்டி நாடானைக் கூவாய்!" 
                                                                                         - (ப.திருமுறை: 8: 18: 2)

என குயிலை அழைத்து கூவும்படி கூறுகிறர். மார்கழி ஆதிரைநாள் அன்று வண்டமரோதிக்கும் இராவணனுக்கும் மணிவாசகருக்கும் காட்சி கொடுத்ததால் உத்தரகோசமங்கையில் உள்ள சிவன் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலில்
“உத்தரகோசமங்கையுள் இருந்து 
வித்தகவேடம் காட்டிய இயல்பும்”
எனப் போற்றுகிறார். இதனாலே ஆதிரை நாளில் மணிவாசகரை எழுந்தருளச் செய்து திருவாசகம் பாடும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. திருப்பள்ளியெழுச்சியிலும்
“மதுவளர் பொழில் உத்தரகோச
மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா”
எனக் கதறுவார்.

சிவன், மயன்மகளாகிய வண்டமரோதிக்கு திருநடனம் ஆடிக்காட்டிய இடமாதலால் நடராசருக்கு ஆதிசிதம்பரம் என்ற தனிக்கோயிலே இருக்கிறது. அங்கு சிவனாக விளங்கும் மரகதநடராசரும் தெற்கு நோக்கியே அதாவது வண்டமரோதிக்கு அருள்புரிய இலங்கையைப் பார்த்தபடி இருக்கிறார். இக்கோயில் ஈழத்து அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. கண்டி தமிழ் அரசர்களிடம் இருந்தே இராமநாதபுரம் சிற்றரசர் கைகளுக்கு மாறியது. பெரியதொரு மரகதக் கல்லால் செய்யப்பட்ட நடராசசிலையே அக்கோயிலில் இருக்கிறது.  அச்சிலையை எவரும் வெளியே எடுத்து வரமுடியாது. சிலையை உள்ளேவைத்து  கருவறை கட்டப்பட்டுள்ளது. அதன் ஒளி பார்ப்பவர் கண் பார்வையை இழக்கச் செய்யுமென்று எந்நேரமும் சந்தனக் காப்பிட்டே வைத்திருப்பார். வருடத்தில் ஒருநாள் - ஆதிரைநாள் மட்டும் அந்த சந்தனக்காப்பு நீக்கப்பட்டு புதிதாகச் சந்தனக்காப்பு சாத்தப்படும். சந்தனக்காப்பு சாத்துவோர் தம் கண்ணை மெல்லிய துணியால் கட்டியவாறே சாத்துவர். வருடத்திற்கு ஒருமுறை அதுவும் ஆதிரைநாளில் நடைபெறுவதால்  அந்த ஆதிரையானை ஆதிசிதம்பரம் சென்று காணுவோர் புண்ணியர் என்பர்.

இனிதே,
தமிழரசி
.

No comments:

Post a Comment