Saturday 2 February 2013

வாழ்கிலேன் கண்டாய்!


பண்டைய தமிழர்களால் போற்றப்பட்ட காதற்கடவுளான மன்மதனை, ஆண்டாள் தன் பாசுரங்களால் வழிபட்டு வேண்டியது போல் யாரும் வழிபட்டதாகத் தெரியவில்லை. அவள் ஆழிமழைக்கண்ணன் தனக்கு கணவனாகக் கிடைக்க வேண்டும் என்ற பேரவாவால் மன்மதனைக் கை தொழுகின்றாள்.
“தையொரு திங்களும் தரை விளக்கித்
           தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண் மணல் கொண்டு தெரு அணிந்து
          அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா!
உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி
           உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
           வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!”           
                                           - ( நாச்சியார் திருமொழி: 1)

என தைமாதம் முழுவதும் தரையை துப்பரவு செய்து, மண்டல பூசைக்காக மேடை அமைத்தாள். மாசிமாதம் புதுமணல் அதுவும் நுண்மணல் கொண்டுவந்து தெருவை அலங்கரித்து, அழகனான மன்மதனுக்கே அழகு செய்தாள். அத்துடன் கிழக்கு வானம் வெளுத்து சூரியன் உதயமாகுமுன் எழுந்து நீராடி, முள்ளில்லாத சுள்ளிகளை எடுத்து தீவளர்த்து நோன்பிருந்தாள்.  ஆதலால் கடல் வண்ணனின் பெயரை அவளில் எழுதி,  கண்ணனை இலக்காக வைத்து, அவளை கண்ணன் மேல் எய்யும்படி மன்மதனை வேண்டுகிறாள். அவைமட்டுமல்ல 

“சுவரில் புராண நின் பேர் எழுதிச்
           சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கரும்பு வில்லும்
           காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா!
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
           ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவைரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
           தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே!”      
                                          - ( நாச்சியார் திருமொழி: 4)

சுவரில் மன்மதனின் பெயரை எழுதியும் அவனது மீன் கொடிகளையும் குதிரைகளையும், கவரிமான்களையும், கரும்பு வில்லையும் கீறி; கரும்பும் நெல்லும் தொங்கவிட்டு, வெல்லமும் பச்சைஅரிசியும் அவலும் சமைத்து, மன்மதனுக்குப் படைத்து தூமலர் தூவித் தொழுகின்றாள். 

“காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
          கட்டி அரிசி அவல் சமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
           மன்மதனே உன்னை வணங்குகிறேன்”                   
                                          - ( நாச்சியார் திருமொழி: 7)
சும்மா தொழவில்லை. மந்திரம் கூறித்தொழுகின்றாள். அதுவும் மறையவர் சொல்லும் மந்திரத்தைக் கூறித் தொழுகிறாள். யாரைத் தொழுகிறாள்? மன்மதைனை தொழுகிறாள். ஆண்டாளும் ஒரு பெண்தானே! ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆண்டாள் சொன்ன மந்திரங்கள் இன்றைய பெண்கள் சொல்லமுடியாது போனதன் காரணம் என்ன? காலங்காலமாக நடந்துவந்த போர்களால் நாம் எமது முன்னோரின் அறிவைத் தொலைத்தது தானே அதற்குக் காரணம்!

ஆண்டாள் எப்படியெல்லாம் மன்மதனை வழிபட்டாள் என்பதை அவளே தனது திருமொழியில் குறிப்பிடுகிறாள். இவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று
“மானிடவர்க்கு என்று பேசப்படில்
           வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!”              
                                          - ( நாச்சியார் திருமொழி: 5)

என மன்மதனை பயமுறுத்துவதைப் பாருங்கள். ஆண்டாள் காத்தற் கடவுளான திருமாலை (கண்ணனை) அடைய, காதற் கடவுளான மன்மதனின் காலில் விழுவது புதுமையாக இல்லையா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment