Sunday 17 February 2013

ஞாலமே! அந்தரத்தில் தொங்கும் அழகே!

ஞாலம்

அணுவினுள் ஒளிரும் மூலம் எதுவோ அதுவே அண்டமாய் விரிந்து எம்மையெல்லாம் இயக்கும் சக்தியாய் நிற்கிறது என்பது நம் முன்னோர் கண்ட முடிவு. அணுவாய் இருந்து அண்டமாய் விரிந்து நிற்கும் அண்டகோளத்துள் எத்தனை கோடானு கோடி கோலங்கள் (கோளங்கள், நட்சத்திரங்கள், மண், மலை, கடல், மரம் செடி, கொடி, புல் விலங்கு.......) இருக்கின்றன. மூலமாம் அணுவில் இருந்து உண்டானவையே இக்கோலங்கள். அவை யாவும் ஒன்றாய், ஞாலமாய் விரிந்து நிற்கிறது. ஞாலம் எனும் சொல்லை வடமொழி எனச்சொல்வாரும் உளர். ஞாலம் தமிழ்ச்சொல்லா? தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் தமிழ்ச் சொல்லிற்கு முதலிலும், இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்கள் பற்றிச்சொல்கிறது. அதாவது பொழிமுதல் எழுத்துக்கள் பற்றிக்கூறும் இடத்தில் 'ஞகர மெய்யெழுத்து[ஞ்] ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்களோடு மட்டும் சேர்ந்து மொழிமுதலாகும் என்று சொல்கிறது.
ஞ் + ஆ = ஞா [ஞாலம் - ஞாலம் கருதினும்] (திருக்குறள்: 484)]
ஞ் + எ = ஞெ [ஞெகிழ் - ஞெகிழிதல் கோடல்] (புறம்: 331: 4)]
ஞ் + ஒ = ஞொ [ஞொள்கல் - இளைத்தல்]

காலம் என்றால் என்ன? ஒன்று நடைபெற எடுக்கும் நேரத்தை (பொழுதை) காலம் என்கிறோம். அதேவேளையில் ஒருவர் இறந்தாலும் அவர் காலமாகிவிட்டார் என்கிறோம். இந்த காலமாகிவிட்டார் என்ற சொல் இரண்டு கருத்துக்களைத் தருகிறது. அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முடிந்துவிட்டது என்பது ஒரு கருத்து. அடுத்தது அவர் காலம் எனும் சக்தியுடன் இணைந்துவிட்டார். இங்கே காலம் எனும் சொல் எம்மையெல்லாம் இயக்கும் சக்தியைச் சுட்டி நிற்கிறது.
மனித மனத்தின் எண்ணத்தில் உண்டாவதே எண்ணக்கருத்தாகும். அதனை மனக்கருத்து என்றும் சொல்வர். அண்ட கோளங்களை எல்லாம் ஒரு சக்தி இயக்குகின்றது என்பது, உலக  இயற்கையின் இயல்பைப் பார்த்து, மனிதன் ஆராய்ந்து கண்ட மனக்கருத்தாகும். ஆதலால் மனித  மனக்கருத்தே எம்மையாட்டும் சக்தியாய் நிற்கிறது.  

ஒரு செயல் ஒழுங்காக நடைபெறுவதை சீலம் என்பர். இரவு, பகல், கோடைக்காலம், மாரிக்காலம், பனிக்காலம் என்ற காலமாற்றங்கள் ஓர் ஒழுங்கிலேயே நடைபெறுகின்றன. அந்த ஒழுங்கே சீலமாகும்.  திடீரென அந்தச் சீலம் மாறினால் அண்டகோளமே நிலைகுலைந்து சிதறிப்போகும். காலவோட்டம் சீராக நடைபெற சீலம் மிகவும் தேவையானதாகும். சீலம் மாறுவதாலே நாம் நன்மை தீமைகளை உணர்கின்றோம். 

ஆதலால் அந்த இயக்கசக்தியை நாம் இறையாக வணங்குகிறோம். திருநாவுக்கரசர் நாயனார் தமது தேவாரத்தில் 
"ஞாலமே விசும்பே நலம் தீமையே
காலமே கருத்தே கருத்தால் தொழும்
சீலமே திருவீழி மிழலையுள்
கோலமே அடியேனைக் குறிக்கொள்ளே!"
என இறைவனை ஞாலமே! விசும்பே! நலம் தீமையே! காலமே! கருத்தே! சீலமே! கோலமே! என எத்தனை பெயர்களால் அழைத்து கெஞ்சுவதைப் பாருங்கள்.

தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 72 எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும். அதாவது ஒரு எழுத்து ஒரு சொல்லை குறிக்கும். பூ, ஈ, பா, மா, தை போன்றவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். 'ஞா' என்பதும் தமிழில் உள்ள ஓர் எழுத்து ஒருமொழிச் சொற்களான 72 எழுத்துக்களில் ஒன்று.

ஞா’ என்பது கட்டு, பொருத்து, பொருந்து, திணிவு, திண்மை என்பவற்றைக் குறிக்கும்..

ஞால் கைம்மா என்பது யானையின் ஒரு பெயர் [தொங்கும் கையைஉடைய (துதிக்கை) விலங்கு].

ஞால் =  தொங்கும், தொங்குகின்ற
அம் = அழகு 
ஈரெழுத்து ஒரு மொழி (சொல்) ஆன இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து ஞால் + அம் = ஞாலம் ஆகியது. தமிழில் உள்ள காரணப் பெயர்களில் ஞாலம் என்பதும் ஒன்றாகும்.

உலகம் அந்தரத்தில் தொங்குவதை அறிந்தே பண்டைத்தமிழர் ஞாலம் என்ற சொல்லால் அழைத்தார்கள் என்பதற்கு அச்சொல்லே எடுத்துக்காட்டாகும். அதனால்  ஞாலம் என்ற சொல் பண்டைய தமிழனின் விஞ்ஞான அறிவையும் எடுத்துச் சொல்கிறது.. அதாவது 'அந்தரத்தில் தொங்கும் அழகே' இவ்வுலகம் என்பதையே 'ஞாலம்' எனும் தமிழ்ச்சொல் சொல்கிறது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment