Monday, 25 February 2013

மாசிமகம் அன்று மயன் வடித்த நடராசர்



பண்டைய மனிதன் இயற்கையிடம் இருந்து புதுப்புதுப் பாடங்களைக் கற்றான். இயற்கையின் நுட்பங்களை இன்றைய மனிதனாலும் முழுமையாக அறிய முடியவில்லை. எனவே அன்றைய மனிதரின் நிலை எப்படி இருந்திருக்கும்? எனினும் அவன் கற்ற பாடங்கள் இயற்கையைப் பற்றி அவனைச் சிந்திக்க வைத்தது. சிந்தனையின் ஆற்றலால் இயற்கையை ஆராயமுற்பட்டான். அதன் விளைவாக அவனைச்சூழ இயற்கை போட்டிருந்த புரியாத புதிரான முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினான். தன்னால் அவிழ்க்க முடியாது மாபெரும் புதிராய் தோன்றிய இயற்கையின் சீற்றத்தைக் கண்டு பயந்தான். தனது சக்தியின் ஆற்றலுக்குள் அடங்காத இயற்கையின் சக்தியைக்கண்டு பயந்த மனிதன் அதனை வழிபடத் தொடங்கினான்.

இயற்கையை வழிபட்ட போதும் இயற்கையைப் பற்றிய சிந்தனையை மனிதன் நிறுத்தவில்லை.  இடியாய், மின்னலாய், மழையாய், வெள்ளமாய், கடல் கோளாய், புயலாய், சூறாவளியாய், பனியாய், குளிராய், வெப்பமாய், நெருப்பாய், பூகம்பமாய், பாம்பாய், யானையாய், விலங்காய், பறவையாய் பூமியில் அவனைத்தாக்கிய இயற்கையின் எல்லாவடிவங்களையும் ஆராய்ந்தான். பூமியையும் தாண்டி மனிதனின் சிந்தனை விரிந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அண்ட கோளங்கள் என அவன் பார்வையும் விரிந்தது.

நாம் தமிழர்கள், ஆனால் எங்கள் சரித்திரம் என்ன? என்பது எங்களுக்குத் தெரியாது - தெரியவும் கூடாது, என்று கங்கணம் கட்டி வாழும் கூட்டத்தார் ஒரு புறம் இருக்க, பழங்கதை பேசிப்பேசியே தமிழன் அழிந்தான் என்று புலம்புவோர் மறுபுறம் இருக்க, ‘பழமை பேசி செழுமை தேடு” என்னும் முதுமொழிக்கு இணங்க ஆடலான் ஆகிய நடராசனின் வரலாற்றின் வாயிலாக ஈழத்தமிழர் வாழ்வின் பொற்காலத்தை - தொன்மையை சிறிது எடுத்துக் காட்டப் போகிறேன்.

இதிலே முழுமையாகத் துலங்கப் போகிறவர்கள் ஈழத்தமிழர்களே. இன்று உற்றார் பெற்றார் இன்றி வீடற்று, நாடற்று மாற்றான் நாட்டு மண்ணிலே சிலப்பதிகாரம் கூறும் ‘புலம் பெயர் மாக்கள்’ போல் வாழும் நிலை வந்துவிட்ட போதும் ஈழத்தமிழரின் அறிவியல் (விஞ்ஞான), அருளியல் (சமய) தத்துவ விளக்கங்களை உலகுக்கு எடுத்தியம்ப இருப்பது இந்த ஆடலான் வடிவான நடராசத் திருவுருவமே.

நடராஜ வடிவத்தை உலகுக்கு முதன் முதல் அறிமுகம் செய்தவன் மயன் என்னும் பழந்தமிழ் சிற்பி. அவன் ஈழத்தின் வடமேற்கே இருக்கும் மாந்தையை தலைநகராகக் கொண்டு உலகின் வடமேற்குப் பாகத்தை ஆண்ட தமிழ் அரசன். ஈழத்தை மயன் ஆண்டதை இதிகாசங்கள் மட்டுமல்ல விஸ்வபுராணம், மாந்தை மாண்மியம், மாந்தைப் பள்ளு, உலக சரித்திரம் (H G Wells), An Historical Political and Statistical Account of Ceylon (Charles Pridham) போன்ற நூல்களும் எடுத்துச் சொல்கின்றன. 
மயனின் வழித்தோன்றலான நல்லியக்கோடன் இலங்கையை ஆண்டதை
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்”      
                                        - (சிறுபாணாற்றுப்படை: 120 - 123)
என சங்கப்புலவரான நல்லூர் நத்தத்தனார் புகழ்கின்றார்.

மயனே தமிழர்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, வானியற் கலை, மரக்கல கலை போன்ற கலைகளின் முதலாசிரியன்.  அவன் இயற்றிய ‘மயமதம்’ எனப்படும் நூல் அறிஞர்களாலும் சிற்பிகளாலும் இன்றளவும் போற்றப்படுகின்றது. அவன் எக்கலையிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ்க் கலைநூல்கள் சொல்கின்றன.

இந்திரவிழாவில் அமைக்கப்பட்டிருந்த தோரண வாயில்களும், மண்டபங்களும் மயனால் சொல்லப்பட்ட விதிமுறைப்படி, மரபு வழுவாது கட்டப்பட்டதால் அறிஞர்களால் புகழ்ந்து பேசப்பட்டதென சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மயனின் பெருமையைப் பேசுகிறார். அதனை  

“மயன் விதித்துக் கொடுத்த மரபின் இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்”  
                                                      - (சிலம்பு - 108 -109)
என அவர் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளதால் அறியலாம்.

மயன் எவ்வாறு ஆடலான் வடிவத்தை உருவாக்கினான் என்பதை இன்றைய விஞ்ஞானக் கருத்துகளுக்கு அமையவே கூறுகிறான். சூரியனின் ஒளிக்கதிரிலுள்ள துகள், ஒரு கனபரிமான வடிவாக இருக்கிறது. அதனுள் மிளிர்வது ஒளியே. இவ்வொளிக்கட்டியை சிற்சபை அல்லது சிற்றம்பலம் என்றும் அதனுள்ளே இருக்கும் ஒளியை மூலம் (மூலப்பொருள்) என்றும் மயன் சொல்கின்றான்.


அந்த மூலப்பொருளினுள் இருக்கும் ஒளியானது ஒடுங்கி விரியும் தன்மையானது. அம்மூலப் பொருள் இடம் இருந்து வலமாகச் சுழல்கின்றது. அச்சுழற்சியை அவன் காலம் என்கிறான். அக்கால ஓட்டம் ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும் அந்த சீரான ஓட்டத்தை சீலம் எனவும் சொல்கின்றான். அந்த சீரான ஓட்டமுடைய துகள்களின் சேர்க்கையால் பல உருவங்கள் - வடிவங்கள் - பொருட்கள் தோன்றுகின்றன எனவும் அவற்றை கோலம் என்றும் குறிப்பிடுகிறான். அந்தக் கோலங்களே ஞாலங்களை தோற்றுவிக்கின்றனவாம். 

விண்வெளியிலுள்ள நட்சத்திரங்களையும் கோளங்களையும் உண்டாக்கும் நெபுலாக்கள் கூட அண்டவெளியின் வளியும் தூசியும் சேர்ந்த திரட்சியே என்பது இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு சொல்லும் கருத்தாகும். வளியும் தூசியும் சேர்ந்த அத்திரட்சி, தன்னீர்ப்புச் சக்தியால் ஒன்றாக இணைந்து சுற்றி, உப்பி கோளமாக மாறும் என்கின்றனர். இத்தகைய கருத்தையே மயனும் ஞாலத்தின் தோற்றம் என்று இன்னொரு விதத்தில் சொல்கிறான்.


அவன் கூறிய துகளை இன்று நாம் அணு என்று அழைக்கின்றோம். அதாவது அணுவிலுள்ள மூலம் கால ஓட்டத்தால் சீலமாகி, அச்சீலத்தால் கோலங்களை உருவாக்கி ஞாலத்தை ஏற்படுத்துகிறது எனவிளக்குகிறான். இத்தகைய விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறும் மயன் தொடர்ந்து, மூலம் (மூலப்பொருள்) தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒருவிசையை ஏற்படுத்தி காலத்தை (காலமாகடவுளை) உண்டாக்கி, அதனைக் கட்டுப்படுத்தி சீலமாக்கி அதிலிருந்து கோலங்களை உருவாக்கி ஞாலங்களைப் படைத்துக் கொள்கின்றது எனக்கூறி மூலப் பொருளே ஞாலமாக விரிகின்றது எனும் சைவசமயக் கொள்கையையும் எமக்குச் சொல்கின்றான்.

அணுவின் உள்ளிருந்து ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி, அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த வடிவமே இன்று உலகம் போற்றும் ஆடலான்[நடராசர்] வடிவமாகும். அவன் விஞ்ஞான சமயக் கொள்கைகளை ஒன்று சேர்த்தே ஆடலான் திருவுருவை வடிவமைத்தான். நடராச வடிவத்தின் அறிவியல் தன்மையே இன்றைய மேற்குலக விஞ்ஞான அறிஞர்களையும் அதன் பக்கம் இழுத்திருக்கின்றது. அதனாலேயே European Center for Nuclear Research (CERN) வரை இரண்டு மீற்றர் உயரம் ஆன ஆடலான் திருவுருவம் சென்றிருக்கிறது. அதன் புகழ் அங்கிருந்து NASA வுக்கும் சென்றுவிட்டது.  


மயன் ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்) தனித்தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராசத்திருவுரு என்கின்றான். மாந்தை மயன் நடராச திருவுருவை மரகதக்கல்லில் செய்தான். நடராசவடிவமும் பீடமும் சேர்த்து ஏழு அடி உயரமான மரகதக்கல்லால் ஆன அத்திருவடிவம் உத்தரகோசமங்கையில் இருக்கிறது. 

உத்தரகோசமங்கையில் உள்ள நடராச வடிவத்தின் தலையில் கங்கை இல்லை. கங்கைபற்றிய எண்ணமும் கருத்தும் தமிழரிடம் பரவமுன்னர் இந்த நடராச சிலை செய்யப்பட்டது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும். மரகத நடராசரின் இடையில் புலித்தோலும் இல்லை. இடுப்பிலோ, கழுத்திலோ பாம்பும் இல்லை. இதுவே தொன்மையான நடராசர் என்பதை இவையாவும் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன்  உத்தரகோசமங்கை இன்றும் 'ஆதிசிதம்பரம்' என்றே அழைக்கப்படுகின்றது. 

மாந்தைக்கு வடமேற்கே இருக்கும் உத்தரகோசமங்கை மயனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக  இருந்ததை மாந்தை மாண்மியம் கூறுகிறது. எனவே எழில்மிகு நடராசவடிவை ஒரு தமிழனான மயன் வடிவமைத்தான் என்றால் அவனின் காலத்திற்கு முன்னர் தமிழர் கலைகளும் பண்பாடும் எவ்வளவு உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும் அதுவும் ஈழத்தில். இது ஆராயப்பட வேண்டிய விடயம். 

மயனே சிற்றம்பலத்துள் [துகள் - அணு] நின்று ஒளிரும் மூலப்பொருளை நடம்புரியும் ஒளிநடராசனாக பரம்பொருளாய் இவ்வுலகத்திற்கு அறியத்தந்தவன். ஈழத்தமிழ் மன்னன் ஆன மயன் உயிர்ப்பும், உணர்வும், இசையும், நடமும், காலமும் விளக்கும் நடராசவடிவை ‘மாசிமகம்’ என்னும் முழுமதி நாளன்று இந்த உலகிற்கு உவந்தளித்தான். ஆதலால் தமிழர்கள் மாசிமகத்தை ஒரு பெருநாளாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டின் பிறப்பிடமாக ஈழமும் ஈழத்தமிழரும் விளங்கினார்கள் என்பதற்கு ஈழத்தமிழ் அரசனான மயன் அமைத்த ஆடலான்[நடராசர்] சிலையும் அவன் எழுதிய சிற்பச்செந்நூல் போன்ற நூல்களும் சான்று பகர்கின்றன. இதன் உண்மைகளை அவன் எழுதிய நூல்களுடன் மாந்தை மாண்மியம், மாந்தைப் பள்ளு போன்ற நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இனிதே, 
தமிழரசி.

குறிப்பு:
கலசம் இதழில் 1994ல் ஆடலான் என்ற தலைப்பிலும், இலண்டன் சுடரொளியில் 2008ல் பண்டைத் தமிழர் கலைகள் என்ற தலைப்பிலும் நான் எழுதியவற்றை இதில் சேர்த்துள்ளேன்.

No comments:

Post a Comment