Wednesday 6 February 2013

கண்கள் உறங்கிடுமா? - பகுதி 2




















அல்லைப்பிட்டி தொடக்கம் மன்னார் வரையுள்ள வடமேற்குக்கடற்கரை ஓரம் நீங்கள் என்றாவது பயணம் செய்து பார்த்திருக்கின்றீர்களா? அப்படி பயணம் செய்வீர்களாயின் கடற்கரைஓரமாக இடையிடையே பல மணற்குன்றுகளையும் கற்பாறைகளையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு மணற்குன்று பூநகரி - மணித்தலை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே இருக்கின்றது. கடலோடு இருக்கும் அந்த மணற்குன்று ஏறக்குறைய பதினைந்தடி அடி உயரம் இருக்கும். அம்மணற்குன்றில் ஏறி, ஏறி கடலினுள் பாய்ந்து, பாய்ந்து நீந்தலாம்.  அப்படி ஏறி ஏறி பாய்ந்து நீந்திவிளையாடியது என்னைப் போல் உங்களில் பலருக்கும் பசுமையான நினைவாய் இருக்கலாம். 

அக்கால ஈழத்தின் மாந்தையின் வடமேற்குக் கடற்கரையின் கடலினுள் பாய்ந்து சங்ககாலத்துப் பெண்களும் நீந்தி விளையாடி மகிழ்ந்ததை சங்ககாலப் புலவராகிய அம்மூவனார்  
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்,
வேந்து அடு மயக்கத்து, முரசு அதிர்ந்தன்ன,
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடும், பல்பூமரீஇ ஆர்த்த,
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்,
கடல் கெழு மாந்தை அன்ன”                  - (நற்றிணை: 395)
என மிகத்தெளிவாகப் படம் பிடித்து நற்றிணையில் காட்டியுள்ளார். 

அம்மூவனார் இந்தப்பாடலில் கடும்  போர்புரியும் யானையும், நெடிய தேரும் உடைய குட்டுவன், மற்றைய அரசர்களுடன் போர் செய்யும் போது  முரசு அதிர்வது போல உயரமான மேடுகளில் இருந்து, கடலினுள் பாய்ந்து நீந்தி விளையாடும் பெண்கள் அணிந்திருந்த, பலவகையான பூக்களை ஒன்றாகத் தின்ற பசுக்கள், மீண்டும் தமது இருப்பிடத்திற்கு வரும் பேரோசை[பேரிசை] உடைய மாலைநேர கடல்வளம் பொருந்திய மாந்தை போல் என[அன்ன], ஈழத்து மாந்தையின் கடல்வளத்தையும் சொல்லி மகிழ்ந்துள்ளார். 

இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தமிழ்க்கன்னியர் சுதந்திரமாக ஆடித்திரிந்து, பாய்ந்து நீந்தி விளையாடிய கடல்கெழு மாந்தை எங்கே? கடற்கரை எங்கே? சிங்களப் பெண்கள் இரண்டாயிர வருடங்களுக்கு முன் இக்கடலில் நீந்தி விளையாடியதற்கு ஆதாரம் காட்டமுடியுமா? சிங்களம் என்ற மொழியே தோன்றாத காலத்தில் எப்படி சிங்களப் பெண்கள் இருந்திருப்பர்? இந்த சிறிய வரலாற்று உண்மைகூட இன்றைய மானுடர் பலருக்கு புரியாதிருப்பதே பெருவிந்தையாகும். இவற்றைச் சிந்தித்தால் கண்கள் உறங்கிடுமா?   
பாரதியார் மேல் கொண்ட காதலால் அவரின் பாடல்களை மிகச்சிறுவயதிலேயே சுவைத்தவள் நான். எனினும் அவர் மேல் எனக்கு இரண்டு விடயங்களில் சிறிய நெருடல் உண்டு. ஒன்று ‘சிங்களத்தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்’ எனப்பாடியது. இலங்கையின் பண்டைய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உலகமொழிகளால் இலங்கை கிட்டத்தட்ட அறுபதுக்கு மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முன் அழைக்கப்பட்ட  பெயர்களில் 90%  பெயர்கள் தனித்தமிழ்ப் பெயர்களே. வேற்று மொழிபேசுவோரின் உச்சரிப்பால் தமிழ்ச்சொல்லின் ஒலிவடிவம் மாறினும் அவை தமிழ்ச்சொல் என்பதை நாம் அறியலாம். அப்படி இருக்க பாரதியாரால் எப்படி சிங்களத்தீவு எனச் சொல்ல முடிந்தது? 

இரண்டாவது ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்தது’ எனப் பாடியது. பெண்களின் விடுதலைக்காகப் பாடினாலும் எனக்கு அவர் கருத்தின் மேல் உடன்பாடு இல்லை. அவர் காலத்தில் எத்தனை வீதம் தமிழர் பெண்களை வீட்டுக்குள் பூட்டிவைத்திருந்திருப்பர்? இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அதிகமிருந்திருக்கலாம். காலங்காலமாக உலகம் முழுவதும் ஒருசிலர் பெண்களை சிறைவைக்கத்தான் செய்கின்றனர். அதனாலேயே திருவள்ளுவரும் “சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்?” என இவ்வுலகைக் கேட்டு “மகளிர் நிறை காக்கும் காப்பே தலை” என பதிலும் தந்திருக்கிறார்.

உலகில் வாழும் மற்றைய இனங்களைப் போல தமிழ்ச்சாதி பெண்களை அடிமைப் படுத்தவில்லை என்பதற்கான ஆதாரத்தை தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் நிறையவே தருகின்றன. சிந்தனைத் தெளிவும் மனத்திடமும் மிக்கவர்களாக பண்டைத் தமிழ்ப் பெண்கள் வாழ்ந்ததாலேயே திருவள்ளுவர், திருமூலர் போன்ற ஒப்பற்ற பல சான்றோர்களை உலகம் பெற்றது. ஔவையார், நச்செள்ளையார், காரைக்கால் அம்மையார் போன்ற பல தமிழ் பெண்களின் அறிவுரைகள் இன்றைய மானுடர்க்கும் வழிகாட்டுபவையாக இருக்கின்றன. பெண்கள் அடிமையாக வாழ்ந்திருந்தால் அவர்கள் பிள்ளைகள் எப்படி தத்துவ முத்துக்களை கொட்டியிருப்பர்?  ஆனால் இன்றைய தமிழர், பெண்களை இழிவுபடுத்தி   போகப்பொருளாகக் கருதுவதைக் காண கண்கள் உறங்கிடுமா?  

ஈழத்துப் பெண்களும் சுதந்திரமாகவே வாழ்ந்தனர். தன் வீடு, தன் பிள்ளை, தன் குடும்பம் எனவாழாது, தன் மொழி, தன் இனம், தன் நாடு என வாழ்ந்தனர். அதனாலேயே பல கன்னியர் கரும்புலிகளாகவும் போராளிகளாகவும் ஈழத்தமிழர் விடுதலைக்காக களம் காணமுடிந்தது. அப்படி களம் கண்டவர்களில் எத்தனை பேர் இன்று இருக்கின்றார்? யார் சொல்வார்? யார் அறிவார்? இசைப்பிரியையாய், நாட்டியப்பிரியையாய் ஊடகத்துள் புகுந்து எம் அகங்களை ஊடுருவிய இசைப்பிரியா போன்ற எத்தனை எத்தனை இளநெஞ்சங்கள் ஈழத்தின் ஊடக வானில் சிறகடித்து பறந்தன. அவர்களின் நெஞ்சங்ளில் கனன்ற தீ எங்கே? அக்கினிக் குஞ்சாய் விடியலுக்காக எங்கோ ஓர் இடத்தில் காதிருக்கின்றதோ! 

ஈழத்தமிழர் வரலாற்றிலே 2009ம் ஆண்டு நாம் காவு கொடுத்த இளம் பிஞ்சுகள் ஒன்றா! இரண்டா! நூறா! எத்தனை எத்தனை ஆயிரம்? கண்பிதுங்கி, கையொடிந்து, குடல் தொங்கக் கால் கழன்று, மூளை சிதறிக் கிடந்த கோலங்கள் எத்தனை பார்தோம்? வேகுமா எம்நெஞ்சம்? ஆறுமா அந்த வடு?  அவை மட்டுமா பார்த்தோம்? நிர்வாணம் ஆக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு இருந்த நிலையிலும் முதுகின் பின்னே நின்று, சுட்டு கொன்று, படம்பிடித்து தம் வீரத்தை பார்த்து மகிழ்ந்தனரே. இறந்த பெண்ணின் முலை அறுத்து மகிழ்வது. மூளை சிதறிக்கிடக்கும் பெண்ணை பந்தாடி மகிழ்வது. அடுக்குமா அந்தச்செயல். போதிமரத்து புத்தன் சொன்னது, போதை மனத்தாருக்கு புரியுமா? இத்தகைய செயல்கள் தொளாயிர வருடங்களுக்கு முன்பும் நடந்திருக்க வேண்டும். அதனாற்றான் கலிங்கத்து பரணி பாடிய சயங்கொண்டார் ‘முழுத்தோலை ஆடையாகப் போர்க்கும் புத்தமதப் பேய்க்கு, மனிதமூளை போட்டுச் செய்த கூழை அதன் மணம் மாறாது, நாக்குழற, கழுத்து முட்ட ஊற்றும் படி’ பாடினார் போலும். 

இவையாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று உலகவரலாறு காணாத ஒரு செயலை இலங்கை இராணுவம் செய்ததே! உலகெங்கும் நீங்கள் இடுகாடுகளை, சுடுகாடுகளை பார்த்திருப்பீர்கள். அநேகமாக அவை பாழ்நிலமாகவே இருக்கும். புறநானூற்றுப் பாடல் ஒன்று சுடுகாட்டைக் காட்டி அதன் பெருமையைக் கூறுகிறது.
“களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு, பேழ்வாய் 
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு,
அஞ்சுவதன்று, இம் மஞ்சுபடு முதுகாடு,
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்பு அறியாதே”        - (புறம்: 356)

கள்ளிச்செடிகள் மிகுந்து நிற்கும் பரந்த பாழ்நிலத்தே, பகலிலும் ஆந்தை அலற பெரிய ஈமத்தீயும், அறிவு பேதழித்த மகளிருமாக அச்சத்தை தரும், புகைமண்டிய சுடுகாடு. காதலரின் நினைவைச் சுமப்போர் அழுதகண்ணீர், எலும்போடு கூடிய சுடலைச் சாம்பலை, தணிக்கும். இறந்தோரை சுடலையில் நிமிர்த்திக் கிடத்துவதால், இறந்தோர் அனைவரது புறமுதுகையும் கண்டு, சுடலை உலக மனிதர்க்கு முடிவிடமாய் இருக்கிறது. சுடுகாட்டை புறமுதுகு காணவைத்து, வெற்றிகொள்பவரை இதுவரை சுடுகாடு கண்டு அறியாதது. அதாவது சுடுகாட்டோடு போர் செய்து அதை புறமுதுகு காட்டி ஓடவைத்து  வென்றார் எவரும் இல்லை.   

இதே கருத்தை தொல்காப்பியரும் இடுகாட்டை வாழ்த்துமுகமாக ‘காடு வாழ்த்து’ எனக் கூறியுள்ளார். உலகின் நிலையாமையைக் கூறி இடுகாட்டின் நிலைத்த தன்மையை உணர்த்துதல் காடு வாழ்த்தல் ஆகும்.
மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப் 
பலர்செலச் செல்லாக் காடுவாழ்த்தொடு      
                                                 - (தொல்.பொரு. புறதி: 77)
பரந்த உலகத்தின் இயல்பை (நிலை இல்லாத் தன்மையை) நாம் நன்றாக அறிவதற்காக, பலரும் இறந்து போக, தான்மட்டும் அழிந்து போகாதிருக்கும் இடுகாடு வாழ்த்துவது என்கின்றது தொல்காப்பியம்.  

பாருங்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களால் அறியப்பட்ட உண்மை இது. பண்டைய தமிழனின் சிந்தனையின் ஆற்றல் எவ்வளவுக்கு பண்பட்டிருந்தால் வாழ்வின் நிலையாமைக்கு  இப்படியோர் எளிமையான வரைவிலக்கணம் கூறி இருக்க முடியும். ஆனால் சுடுகாடுகளை குண்டு போட்டு அழித்தும், எமது மாவீரர் துயின்ற இல்லங்களை புல்டோசர் போட்டு அழித்தும் எக்காளம் இட்டது இலங்கை இராணுவம். மனிதரால் வெல்லமுடியாது என நினைக்கும்  சுடுகாட்டை, இடுகாட்டை வெற்றி கொண்டோம் என நினைப்போரை என்னென்பது? இதைக் கேட்ட பார்த்த கண்கள் எப்படி உறங்கும்?


ஈழத்து இளநெஞ்சங்கங்களில் ஈழவிடுதலைத் தீயை என்றும் அணையாது மூண்டு எழ வைத்தவர் புதுவைக்கவிஞன். உணர்ச்சிக் கவிஞன் புதுவையின் குரலைக் கேட்டு பதின்மூன்று ஆண்டுகள் புரண்டோடி விட்டனவே! எங்கே அந்தக்குரல்? தீராத தாகத்தோடு தமிழ் கொஞ்சிவிளையாடிய அந்தத் தமிழ் நெஞ்சம்கள் எத்தனை? எத்தனை? எங்கே அவை? எப்போது நம் நெஞ்சம் நினைவுகளை அசைபோடுவதை நிறுத்துகின்றதோ அப்போதே எமது உறங்காத கண்கள் உறங்கும். அதுவரை விண்ணில் பாய்ந்த விண்கலம் உலகைச் சுற்றிச்சுற்றிச் சுழல்வது போல எம் நினைவுகள் ஈழத்தைச் சுற்றிச்சுற்றிச் சுழல கண்கள் உறங்கிடுமா? காத்திருப்போம்.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment