Thursday 14 February 2013

குறள் அமுது - (55)



குறள்:
“எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு”                       - 1298

பொருள்:
காதலரை இகழ்ந்து சிரித்தால் தனக்கு இழிவாகும் என்று எண்ணி, அவருடைய திறமையையே உயிர்க்காதல் நெஞ்சம் நினைக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நெஞ்சொடு புலத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. மனதோடு ஊடல் கொள்ளுதலே நெஞ்சோடு புலத்தல் ஆகும்.

காதல் அது மிகமிக நுண்மையானது. அதேவேளை மிகவும்  வேடிக்கையானதும் கூட. ஏனெனில் காதலர் இருவரின் கருத்தும் ஒன்றாதலே காதலாகும். கருத்து ஒருமித்த காதலரிடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதில்லை. ஒருவரின் குறை மற்றவருக்கு தெரிவதில்லை. அத்தகைய காதலே உண்மையான உயிர்க் காதலாகும். 

காதலர் என்னும் போர்வைக்குள் வாழும் அத்தனை பேரும் கருத்து ஒருமித்தா வாழ்கிறார்கள்? காதல் பணத்துக்கு, பகட்டுக்கு, அழகுக்கு, அறிவுக்கு மட்டும் அல்லாமல் பொழுது போக்கும் செயலாக இருப்பது வேடிக்கை அல்லவா?

உயிர்க்காதல் என்பது காதலர்களின் நெஞ்சினுள் மலரும் மல்லிகைமலர் போன்றது.  அது நறுமணத்தை மட்டுமே பரப்பும். உயிர்க்காதலர்களின் நெஞ்சம் எப்படியிருக்கும் என்பதை திருவள்ளுவர் இத்திருக்குறளில் எடுத்துக் காட்டுகிறார். உயிர்க்காதல் நெஞ்சம் கொண்ட காதலனோ காதலியோ ஒருவர் குறையை ஒருவர் சொல்லி இகழ்ந்து சிரிக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் கொண்ட காதல், இருவர் உயிரும் ஒன்றோடு ஒன்று உணர்வால் வருடிய காதல். அத்தகைய காதலர் தமக்குத் தாம் குறைகூறி எள்ளி நகையாடில் அது அவர்களுக்கே இளிவாகும். ஆதலால் உயிர்க்காதலர் நெஞ்சம் தத்தம் காதலர் திறமையை, ஆற்றலை நினைத்துப் பார்க்கும்.

காதலர்கள் ஒருவர் குறையை ஒருவர் கூறி இகழ்ந்து சிரிக்காது, தத்தமது காதலரின் சிறப்பை  எண்ணிப் பார்ப்பதே உயிர்க்காதல் நெஞ்சின் சிறப்பாகும் எனக்கூறி  உயிர்க்காதலருக்கு திருவள்ளுவர் இக்குறளை பரிசாகத் தந்திருக்கிறார்.  

No comments:

Post a Comment