Thursday 7 February 2013

குறள் அமுது - (54)


குறள்:
“நகவல்லார் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்”                          - 999

பொருள்:
சிரித்து மகிழும் வல்லமை இல்லாதவர்க்கு இந்தப் பரந்த உலகம் பகற்பொழுதில் கூட இருளாகத் தெரியும்.

விளக்கம்:
இத்திருக்குறள் பண்புடைமை என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக இருக்கிறது. சிரித்து மகிழ்தலை நகல், நகுதல் எனும் சொற்களால் அழைப்பர். சிரித்து மகிழும் வல்லமையுடையோரே நகவல்லார். மனிதராகிய எமக்கு மனிதப்பண்பு என்னும் தன்மையால் கிடைத்த பெரும் கொடை சிரித்து மகிழ்தலாகும். நாம் ஒருவரோடு ஒருவர் பேசும் போது உதட்டளவோடு பேசாது, மனம் ஒன்றி மகிழ்ந்து பேசவேண்டும். அவ்வாறு சிரித்து மகிழ்ந்து வாழ்பவர்கள் தாமும் மகிழ்வோடு வாழ்ந்து பிறரையும் மகிழச் செய்வர். 

மனிதருக்கு வரும் தொற்று நோய்கள் போன்றவையே இன்ப துன்பங்கள். இன்பமான நிகழ்வுகளின் கலந்துகொள்ளும் பொழுது  இன்பமடைகிறோம். அதுபோல் துன்பமான நிகழ்வுகளின் போது துன்பப்படுகிறோம். இது மனித இயல்பு. மனம் மகிழ்ந்து சிரித்து வாழ்வதால் எமக்கு வரும் நோயும்  எம்மோடு நிலைத்து நிற்காது நீங்கிவிடும். அதனை உணர்த்தவே 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' எனும் பழமொழியும் உருவானது.    

ஞாலம் என்பது உலகம். இவ்வுலகம் கடலடி நிலம், கடலில்லா நிலம் எனும் இருவகை நிலங்களால் ஆனது. நீராலும் நிலத்தலும் ஆனது உலகமெனவும் கூறலாம். ஆதலால் உலகிற்கு இருநிலம் என்ற பெயரும் தமிழில் உண்டு. இக்குறளில் திருவள்ளுவரும் உலகை மாயிரு ஞாலம்   [மா+ இரு = மாயிரு] என்றார். 

பிறருடன் பழகி சிரித்து மகிழும் பண்பு இல்லாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகத் தெரிய வேண்டிய காரணம் என்ன? பகலில் கருப்பு நிறக்கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் இவ்வுலகு இருளாகத்தான் தெரியும். அது போலவே மற்றவரோடு அன்பாக சேர்ந்து சிரித்து பழகும் பண்பு இல்லாதவருக்கு, மனிதப்பிறப்பின் இயல்பே இன்பம் அடைதல் எனும் உண்மை புரியாது. அவர்களிடம் உள்ள சில பண்புகள், அவர்களது மனதை இருட்டடித்து இருளில் மூழ்க வைக்கின்றன.

இறுமாப்பு, கோபம், மூர்க்கம், மடமை, கொடுமை, பகைமை, பொறாமை, பேராசை, வஞ்சனை, அதிகார வெறி, சாதி வெறி, சமய வெறி, இன வெறி, தன்நம்பிக்கை இன்மை, செயல்திறன் இன்மை போன்ற எத்தனையோ விதமான பண்பின்மைகள் அறியாமை எனும் இருளாய் நம் ஒவ்வொருவரிடமும் சூழ்ந்திருக்கின்றன. அறியாமை இருளில் மூழ்கி இருப்போரால் எப்படி நகல் வல்லராய் வாய்விட்டு சிரித்து மகிழ முடியும்? வல்லமை என்பது உடல் வலிமையால் மட்டும் வருவதில்லை. சிரிப்பதுவும் வல்லமையே.

மகிழ்ச்சி பொங்க சிரித்துப் பேசிப்பழக முடியாதோருக்கு தீயபண்பு எனும் மனஇருள் எந்நேரமும் சூழ்ந்து இருக்கும். எனவே அவர்களுக்கு நல்ல பகற்பொழுதிலும் இப்பெரிய உலகம் இருண்டே இருக்கும். மகிழ்வுடன் சிரித்து வாழ்பவர் நெஞ்சம் எப்பொழுதும் ஒளியுடன் இருக்கும்  என்பதை இக்குறளால் தெளிவுபடுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment