Thursday 21 February 2013

குறள் அமுது - (56)


குறள்:
“கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை”                                         - 765

பொருள்:
எமனே சினந்து எதிர்த்து வந்தாலும், கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றலே படையாகும்.

விளக்கம்:
கூற்று - கூற்றுவன் - யமன். உடன்று என்றால் தீராக்கோபம். எங்கே போர்கள் இடம் பெறுகின்றனவோ, அங்கெல்லாம் கூற்றுவனின் தீராக்கோபம் கொப்பளிக்கும்.  உயிர்கள் குற்றுயிராய், குலை உயிராய், இரத்த ஆற்றில் மிதக்கும். ஊறுகின்ற கிணற்றிலும் உதிரம் ஊறும். ஓடுகின்ற நதியிலும் உதிரம் ஓடும். கண்பிதுங்கி கைகால் சிதறி பாலகரும் பாவையரும் பரிதவிக்க பாலும் கிணற்றில் தூக்கி எறியப்படுவர். உடல் துண்டிக்கப்பட்ட தலை இன்னோர் உடலின் மேல் இருந்து தன் உடல் ஆடி அசைந்து வீழ்வதைப் பார்க்கும். இது போர்களம் எங்கும் காலம் காலமாக நடைபெறும் காட்சியாகும். 

அதுவே நம் கண்முன்னால் நம்மவர்க்கு, நம் இனத்திற்கு, நம் தேசத்திற்கு, நடந்த போது கூற்றுவனையே கூரறுக்க மானமுள்ளவர் மனம் கொதிக்கவில்லையா? அந்தக் கொதிப்பு உண்டாக எது காரணமோ அதுவே கூற்று உடன்று மேல்வந்த நிலை. கூற்று உடன்று மேல் வந்த போது கொத்துக் குண்டுகளால் பல்லாயிரக்கணக்கான நம்மவர் உடல்கள் விழுந்து வன்னியை மயானபூமி ஆக்கிக் கொண்டிருந்தன. அதனை இங்கே தொலைக்காட்சியில் பார்த்து துடிதுடித்து அழுது உண்ணாது உறங்காது ஏங்கித் தவித்து உலகநாட்டின் வீதிகளிலே  நீதிகேட்டு நின்றதை மறந்திருக்க மாட்டீர்கள்.

வந்தோரை வாழவைத்த வன்னிமண், குருதிபடிந்த வறள்நிலமாய் இடுகாடாய் மாறுவதைப் பார்த்து, இனமானம் பெரிதென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடி இலண்டன் வீதியில் நடை போட்ட செயலே கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல். அந்த ஆற்றல் ஈழத்தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல உலகத் தமிழ் இனத்துக்கும் காலங்காலமாக இருக்கிறது. நாம் போர்வாள் ஏந்தத் தேவையில்லை அறிவு எனும் கூர்வாள் ஏந்தினாலே தோதும். கூடி எதிர் நிற்கும் ஆற்றலாகிய படையும் எம்மிடம் இருப்பதை திருவள்ளுவரே எமக்குக் காட்டித்தந்துள்ளார். 

படை என்றால் என்ன? எல்லோரும் கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல்(வீரம்) படை என்று கூறப்படும். கூற்றுவன் தீராக்கோபத்துடன் எம்மை எதிர்த்து வந்தாலும், நாமெல்லோரும் ஒற்றுமை என்னும் சங்கிலியால் கட்டுண்டு, கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் என்னும் படையைக் கொண்டு கூற்றுவனையே வெல்லலாம். ...... வெற்றி கொள்வோம்.   

No comments:

Post a Comment