Tuesday 1 January 2013

பண்டைத் தமிழரும் கடம்பும்



இறைவன் சந்நிதியில் நின்று நம்மவர்கள் நெஞ்சம் உருகி பக்திப்பாடல்களைப் பாடுவார்கள் நாமும் அவற்றைக் கேட்டு பக்திவசமாவோம். ஆனால் அப்பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைச் சிந்திக்கிறோமா? 
“நாள்என்செய்யும் வினைதான் என்செய்யும் எனைநாடிவந்த
கோள்என்செய்யும் கொடுங்கூற்று என்செய்யும் குமரேசர்இரு 
தாளும்சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் 
தோளும்கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே!”          
                                             - (கந்தரலங்காரம்: 38)
இது நம் எல்லோருக்கும் தெரிந்த கந்தரலங்காரப் பாடலாகும். இதன் கருத்து எவருக்கும் புரியும்.  ஆனால் கடைசி அடியில் வருகின்றதே ‘கடம்பும்' இந்தக் கடம்பு என்ன? எத்தனை பேருக்கு அது தெரியும். இது கூடவா தெரியாது? ‘முருகனுக்கு விருப்பமான கடம்ப மலர் மாலை’ என சிலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. அந்தக் கடம்பமலர் எப்படியிருக்கும்? முருகனை கடம்பமலர்  மாலையுடன் எந்தக் கோயிலிலாவது பார்த்திருக்கின்றீர்களா? எத்தனை பேர் ‘ஆம்‘ பார்த்தோம் என்று கூறுவீர்கள்? எங்கே போயிற்று இந்தக் கடம்பு?
‘காட்டூர் கடலே கடம்பூர் மலையே'                   
                                              - (திருமுறை: 7: 47: 1)

கடம்ப மரம்

என கடம்பூரை தேவாரத்திலும் பாடுவோம். கடம்பூரிலாவது கடம்பமரத்தை தேடினோமா? ஏன் இந்தியாவின் கடம்பூருக்கு போகவேண்டும்? இலங்கையில் இல்லையா? இல்லாவிடில் வள்ளிக்கு வாய்த்த மணவாளன் கடம்பமலர் மாலைக்குத் திண்டாடி இருப்பானே! இலங்கையின் மலைநாட்டு தலைநகரான கண்டியும் கடம்பூர் தானே!

இன்றைய கண்டியின் பண்டைய பெயர் செங்கடங்கல்’. குறுநாகல், திண்டுக்கல்  என்பன போல.  கல் இங்கே மலையைக் குறிக்கிறது. அதாவது செங்கடம்பு மலை. சிங்களத்தில் செங்கடகல என்பார்கள். மாலிக் கபூர் படையெடுப்பின் போது இலங்கை வந்த (கி பி 1311) மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி தன் சுயசரிதையில் - செங்கடம்கல் [‘செங்கடங்கல் நண்ணி’] என்று சொல்கிறாள். ஆனால் இன்றைய கண்டியின் ஒரு தேர்தல் தொகுதி செங்கடகல என்ற பெயரைத்தாங்கி நிற்கிறது.    

வெண்கடம்பு மலையான திருப்பதி, ‘வெங்கடங்கல்’ ஆக இருந்தது. பின் ‘வெங்கடம்’ ஆகி, ‘வேங்கடம்’ ஆக மாறிநிற்கிறது. வெங்கடம்பு ஈஸ்வரர் இப்போது அங்கே திருப்பதி வெங்கடேஸ்வரராய் நிற்கிறார். அக்காலத்தில் வெண்கடம்பு மாலை அணியும் முருகனின் கோயிலாகவே திருப்பதி இருந்தது. தற்போது நாம் காணும் வெங்கடேஸ்வரரும் நகைகளுக்கு உள்ளே முருகனாய் இரு கரங்களுடன் இருக்கிறார். கீழேயுள்ள படத்தில் இருக்கும் மூலவரின் தோளில் சங்கு சக்கரத்தை வைத்து திருப்பதியானாய்க் காட்டுவர். அதுவும் எம்மைவிட்டுப் போய்விட்டது.
திருப்பதி மூலவர் 

கடம்பமரத்தை மரா அம், மரா மரம் என்றெல்லாம் சொல்வார்கள். இராமர் ஏழு மரா மரங்களைத் துளைத்துச் செல்ல அம்பு எய்த பின்னரே வாலியைக் கொன்றதாகப் படித்திருப்பீர்கள். அவையும் கடம்ப மரங்களே. ஒருகாலத்தில் தெற்காசிய நாடுகளில் கடம்பமரங்கள் நிறைய இருந்ததன. இன்றும் இருக்கின்றன. கடம்பில் (Barringtinia) பலவகை உண்டு. இது ஏழு முதல் முப்பது மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது. கடம்பமர இலை, காய், பழம், கொட்டை, பட்டை யாவுமே மருந்தாகப் பயன்பட்டுள்ளது. இதன் கொட்டையைக் கல்லில் தேய்த்து எடுத்த தூளை நோய்க்கு ஏற்றவாறு நீர், தேன், இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஒன்றில் கலந்து கொடுத்துள்ளார்கள். இன்றைய மருத்துவ ஆராச்சியாளர்கள் இதில் நோவு தீர்க்கும் இராயாசனப் பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை ஆய்வு செய்கிறார்கள். 

அன்றைய தமிழர் கடம்பமரத்தின் உட்பட்டையின் நாரில் கயிறு திரித்து யானையைக் கூடக் கட்டி இருக்கிறார்கள். கடம்பமர இலையின் சாற்றை நீரில் ஊற்றி மீன்களைப் பிடித்திருக்கிறார்கள். அதனால் கடம்பமரத்தை மீன்கொல்லி என்றும் கூறினர்.

சங்க இலக்கியம் யாவுமே கடம்பமலர் பற்றிப் பேசுகின்றன. நேரில் பார்க்காத ஒன்றை முழுமையாக வர்ணிக்க முடியாது. சங்ககாலப் புலவர்கள் சிலர் இன்றைய தாவரவியலாளர் போல் கடம்பமலரை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் செங்கடம்பு (Barringtonia Acutangula), வெண்கடம்பு (Barrintonia Calyptrata) என இருவகைக் கடம்பைக் கூறியுள்ளனர்.

செங்கடம்பு மலர்

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கான் மராஅத்த வரிநிழலிருந்தோர்'       - (ஐங்குறுநூறு: 381) 

செங்கடம்பு மரநிழலில் இருந்து பசுமையான நெல்லிக்காயை பலாப்பழத்துடன் சங்கத்தமிழர் உண்டதை ஐங்குறுநூறு காட்டுகிறது. நாமும் சங்கத்தமிழர் போல நெல்லிக்காயும் பலாப்பழமும் கலந்து உண்டு பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் நெருப்பைப் போன்று தகதகக்கும் நிறமுடைய பூஞ்சினைகளை உடையதாக மராமரம் (Flame Tree) இருந்ததை மலைபடுகடாம் என்னும் சங்க இலக்கிய நூல் 
எரிகான்றன்ன பூஞ்சினை மரா அத்து’       
                                    - (மலைபடுகடாம்: 498)
எனச்சொல்கிறது. கடம்ப மலர்கள் நிறமுடையதாக இருந்ததை 
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன’           
                                   - (பெரும்பாணாற்றுப்படை: 203)
பெரும்பாணாற்றுப்படையும் காட்டுகிறது.
                                    
               வெண்கடம்பு மலர்                     

 பரிபாடலில் இளம்பெருவழுதியார், 
“மரா மலர்த்தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ் பிழிய       
                                       -(பரிபாடல்: 15: 2: 3)
என ‘அசைந்து ஆரவாரத்தோடு வீழும் அருவியின் நுரை மராமலர் மாலையைப்போல வெள்ளையாக’ இருந்ததாகக் கூறுகிறார். வெண்கடம்புமலர் மாலையை இப்பாடல் சொல்கிறது.
                                             வலமாகச் சுழன்று கீழிறங்கி வரும் மலர்

‘வலமாகச் சுழன்று ஒவ்வொரு பூவாகக் கீழிறங்கி வந்து தொங்குகின்ற வெள்ளை நிறக் கடம்ப மலர்க்கொத்தைப் பறிக்க, ஒருவன் உயர்ந்த கடம்பமரத்தின் சிறுகிளையைப் பற்றிப்பிடித்தானாம்’ என்கின்றது ஐங்குறுநூறு. 
“நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு”                              
                                                 -(ஐங்குறுநூறு: 383)
கடம்பம் பூங்கொத்து வலமாகச் சுழன்று தொங்கும் என்பதை கல்லாடனாரும் அகநானூற்றில் கூறியுள்ளார்.
வலம்சுரி மராஅத்து சுரம் கமழ் புதுவீ”                        
                                                   -(அகம்: 83: 1)
 [கடம்ப மலர்க்கொத்தில் உள்ள பூக்கள் ஒவ்வொன்றாக வலமாகச்சுழன்று கீழிறங்கி வருவதை மேலேயுள்ள செங்கடம்பு மலர்ப்படத்தில் பார்க்கவும்.]

Photo: source Aambal Magazine
செங்கடம்பும் வெங்கடம்பும் வளரும் இடங்கள்

கடம்பு நீர்க்கரையில் வளரும் என்பதை சிறுபாணாற்றுப்படை
நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர் கடம்பின் துணை ஆர் கோதை”                         
                                   -(சிறுபாணாற்றுப்படை: 68 - 69)
என்று கூறுகிறது. 

செழித்து வளர்ந்த கடம்ப மரத்திலிருந்து நறுமணத்துடனும் நிறைந்த தேனுடனும் கட்டிய மலர்மாலை போல் தொங்கும் கடம்பம் பூங்கொத்தை யார்தான் மலர்மாலையாக அணிந்து கொள்ள மாட்டார்கள்? முருகன் அணிந்ததில் வியப்பே இல்லை! இரண்டு பூங்கொத்தை முடித்தாலே அழகிய மாலையாக - ஆண்டாள்மாலை போல் வரும்.

முருகன் இருக்கும் இடங்களை நக்கீரர்
“சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கடம்பும்”                    
                                     -(திருமுருகாற்றுப்படை: 225) 
என்று திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். இப்படி கடம்பு மரத்தில் வீற்றிருந்த முருகனை,
“மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம் பூக்கொண்டு ஏத்தி”                                    
                                      -(முத்தொள்ளாயிரம்: 90)

கடம்பம் பூ தூவித்தொழுது,தோளோடு தோள் சேர்த்தும், கையோடு கைகோர்த்தும் மன்றங்களில் குரவைக் கூத்தும் ஆடி இருக்கிறார்கள்.
“கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணி தழூம் பிணையூஉ
மன்று தொறும் நின்ற குரவை                                 
                                    -(மதுரைக்காஞ்சி: 613 - 615)

இவை மட்டுமல்லாமல் கடம்பமரம் சங்கத்தமிழரின் பொருளாதாரத்திற்கும் கைகொடுத்திருக்கிறது. அதனால் அரசர் கடம்பமரத்தை தமது காவல் மரமாகப் போற்றினர். சங்ககால அரசர்கள் தமது வெற்றியின் பெருமிதத்தைக் காட்ட, பகை அரசர்களின் காவல்மரமான கடம்பமரத்தை வெட்டி முரசு செய்திருக்கிறார்கள். அதனை
“சால் பெருந்தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன”                   
                                          - (அகம்: 347: 3 - 5)
என அகநானூறு சொல்கிறது.

பண்டைத் தமிழர் பேணிய கடம்ப மரத்தையும், கடம்பம் பூ தூவித் தொழுது மன்றங்களில் ஆடிய குரவைக் கூத்தையும் மறந்ததால், செங்கடம்கல் (செங்கடகல), வெங்கடம்பு வெங்கடேஸ்வரன் (திருப்பதி} என்ற பெயர்களையும் மறந்து, ஊர்களையும் மறந்துவிட்டோம். 
இனிதே,
தமிழரசி.

7 comments:

  1. கடம்பு பற்றிய அருமையான கட்டுரை. மிகப்பயனுடையதாக இருந்தது. நன்றி.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரை......நான் வணங்கும்
    முருகனைப் பற்றியும் முருகன் அணியும் கடம்பு பற்றியும்...நன்றி....

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை

    ReplyDelete