Sunday, 20 January 2013

கண்கள் உறங்கிடுமா? - பகுதி 1


கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் மட்டுமா எப்பபோதும் உறங்காது கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன? பசியுள்ளவன் கண்களும், பிணியுள்ளவன் கண்களும், துன்பத்தால் துடிப்பவன் கண்களும், தனது குறிக்கோளை அடைய ஏங்குபவனது கண்களும் ஏன் பொறாமையும் வஞ்சகமும் உள்ள கண்கள் கூட உறங்குவதில்லை. 2009 மே மாதம் 18ம் திகதியின் பின் எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களின் கண்கள் இன்னும் உறங்காது விழித்திருக்கின்றன தெரியுமா? ஏனெனில் அவை யாவும் காதற்கண்களே. தன் நாட்டின் மேலும், தன் மொழியின் மேலும், உற்றார், பெற்றார், உறவுகள், குழந்தைகள் மேலும், மனிதர்கள் மேலும் வைத்த காதலால் எமது கண்கள் உறங்கிடுமா?

இப்படி காதல் வசப்பட்டு உறங்காத கண்ணை குறுந்தொகையும் சொல்கிறது. காதல் வசப்பட்ட சங்க காலத் தலைவி ஒருத்தி தன் தோழியிடம், தோழியே! வெண் நாரைகள் (குருகு)  வாழ்ந்து உறங்கும், இனிய நிழலைத் தரும் புன்னை மரம், கரையை மோதி உடைக்கும் கடல் அலை எற்றும் திவலையால் அரும்பி துளிர்விட்டு வளரும். அத்தகைய இனிய நீருள்ள மென்மையான கடற்கரையையுடைய தலைவன் என்னைப்  பிரிந்தான். [மெல்லம் புலம் என்பது மறவன் புலம் என்பது போன்றது. ‘புலம்’ - நெய்தல் நிலத்தைக் குறிக்கும்.] ஆதலால் பல இதழ்களையுடைய  தாமரை மலர் போன்ற என் கண்கள் உறங்கிடுமா?  காமநோய் என்பது அதுவோ!’ எனக்கேட்பதாக குறுந்தொகை சொல்கின்றது.அதுகொல் தோழி! காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பின் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவோ.           
                                     - [குறுந்தொகை - 5]

இப்பாடலை இயற்றிய சங்ககாலப் புலவரின் பெயர் நரிவெரூஉத் தலையனார். சாவகச்சேரி - தனங்கிளப்பில் இருந்து  பூநகரி செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக உள்ள ஒரு சிற்றூரின் பெயர் நரிவெரூட்டித்தலை. மண்ணித்தலை, மிகுந்தலை என்பது போல் இதுவும் இடப்பெயர் ஆகும். பூநகரியில் உள்ள ஓர் இடமே மண்ணித்தலை. 1989ம் ஆண்டு இந்த மண்ணித்தலை என்ற இடத்திலேயே புராதன சிவன் கோயிலும் சுட்டமண்ணால் ஆன உடைந்த பல பெண் உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.  இலங்கையிலுள்ள தலை எனமுடியும் இடப்பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களே. எனெனில் தமிழில் தலை என்பது இடப்பொருள் உருபு. அதனை
“கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வளி உழி உளி 
உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே”       
                                                        - [நன்னூல் - 302]
என்னும் நன்னூல் சூத்திரத்தால் அறியலாம்.

நரிவெருட்டி[கிலுகிலுப்பை]

ஈழத்தின் பண்டைய ஊர்களின் பெயர்களை அறிய வேண்டுமாயின் காணிகளின் அடி உறுதிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். ஈழத்திலுள்ள காணிகளின் பழைய உறுதிகள் நல்ல பழந்தமிழில் எழுதப்பட்டிருக்கும். பழைய காணி உறுதியைப் பார்த்து என் தந்தையால் அறியப்பட்ட பண்டைய ஊர்களில் ஒன்றே நரிவெரூட்டித்தலை. கிலுகிலுப்பை செடியை நரிவெரூட்டி என்று அழைப்பர். கிலுகிலுப்பை நெற்றுக்கள் காற்றில் அசையும் பொழுது உண்டாக்கும் கிலு கிலு சத்தம் நரிகளை வெருட்டி ஓட வைத்தன. அதனைக் கண்ட நம் முன்னோர் நரி வெரூட்டி என கிலுகிலுப்பை செடியை அழைத்தனர். இப்பாடலை இயற்றிய சங்க காலப் புலவரான நரிவெரூஉத் தலையனார் ஈழத்தின் நரிவெரூட்டித்தலையைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவர்பாடியதாகக் குறுந்தொகையில் இரண்டும், புறநானூற்றில் இரண்டுமாக நான்கு சங்க இலக்கியப் பாடல்களே இப்போது இருக்கின்றன. அந்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்களின் கருப்பொருளாக நெய்தல் நிலப் புன்னை மரத்தையும் கயல் மீனையும் குறிப்பிட்டுள்ளார். ஈழத்திலுள்ள நரிவெரூட்டித்தலை என்ற இடமும் நெய்தல் நிலமான  கடற்கரையிலேயே இருக்கின்றது. நான்காவது பாடலில் மாந்தையை ஆண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற  சேர அரசனின் முன்னோனான, சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை நரிவெரூஉத் தலையனார் பாடி இருப்பதால் அவர் கி மு முதலாம் நூற்றாண்டிற்கும் முன் ஈழத்தில் வாழ்ந்திருக்கலாம். 

அந்தச் சேர அரசனின், கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை எனும் பெயரில் வரும் கருவூர் ஏறிய ஒள்வாள் என்பதிலுள்ள ஏறிய எனும் சொல் ஒள்வாளுக்கு அடைமொழியாக வந்துள்ளது. தமிழகத்து இலக்கியவாதிகள் சொல்வது போல் ஏறிய என்ற சொல் கருவூரை அரசு செய்தவன் எனும் கருத்தில் வரவில்லை. எனவே கரூவூர் ஏறிய ஒள்வாள் என்பது  கருவூர் அரசனுடன் மோதிய (ஏறிய) ஒளிபொருந்திய வாள் என்பதையே குறிக்கின்றது. கோப்பெருஞ்சேரல் இரும்பொறை ஈழத்திலிருந்து கரூவூர் அரசனுடன் மோதியவனே.  சங்ககால சேர அரசர்கள் மாந்தையிலிருந்து தமிழகத்தை ஆண்டதற்கு சங்க இலக்கியங்களில்  நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.  அந்நாளைய அரேபிய வணிகர்களும் இலங்கையை Serendip அதாவது சேரன் தீவு என்றே அழைத்தார்கள் என்பதையும் நாம் மனங்கொள்ளுதல் நன்றாகும்.

ஆனால்  ஒருசில இலக்கியவாதிகளும் வரலாற்றாய்வாளர்களும்  தமக்கு தகுந்தது போல் சங்ககாலப் பாடல்களுக்கு பாடபேதங் கொண்டு பொருள் காண்பதால் ஈழத்து மாந்தையைக் குறிக்கும் பாடல்கள் அவற்றின் கருத்தை இழந்து நிற்கின்றன. அப்படி சிலர் செய்த, செய்யும் சில சிறிய தவறுகள் ஈழத்தமிழரை நாடற்ற அகதிகளாக்கி கண்கள் உறங்கிடுமா? என ஏங்கவைக்கின்றன. இந்த எமது அவல நிலையை அவர்கள் எப்போது உணர்வார்கள்? 

அவர்களே சங்கஇலக்கியங்கள் கூறும் வரலாற்று உண்மைகளை கண்டு உணர்ந்து திருத்துவர் என நினைப்பது தவறு. நாமே நம் வரலாற்றை சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக் காட்டவேண்டும். ஏனெனில் தமிழகத்தோடு சேர்ந்திருந்த, இருக்கும் கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழர் கொண்டாடிய திருவிழா என்பதைக்கூட சங்க இலக்கியம் கொண்டு அறியமுடியாது இருக்கிறார்கள். ஈழத்திருநாட்டிலுள்ள பண்டைய ஊர்களின் பெயர்களையா அறியப்போகிறார்கள்? அவர்கள் செய்யும் வரலாற்றுத் தவறுக்கு முதலில் மாந்தையைப் பற்றிய  இரண்டு குறுந்தொகைப் பாடல்களை இங்கு எடுத்துக் கூறலாம் என நினைக்கிறேன். 

சங்ககாலக் கன்னிப்பெண்ணொருத்தி ஒருவனைக் காதலித்தாள். அவள் காதலித்தவனையே வீட்டார் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். அதனை அவளது தோழி அவளுக்குக் கூறினாள். அதனைக் கேட்ட அவள்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே!
முனாஅ தியானை உண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னஎம்
குழைவிளங்காய் நுதற்கிழவனும் அவனே”
                                       - (குறுந்தொகை: 34)
உற்றார் வெறுக்கவும், மறுக்கவும், காதலரோடு வாழமுடியாது தனிமையில் தவிப்போர் பழிச்சொல் இன்றி உறங்க, திருமணம் என்னும் இனிய சொல்லைக் கேட்டு இந்த ஊர் இன்பமடையட்டும். பலம்மிக்க யானை உண்ணும் குருக்கத்தி கொடிபடர்ந்த கடற்கரைச் சோலையுடையது மாதோட்டம். மாதோட்ட மள்ளரது ஆரவார ஒலி, அச்சமூட்டும், குட்டுவனது மாந்தையைப் போல ஒலிசெய்யும் எனது குண்டலம் துலங்குகின்ற நெற்றியையுடைய தலைவன் அவனே’என்கின்றாள். [நெற்றியைத் தொடர்ந்து  காதுக் குண்டலம் தெரிவதால் நுதற்கிழவன் எனக்கூறப்பட்டது]. ஊரார் தூற்றும் பழிச்சொல்லைக் கேட்டு தனிமைவாட்ட  கண்கள் உறங்கிடுமா? என இருந்த தலைவி, இப்போ காதலித்தவனை திருமணம் செய்வதால் ஊரார் அரட்டை அற்று நிம்மதியாக உறங்கட்டும் என்கிறாள்.
குருக்கத்தி மலர்[மாதவி]

மாதோட்டத்தில் வாழ்ந்த மள்ளர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டதால் எழும் ஆரவாரச் சத்தம், பார்ப்போரை பயம் கொள்ள வைக்கின்ற குட்டுவனின் மாந்தை என, ஈழத்தின் மாந்தை நகர் இந்தப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இன்றும் மாதோட்ட காட்டில் மாதவி எனச் சொல்லப்படும் குருக்கத்தி இருப்பதையும் காணலாம். யானைகளும் அங்கு உலாவருகின்றன. 

ஆனால் சங்கப்புலவரான கொல்லிக்கண்ணன் சொன்ன பெருந்தோட்டத்தை - மாதோட்டமாகக் கொள்ளாமல் ‘பெருந்தோடு அட்ட’ என்று  மாற்றியும் மாந்தை என்பதை மரந்தை என்னும் ஊராக மாற்றியும் எழுதி பொருள் கொள்கிறார்கள். இப்பாடலோ இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே மாந்தைநகரின் மாதோட்டத்தில் மள்ள மறவர்கள் போர் பயிற்சி செய்ததை வரலாறாக பொதிந்து வைத்துள்ளது.

இதேபோல் 
“தண்கடல் படுதிரை பெயர்தலின் வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
ஊரோ நன்றுமன் மாந்தை
ஒருதனி வைகின் புலம்பாகின்றதே”       
                               - (குறுந்தொகை: 166)
அயிரை தேடும் நாரை

'கடல் கொந்தளித்து அலை மோதுவதால் வெண் நாரைக்கூட்டம், இடம் பெயர்ந்து சென்று அயிரை மீன்களை (அயிரை நன்னீரில் வாழும் மீன்) உண்ணும் தன்மை உடையது மாந்தை. அது நல்லதே, ஆனால் தன்னந்தனியாய் தலைவனைப்பிரிந்து இருப்பதால் மாந்தை தனக்கு துயரத்தத்தை தருகிறதே' என்கிறாள். 

இந்தக் குறுந்தொகைப் பாடலில் கூடலூர் கிழார் கூறியுள்ள மாந்தையை ‘மாநகை’ எனவும் ‘மரந்தை’ எனவும் பாடம் கொண்டு பொருள் எழுதுகின்றனர். அப்படி எழுதுவோரில் சிலர் ஈழத்தில் இருக்கும் மாந்தை நகர் பற்றிய விடயத்தை அறியாதே  எழுதுகின்றனர். அதனால் ஒரு வரலாற்றுச் சிதைவை அவர்களை அறியாமலேயே செய்கிறார்கள் என்பதை எவரும் உணர்வதில்லை. ஈழத்தமிழ் மக்கள் நலன் கருதி இத்தகைய வரலாற்றுச் சிதைவை அவர்கள் செய்யாதிருக்க வேண்டும். இவற்றைப் பார்க்க கண்கள் உறங்கிடுமா? சொல்லுங்கள்! மிகுதியும் காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment