Sunday 6 January 2013

குறள் அமுது - (50)


குறள்:
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகையான் கண் படின்”                         - 217

பொருள்:
மரத்திலிருந்து பெறப்படும் மருந்து உடலுறுப்பினுள் சென்று தப்பாது நோயை நீக்குவது போல பெருந்தன்மையுடைய ஒப்புரவாளரிடம் சேர்ந்த செல்வமும் எல்லோருக்கும் பயன்படும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ஒப்புரவு அறிதல் என்னும் அதிகாரத்தில் ஏழாவது குறளாக இருக்கிறது. உலத்திற்காக வாழும் தன்மையை அறிதலே 'ஒப்புரவு அறிதலாகும். இயற்கையின் படைப்பில் தாவரங்களே தன்நலம் நோக்காது பொதுநலம் நோக்குவனவாகும். மரத்தின் பூ, காய், பழம், விதை, வேர், பட்டை என்பற்றிலிருந்தும் மருந்துகள் கிடைக்கின்றன. மருந்தாகப் பாவிக்கப்படும் மரம் தன் பகுதிகளை இழந்து மனிதருக்கு மருந்தைக் கொடுத்து உயிர்களை நோயின்றி வாழ வைக்கின்றது. அது போல் பொதுநலம் பேணும் ஒப்புரவாளரும் தம் நலத்தை இழந்து தம்மிடமுள்ளவற்றையும் பிறருக்கு கொடுத்து உதவுகின்றனர். பிறருக்கு கொடுத்துதவ வேண்டும் எனும் பெருந்தகைமை உடையோரை பெருந்தகையான் எனச் சொல்கிறார்.

என்னிடம் இருப்பதை நான் ஏன் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்றும், நான் படாது பாடுபட்டு உழைக்க என் மனைவியும் பிள்ளைகளும் சும்மா இருந்து உண்பதா? என்றும், எனக்கு பிள்ளைகள் இருக்கே! இன்று என்னிடம் இருப்பதை என் பெற்றோருக்குக் கொடுத்தால் நாளை என் பிள்ளைகளின் நிலை என்னாவது என்றும் நினைத்து வேலிபோட்டுக் கொள்வது அறிவுடமை ஆகாது.

நாம் மரத்திற்கு என்ன செய்தோம்? எத்தனை மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றினோம்? எவ்வளவு காசு பணத்தை அள்ளிக் கொடுத்தோம்? நாம் உண்ணும் காய்கறி உணவுகளையும் உடுக்கும் பருத்தி, பட்டு ஆடைகளயும் மட்டுமா மரம் தருகிறது? இருக்கும் வீடுகட்ட மரம், கட்டில் மேசை என எத்தனை பொருட்களைத் தருகிறது. மருந்தைத் தந்து  எமது நோய் தீர்க்க மரம் ஏன் உதவுகின்றது? தொடுகை எனும் ஓர் அறிவுள்ள மரமே தன்நலம் கருதாது உதவும் போது பகுத்தறிவு எனும் ஆறாம் அறிவுள்ள மனிதர்களாகிய நாம் பொதுநலம் பேணுவதில் பின்னிற்பது ஏன்?

எம்மோடு பிறந்து நாம் இறக்கும்வரை எம்மோடு கூடவே வருவது பசிநோய். எமது பசிநோய்க்கு நாம் உண்ணும் உணவே மருந்தாகும். மாங்காய், பலாக்காய், வாழைப்பழம் என்று ஒவ்வொரு மரத்திலும் பறித்து உண்கின்றோமே! அவற்றைக் கேட்டா பறித்தோம். நாம் பறித்தோம் என்று மரம் மீண்டும் பூத்துக் காய்த்துக் குலுங்குவதை நிறுத்திவிட்டதா? அதற்கு மேலாக நாம் சுவாசிக்கும் ஒட்சிசனை மரம் எம்மைக் கேட்டா தருகின்றது? அதுபோலவே உலகத்திற்காக வாழும் பெருந்தன்மையை அறிந்தவரிடம் சேரும் செல்வமும் தப்பாது உலகில் வாழ்வோரைச் சென்று சேரும் என இக்குறள் கூறுகிறது.

No comments:

Post a Comment