Wednesday 2 January 2013

களிப்பேன்! யானும் மானுடனாய்!

(Kevin Carter's Pulitzer Prize Photograph)

மானிடரே! வாருங்கள்! உங்கள் 
மனதைத் திறந்து பாருங்கள்!
ஊனிடை உயிர்வைத்த காரணத்தால்
உலகிடை இன்பங்கள் உவப்பதற்கு
மானுடப்பிறவி எடுத்து வந்தேன்  ஒரு 
மாதரசி எனைப் பெற்றுகந்தாள்!
உண்ணும் உணவுக்கு அலைந்தலைந்து 
உயிரோடு அவளிட்ட போரதனால்
பெற்றவள் ஏனோ வெறுத்துவிட்டாள்!
பொறுமையை எங்கோ தொலைத்துவிட்டாள்!
கழுத்திலும் கையிலும் விலங்குஇட்டு
கட்டாந்தரை இடை கிடத்திவிட்டு
உற்றார் எங்கோ போய்மறைந்தார்!
ஊர்ந்தேன் ஊர்ந்தேன் தாய்தேடி
பெற்றவள் தன்னைக் கண்டிலனே!
பேணுவோர் இல்லா ஏதிலியாய்
புழுவாய் துடிதுடித் தழுதழுது 
புரண்டு புரண்டு உணவுக்காய்
கனலெரி கல்லிடை வந்ததனால்
கழுகார் வந்தார் தன்பசியாற
கழுகின் பசிக்கு உணவாகி 
களிப்பேன்! யானும் மானுடனாய்!
யான் பெறும் இன்பம் அறிவீரோ!
யாதும் ஈயா! யாணர்களே!
                                                          
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
யாணர்கள் - செல்வமுடையோர்/ வளமைமிக்கோர்

குறிப்பு:
மேலே உள்ள படத்தை எடுத்த கெவின் காட்டர் (Kevin Carter) இந்த படத்தை எடுத்தபின் பசிக்கொடுமையின் தாக்கத்தை எண்ணி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ள முன்னர் அவர் தனது நாள் குறிப்பில் (Diary) 1994ல் எழுதியதை கீழே தருகிறேன் படித்துப்பாருங்கள். 
                 Kevin Cater [Famous Photographer]      Photo: source altfg.com


















On his diary:
Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may be. I pray that He will protect this little boy, guide and deliver him away from his misery. I pray that we will be more sensitive towards the world around us and not be blinded by our own selfish nature and interests. I hope this picture will always serve as a reminder to us that how fortunate we are and that we must never ever take things for granted.

No comments:

Post a Comment