Friday 18 January 2013

மன்மதராசன் [சுறவ வேந்தன்]

Photo: source Wikipedia

உலகில் வாழும் ஏனைய இனத்தவரிடம் இருந்து தமிழராகிய நாம் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றைய இனங்கள் எல்லாம் எழுதப்படாத வேதங்களில் இருந்தும், பைபிலில் இருந்தும், குர்ரானில் இருந்தும், தம் வரலாறுகளை எடுத்துச் சொல்கின்றன. அவை கூறுவது சரியே என பலவகையாலும் நிலைநாட்ட முற்பட்டு உழைக்கின்றன. ஆனால் தமிழராகிய எம்மிடம் சங்கச்சான்றோரும், சைவச்சான்றோரும் எடுத்துச் சொன்ன வரலாற்று உண்மைகளும், கல்வெட்டுக்களும், தொல்பொருள் ஆய்வுகளும் கொட்டிக் கிடகின்றன. அதற்கான ஆதாரங்களும் உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக் கண்டும் காணாதவர்களாக வாழ்கிறோம். இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் எம்மிடம் இருப்பவையும் அழிக்கப்பட்டு விடும்.

காதல் கடவுளான மன்மதனைப் பற்றி நம் சங்கச் சான்றோரும், சைவச் சான்றோரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா?
 
தூமென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமசிவாய வென்னும் அஞ்செழுத்தும்
சா மன்றுரைக்கத் தருதி கண்டாயெங்கள் சங்கரனே!”                                                                               - (பன்.திருமுறை: 4: 103: 3)

‘எங்கள் சங்கரனே! தூய்மையான மெல்லிய மலர்களாகிய அம்புகளைக் கோத்து, காமம் ஆகிய தீயை உன்னிடம் வளர்க்க முற்பட்ட மன்மதன்[காமன்] சாம்பலாகுமாறு எரித்த கடல் நாகைக் காரோணத்தில் இருப்பவனே! உனது பெயரைக்கூறி, நமசிவாய எனும் ஐந்தெழுத்தையும் நான் சாகும் அன்று சொல்வதற்கு தருவாயாக! என்று கேட்கும் திருநாவுக்கரசு நாயனார்

“தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்த முக்கண்ணினர்”             
                                                 - (பன்.திருமுறை: 4: 16: 6)

வலிமை பொருந்திய சுறாமீன் கீறிய கொடியை உடைய காமன் (மன்மதன்)  எய்த அம்பின் வலிமையை எரித்த மூன்று கண்ணை உடடையவர் என இன்னொரு தேவாரத்தில் சொல்கிறார். மன்மதனின் கொடியை மீன் கொடி என்கிறார். இதே கருத்தை திருஞானசம்பந்த நாயனாரும் தமது தேவாரத்தில்

சுறவக் கொடிகொண்டவன் நீறதுவாய்
உற நெற்றி விழித்த எம் உத்தமனே”                  
                                                   -(பன்.திருமுறை: 2: 23: 4)

எனப்பாடியுள்ளார். அவரும் ‘சுறாமீன் கொடியைத் தனதாகக் கொண்ட மன்மதன் நீறாய் போகுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்த எங்கள் உத்தமனே!’ எனக்கூறும் இடத்தில் மீனக்கொடி உடையவன் (சுறவக் கொடி கொண்டவன்) என்றே கூறுகிறார்.

சங்க இலக்கிய நூலான கலித்தொகையின் நெய்தற்கலி, 
"சுறாஅக் கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலைக்கண் கொண்டீ"      
                                                     - (கலி: 147: )
என காதலின் கொடுமையை, சுறாமீன் கொடியை உடைய மன்மதனின் கொடுமையாகச் சொல்கிறது. பாலைக்கலி
"மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்"  
                                                    - (கலி: 25: 3 ) 

என்று மன்மதனை மீன் கொடியை வைத்திருப்பவனாகச் சொல்கிறது
பண்டைக்காலத்தில் அரசர்கள் தத்தமக்கு என்று கொடிவைத்திருந்தார்கள். மன்மதன் மீன் கொடியை வைத்திருந்தான் என்றால் அவனும் அரசனாக இருந்திருக்க வேண்டுமல்லவா? திருஞானசம்பந்தர்
சுறவ வேந்தன் உரு அழியச் சிவந்தான்”                
                                                       - (பன்.திருமுறை: 2: 19: 5)

என சிவன் கோபம் கொண்டு சுறாவேந்தனான மன்மதனின் உருவத்தை அழித்ததாகக் கூறுகிறார். சுறவம் என்பது சுறாமீனைக்குறிக்கும்.  

திருநாவுக்கரசரும்
சுறா வேந்தன் ஏவலத்தை நீறாக நோக்க”             
                                                     -(பன்.திருமுறை: 6: 8: 4)

என்கிறார். ‘ஏ’ என்றால் அம்பு. சுறா வேந்தனான மன்மதனின் அம்பின் வலிமையை பொடியாக்க நெற்றிக்கண்ணால் நோக்கினாராம். நோக்கினார் என்றவுடன் அது மலையாளம் என எண்ண வேண்டாம். மலையாள மொழியின் இலக்கணம் 19ம் நூற்றாண்டிலே தான் உருவாகியது.

கல்லாடம் என்ற பழந்தமிழ் நூலும் 
சுறவ வேந்து நெடும் படைசெய்ய”                         
                                                     - (கல்லாடம்: 24)
என்கிறது.

நம் முன்னோர் சுறவ வேந்தன், சுறா வேந்தன், சுறவ வேந்து என மன்மதனை அழைப்பது அவன் அரசன் என்பதைக் காட்டவில்லையா? எனவே சுறாமீன் கொடியை வைத்திருந்த மன்மதனும் அரசனே.  அவன் கையில் செங்கோல் இருப்பதை சிற்பம் காட்டுவதோடு பக்கத்தில் நிற்பவன் இரட்டைமீன் கொடியை பிடித்திருப்பதையும் காட்டுகிறது. மன்மதராசன் மீனவனான பாண்டியனே. மன்மதனின் மனைவி இரதி ஈழத்து மாந்தையின் பேரழகி என்கிறது மாந்தை மாண்மியம். திருக்கோணேச்சரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர்
"பழித்திளங் கங்கை சடைமுடி வைத்து
       பாங்குடை மதனைப் பொடியா
விளித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
        விமலனார்................."
                              - (ப.திருமுறை: 3: 123: 4)
என்கிறார். மன்மதனின் மனைவி இரதிதேவி கேட்க முன்பு சம்பலாக இருந்த மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்தார் என்கிறார். அதுவும் ஈழத்து மண்ணில் நடந்ததாக மாந்தை மாண்மியம் சொல்கிறது. நாம் ஏன் அவனைத் தேவனாகக் காட்ட முற்படுகிறோம்? மேலே உள்ள படத்தில் இருக்கும் மன்மதன், ரதி சிற்பம் பேளூரில் இருக்கிறது.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment