Thursday 3 January 2013

பக்திச்சிமிழ் - 40


உயிர் உடலைப் பிரிந்து போம்
- சாலினி -

உலகில் பிறந்தது யாவும் அழிந்து போகும். அது எவராலும் மாற்றமுடியாத ஓர் உண்மையாகும். அந்த உண்மையின் பிடியிலேயே மனிதவாழ்வும் இருக்கிறது. ஆதலால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறப்பது திண்ணம். பிறந்தவன் எப்போது இறப்பான் என்பதும் எவருக்கும் தெரியாது. இன்று எம்மோடு இருந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து உறவு கொண்டாடியவன் நாளை இருப்பதில்லை. மனித வாழ்க்கையில் இந்த அதிசயத்தைக் கண்ட திருவள்ளுவரும் 

“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”                                    - (குறள்: 336)
என்றார். நேற்று இருந்தவன் இன்று இறந்து இல்லாமல் போய்விட்டான் என்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் பெற்றுள்ளதாம். 

மனிதவாழ்க்கையின் நிலையாமையால் இந்த உலகம் நிலைத்த பெருமையை உடையதாக இருக்கிறது. எனவே மனிதன் தன் நிலையாமையை உணர்ந்தே வாழ்கிறான். மனிதனின் நிலையாமையை நிலைத்த தன்மையாக்கும் சக்தி எது? 

“பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
          பலரும் கண்டு அழுதெழ உயிருடலைப்
பிரிந்து போம் இது நிச்சயம் அறிந்தால்
          பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்த்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
          கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருள்
          சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே”          - (ப. திருமுறை: 7: 64: 8)

“மனமே! அன்புள்ள சுற்றத்தாரும், துணையாய் இருப்போரும், அறிந்த பலரும் கண்டு உடலின் மேல் வீழ்ந்து அழ உயிர் உடலைவிட்டுப் போகும். இது நிச்சயமாக நடக்கும். இதனை நீ அறிந்தால் துன்பப்படும் வாழ்க்கையின் துயரத்தை விட்டு, கரிய பெரிய கண்ணினை உடைய உமாதேவியின் வலப்பாகத்தில் இருப்பவனை, உயிரானவனை, கால காலனை, கடவுளை, திருத்தினை கோயிலுள்  (நகருள்) இருக்கும் சிவபெருமானை சென்றடைவாயாக” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தன் மனதிற்கு சொன்னதை நாமும் கொஞ்சம் சிந்தனை செய்து பார்க்கலாமே. 

No comments:

Post a Comment