Sunday 13 January 2013

குறள் அமுது - (51)


குறள்:
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்”                                           - 1033

பொருள்:
உழவுத்தொழிலைச் செய்து அதனால் கிடைப்பதை உண்டு வாழ்வோரே வாழ்பவராவர். மற்றவர்  யாவரும் உழவரை வணங்கி, உண்ணும் உணவுக்காக அவர் பின் செல்வோரே.

விளக்கம்:
இத்திருக்குறள் உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது குறளாகும். நிலத்தைப் பண்படுத்துவதற்காக வயலை உழுது விதைப்பதால் பயிர் செய்வோரை உழவர் என்பர். நாம் உணவாக உண்ணும் தானியங்களையும் காய்கறிகளையும், பழங்களையும் விதவிதமாக பயிர்செய்து விளைவித்து அவற்றை தாம் மட்டும் உண்ணாது, மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்போர் உழவர்களே. இவ்வாறு பொதுநலம் பேணும் உழவரின் சிறப்பை 
“வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலை அனைத்தும்
ஓதுவார் எல்லோரும் உழுவார் தம் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னர் தம் குடைவளம் கொழுவளமே
ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே”            
                                                             - (ஏர் எழுபது: 11)
என கம்பரும் போற்றுகிறார். 

வேதநூல்கள் முதலாகத் தெரிகின்ற கலைகள் யாவற்றையும் கற்போர் எல்லோரும் உழவரின் தலைவாசலில் (தலைக்கடை) உணவுக்காக நிற்பர். மன்மதன்[கோதைவேள்] போல் அழகான மன்னர்களுடைய அரசாட்சியின் வளமும் உழவரின் கலப்பையின் கொழுவின் சிறப்பைப் பொறுத்ததே. ஏனெனில் உழவர் பயிர்த்தொழிலைச் செய்து மரம், செடி, கொடிகளை வளர்த்து தானியங்களை காய்கறிகளை பழங்களைத் தரவில்லையானால் கற்போருக்கு உண்ண உணவு கிடைக்காது, அரசர்களின் பொருளாதாரம் குறைவடையும். ஆதலால், உழவர் பெருமையை யார் சொல்லவல்லார் என்று ஏர் எழுபது எனும் நூலின் பதினொராவது பாடலில் கேள்வி எழுப்பிய கம்பரே, பத்தொன்பதாவது பாடலில் 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாரும்
தொழுதுண்டு பின் செல்வாரென்றே இத்தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே”    
                                                             - (ஏர் எழுபது: 19)

என திருவள்ளுவரின் இக்குறள் முழுவதையும் கூறி, இவ்வுலகில் எழுதப்பட்ட மறை திருக்குறள் அல்லவா! உழவருடனே சேர்ந்து நடப்பதால் உலகில் பிறந்தோருக்கு, கேடு உண்டா எனக்கேட்கிறார். பொன்னும், பொருளும் பணமும் கொட்டிக்கிடந்தாலும், உணவுப் பயிர்களை வளர்க்கும் உழவர் இல்லாவிடின் நாம் ஒவ்வொருவரும் உண்ணும் உணவைத் தேடி மிருகங்கள் போல் காட்டில் அலைய வேண்டிய நிலை இன்றும் ஏற்படும். உழவரைப் பெருமைபடுத்தவே தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்.
                                                                  
உலகில் உள்ளோர் யாவரும் உயிர்வாழ, உழவுத் தொழிலைச் செய்து, தாமும் உண்டு, பிறருக்கும் உணவைத் தந்து வாழும் உழவர்களே உரிமையுடன் இவ்வுலகில் உயிர்ழ்பவராவர். மற்றெல்லோரும் உணவுக்காக உழவரை கைதொழுது அவரின் பின் சென்று வாழ்வோரே என இத்திருக்குறள் சொல்கிறது. ஆனால் இந்நாளில் உழவர்களை, மரம் நடுவோரை, ஆறு, குளம் வெட்டுவோரை பலரும் மதிப்பதில்லை. மனதார உண்மையான பக்தி இன்றி கோயில் கட்டிப் பெருமை பேசுவோரையே மதிக்கிறோம். கோயில் குருக்களுக்கு பணம் இறைக்கிறோம். எனினும் கோயில் பூசைக்கு பூ, பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், அரிசி, பால் என யாவும் கொடுக்கும் உழவரை மதித்துப் போற்றாதிருப்பது ஏனோ? என்னே நம் அறிவின் திறமை! யாரிடம் சொல்ல!!

No comments:

Post a Comment