Wednesday 1 August 2012

குறள் அமுது - (40)



குறள்:
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை”                           - 656

பொருள்:
தன்னைப் பெற்றெடுத்த தாய் பசியினால் வாடுவதைக் கண்டாலும் தாயின் பசியை நீக்குவதற்காகச் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்ய வேண்டாம். 

விளக்கம்:
இக்குறள் வினைத்தூய்மை எனும் அதிகாரத்தில் வருகிறது. வினைத்தூய்மை என்றால் செய்யும் செயலை நேர்மையுடன் செய்தலாகும். இன்றைய உலக நடைமுறைக்கு ஏற்பச் சொல்வதானால் செய்யும் தொழிலில் கறைபடியாத கையுடன் இருத்தலே வினைத்தூய்மை. நாம் எதைச்செய்தாலும் நேர்மையுடன் செய்ய வேண்டும். நேர்மை என்னும் பண்பே மனிதப்பண்புகளுள் சிறந்த பண்பாகும். அதுவே நல்லொழுக்கத்தின் ஆணிவேர் ஆகிறது. 

மனிதவாழ்வுக்கு நன்மை தராது கேட்டை உண்டாக்கும் பொய், களவு, சூது, வாது போன்ற கெட்ட செயல்களை சான்றோர் பழிப்பர். நேர்மையுள்ளவரிடம் இத்தகைய செயல்கள் இருப்பதில்லை. பொருள் தேடுவதற்கு எத்தனையோ புதுப்புது வழிகளை, அதிலும் குறுக்கு வழிகளை கண்டு பிடிக்கிறார்கள். தொழிலில் இப்படிச்செய்தால் தான் பெரிய இலாபத்தை எடுக்கமுடியும் என்று நினைத்து பிறரை வஞ்சித்து கொள்ளையடித்து வாழும் வாழ்வு மின்னலைப் போன்றது. அது நாம் இறந்த பின்பும் நிலைத்து நிற்கும் புகழை என்றுமே தராது.  இக்குறளில் நேர்மையின் மேன்மையை எடுத்துக்காட்டவே வள்ளுவர் ஈன்றாளின் பசியைக் கூறுகிறார்.

உலக உயிர்களுக்கு தாயே ஆதாரம். ஆதலால் பெற்றதாய் பசியால் துடிப்பதைக் கண்டு பிறரை வருத்தி, களவெடுத்து அவளின் பசியை முறையற்ற வழியில் தீர்ப்பது சரியா? அப்படிச் செய்யும் மகனைப் பார்த்து அவனைப் பெற்றெடுத்த நேரத்தை விட தாய் மகிழ்ச்சி அடைவாளா? தன் மகன் சான்றோனாக வாழவேண்டும் என நினைக்கும் தாய் எப்படி சான்றோர் பழிக்கும் செயலால் வந்த உணவை உண்பாள்?  எனவே உங்களின் உயிர் சுமந்தவளின் துயர் துடைக்க, பசியைப் போக்க என நினத்துக் கூட சான்றோர்கள் (நல்லனவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்) பழித்துக் கூறும் செயல்களை செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment