Saturday, 4 August 2012

எழுதும் கீழ்க்கணக்கு!

பக்திச்சிமிழ் - 33

உலக உயிர்களின் பிறப்பை நீக்கி முத்தியைக் கொடுப்பதால் இறைவனை பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவன் என்று அழைக்கிறோம். அதனால் அவருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் உண்டு. பாடல் நாயகனாக, ஆடல் அரசனாகக் காட்டும் இறைவனை நோய் தீர்க்கும் மருத்துவனாக, வைத்தியனாகக் கண்ட நம் முன்னோர் கணக்காளனாகக் கண்டனரா? சித்திரபுத்தரனார் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதுவார் என்பர். ஆனால்

“வல்லார்கள் வல்ல வகையாற் தொழில் புரிதல் 
எல்லாம் உடனே ஒருங்கிசைந்து - செல்காலை
முட்டாமல் செய்வினைக்கும் முன்செய் வினைக்கும் செலவு
பட்டோலை தீட்டும் படி போற்றி                                                                                        
                                                                - (போற்றிப் பஃறொடை: 73 - 76)

என போற்றிப்பஃறொடை சொல்கிறது. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய நூல்களில் ஒன்று போற்றிப்பஃறொடை. அதில் உலக வாழ்க்கையில் ஒருவாறு இசைந்து வாழும் நேரத்தில் எம்மை அறியாமல் செய்கின்ற செயலையும், முன்னே செய்த செயலையும் வரவு செலவுக் கணக்காக பட்டோலையில் எழுதி வைப்பதைப் போற்றியுள்ளார். பட்டோலை என்பது பட்டுத்துணியில் தூரிகை கொண்டு மையில் தோய்த்து எழுதும் ஆவணமாகும். 

அதை யார் எழுதுகின்றார் என்ற குறிப்பு அதில் இல்லை. நாம் ஒரு கணக்குப் போட இறைவன் இன்னொரு கணக்குப் பண்ணுகிறான் என்கிறோம். பிரமன் எழுதிய எழுத்துப்படி தான் யாவும் நடக்கும் என்கின்றோம். அதற்கு அரண் சேர்ப்பதுபோல் அருணகிரிநாதரும் கந்தரலங்காரத்தில்
“கால்பட்டு அழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே”
என்று பாடியுள்ளார். இதன்படி தலை எழுத்து என்று கூறப்படுவது நாம் இப்பிறப்பு எடுக்க முன்னர் செய்த செயல்களின் கணக்காகும். போற்றிப்பஃறொடை 

“முட்டாமல் செய்வினைக்கும் முன்செய் வினைக்கும் செலவு 
பட்டோலை தீட்டும் படி போற்றி”
எனக்கூறுவதில் முட்டுதல் என்றால் தீண்டுதல். முட்டாமல் செய்வினைக்கும், என்றால் தீண்டாமல் - எம்மை அறியாமல் செய்கின்ற செயலாகும். போற்றிப்பஃறொடை அறியாமற்செய்கின்ற செயலுக்கும், நாம் முன்னர் செய்த செயலுக்கும் சேர்த்து, கணக்கு எழுதப்படுவதாகக் கூறுகிறது. ஆதலால் நாம் செய்யும் செயல்களைக் கொண்டு நிலுவை எப்படி இருக்கிறது என தலையெழுத்தை வைத்து சரி பார்க்கப்படுகிறது எனக்கொள்ளலாம். அந்தக் கணக்கை சித்திரகுப்தன் (சித்திரபுத்திரனார்) எழுதுவாரா? இறைவன் எழுதிவாரா? யார் எழுதுவார்? என்ற கேள்வி எழுகிறது. 

இறைவனுக்கு பாடலும் ஆடலும் மருத்துவமும் தெரியுமெனக் கூறும் அருளாளரான திருநாவுக்கரசு நாயனார் கணக்காளராகவும் காட்டுகிறார். இறைவனை, யார்யார் அன்பு பெருக்கெடுக்க ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மலர் தூவித் துதித்து வணங்குகின்றார் என்பதையும் யார்யார் காலத்தை வீணே கழித்து இறைவனை புறக்கணிக்கின்றார் என்பதையும் இன்னம்பர் ஈசன் எழுதி வைப்பார் என்கிறார். 

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே!                - (பன்.திருமுறை: 5: 21: 9)

திருநாவுக்கரசரின் இக்கூற்றை இன்றைய நிலையில் சொல்வதானால் கோயில் திருவிழாவை செய்த பின் எப்படி திருவிழாவைச் செய்தோம் என்பதை பல ஊடகங்களில் செய்தியாகப் போட்டும், அப்படிச் செய்தோம் இப்படிச் செய்தோம் என்று பெருமையாகச் சொல்லி பொழுதைப்போக்கி மமதையோடு இருப்போர் யார்யார் என்பதையும், தூமலர் தூவித் துதிக்கவிடாது கோயில் குருக்கள்மாரும், கோயில் அறக்காவலரும் தடையாக நிற்பினும் கோயிலின் ஒரு மூலையில் இருந்து தன்நிலையை எண்ணி கணப்பொழுது  உள்ளன்போடு துதிப்போர் யார்யார் என்பதையும் இன்னம்பர் என்ற இடத்திலுள்ள ஈசன் எழுதி வைப்பாராம். அதாவது யார்யார் என்னென்ன குற்றம் செய்கின்றனர் என்ற கணக்கை குற்றக்கணக்காக ஈசன் எழுதி வைப்பார். கீழ் + கணக்கு = கீழ்க்கணக்கு. கீழ் என்பது குற்றம் எனும் பொருளில் வருகின்றது. கீழ்க்கணக்கென்பது குற்றக்கணக்காகும். இந்த குற்றக்கணக்கை வைத்தே எமது அடுத்த பிறப்பை தீர்மானிப்பர் போலும். 

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இன்னம்பர் ஈசன் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் பங்குனி மாதம் 13ம், 14ம், 15ம் திகதிகளிலும், ஆவணி மாதம் 31ம் திகதியிலும், புரட்டாதி மாதம் 1ம், 2ம், திகதிகளிலும் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது படும்படியாகக் கட்டியிருப்பது தமிழர் கட்டடக்கலையின் ஒரு சிறப்பாகும்.  இவ்வூர் இன்னம்பூர் என அழைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment