Tuesday 14 August 2012

இராவணன் என்றாச்சி


ஈழத்தமிழர் தமது குழந்தைகளுக்கு நாட்டுப்பாடல்கள் வாயிலாக தமிழ்ச்சொற்களின் அறிவைப் பெருக்கியது போல கணித அறிவைப் பெருக்கவும் நாட்டுப்பாடல்களைப் பாடியுள்ளனர். எல்லாளன் ஆண்ட திருநாடான அநுராதபுரத்தில் 1950 களின் தொடக்கத்தில் ‘விளாங்குளம்’ என்ற பெயருடன் ஒரு தமிழ் ஊர் இருந்தது. அது 58ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்  பின்னர் ‘விலாங்குளம’ என்ற சிங்களப் பெயருடன் இருக்கிறது. அந்நாளில் அங்கு  வாழ்ந்த  தமிழர் தமது குழந்தைகளுக்கு  எண்களைக் கற்பிக்கச் சொல்லிக்கொடுத்த நாட்டுப்பாடல் இது. 

இரட்டைவால் குருவியின் இரண்டு வால்களைக் காட்டி ஒன்று இரண்டு என எண்ணிக் காட்டியும், ஒன்று, இரண்டு மூன்று என எண்ண முக்காலியின் கல்களை எண்ணிக் காட்டியும், நான்கை எண்ண குதிரையின் நான்கு கால்களை எண்ணிக் காட்டியும், ஐந்தை எண்ணுவதற்கு  குழந்தைகள் கழுத்தில் அணியும் ஐம்படைத் தாலியில் உள்ள ஐந்து ஆயுதங்களை எண்ணிக் காட்டியும், ஆறு எண்ணுவதற்கு முருகனின் ஆறு முகங்களை எண்ணிக் காட்டியும், ஏழு எண்ணுவதற்கு ஏழு கன்னியர் சிலைகளை எண்ணிக் காட்டியும், எட்டை எண்ண எட்டு திசைகளை எண்ணிக்காட்டியும், ஒன்பதை எண்ண ஒன்பது நிற இரத்தினங்களை  எண்ணிக் காட்டியும், பத்தை எண்ண இராவணனின் தலைகளை எண்ணிக்காட்டியும்; ஒன்றோடு மற்ற எண்களை கூட்டும் கணக்கையும் கற்பித்திருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

"ஒன்னும் ஒன்னும் இரண்டாச்சி
இரட்டைவால் குருவி என்றாச்சி
ஒன்னும் இரண்ணும் மூனாச்சி
முக்காலிக் கதிரை என்றாச்சி
ஒன்னும் மூனும் நாலாச்சி
நாலுகால் குதிரை என்றாச்சி
ஒன்னும் நாலும் அஞ்சாச்சி
ஐம்படைத் தாலி என்றாச்சி
ஒன்னும் அஞ்சும் ஆறாச்சி
ஆறுமுகப் பெருமான் என்றாச்சி
ஒன்னும் ஆறும் எழாச்சி
ஏழு சிறுக்கியர் என்றாச்சி
ஒன்னும் ஏழும் எட்டாச்சி
எட்டு திக்குகள் என்றாச்சி
ஒன்னும் எட்டும் ஒம்பதாச்சி
ஒம்பது மணிகள் என்றாச்சி
ஒன்னும் ஒம்பதும் பத்தாசி
பத்துத்தலை இராவணனென்றாச்சி
பத்துக்கடுத்தது என்னாச்சி
பதினொன்னு என்று பேராச்சி."
                                          - நாட்டுப்பாடல் (விளாங்குளம் - அநுராதபுரம்)
                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

நாணல் (1965) படத்தில் P சுசிலாவும் T M சௌந்தரராஜனும் பாடிய ‘விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்’ என்ற கவிஞர் சுரதாவின் பாடல் வரிகளில் பத்துக்கு மேலாடை தெரியாமல் ராகம் பாட, 
“நிறுத்து..  ராகம் பாடாதே பதிலைச் சொல்லு 
பத்துக்கு மேலாடை
தெரியலயா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பலகதை உருவாகும்...”  
எனப்பாடல் போகும். இப்படலை எழுதிய சுரதாவும் சிறுவயதில் இது போன்ற நாட்டுப் பாடலைப் பாடிப் பழகியிருப்பாரோ?
இனிதே, 
தமிழரசி.

3 comments:

  1. பத்துக்குமேலாடை என்ற அடி வரும் பாடலைப் பாடியவர் கவிஞர் சுரதா. எனவே, உரிய திருத்தத்ததை மேற்கொள்ள வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பாடலைப் பாடியவர் என்று பாடலை எழுதியவரைக் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். திருத்தியுள்ளேன். எடுத்துச் சொன்னதற்கு மகிழ்ச்சி.

      Delete
  2. எழுதியவரைத்தான் குறிப்பிட்டேன். அனுப்பிய உடன் திருத்த எண்ணினேன். பொருள் அதுதானே என விட்டுவிட்டேன். நன்றி.

    ReplyDelete