Saturday, 1 February 2014

இழிவாகப் பேசியதை நினைப்போர் யார்?


இந்த உலகில் வாழும் உயிர்களிலே மனித இனம் தலைசிறந்தது என்பது மனிதராகிய எமது முடிவாகும். இருப்பினும் மனித இனம் என்று சொல்லப்படும் எமது எண்ணங்களும் செய்கைகளும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. எனவே மனித மனங்கள் இத்தனை வகையே இருக்கின்றன என்று பிரித்து அறிய முடியாது. பொதுவாக யார் யார் எதை எதை நினைத்துப் பார்ப்பார்கள் என்பதை நாலடியார்ப் பாடல் ஒன்று எடுத்துச் சொல்கிறது.

எந்த மனிதனும் தனக்குப் பிடித்ததை நாளும் நினைத்துப் பார்ப்பது வழக்கம். குறவர்கள்  தமது ஊரின் மலையின் செழிப்பை
“முழங்கு திரைப் புனலருவி கழ்ங்கென முத்தாடும்
          முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்ரிலைக் கொண்டோடும்
கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
          கின்புரியின் கொம்பொடித்து வேம்பு தினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
          தேன் அலர்சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்”           
                                                            - (குற்றாலக் குறவஞ்சி)
 என நினைத்துப் பார்ப்பார்கள்.

உழவனோ
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்
உயரும்  உன் மதிப்பு அயல் நாட்டில்”                              
                                                            (விவசாயி படப்பாடல்)
என்று நாட்டிற்கு உணவுப் பொருட்களை அள்ளி வழங்கும் விளைநிலத்தின் பெருமையை நினைப்பான். 

சான்றோரோ
“வாள்நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளந்கதிர் ஞாயிறு எள்ளூம் தேற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி”                               
                                                            - (சிறுபாணாற்றுப்படை)

‘ஒளிமயமான வானத்தில் கோள்கள் சூழ இருக்கும் இளஞ்சூரியனைப் பழிக்கக்கூறக்கூடிய அளவு ஒளிவீசும் பொன்னால் ஆன பாத்திரத்தில் விரும்பும் உணவைப் பரிமாறி, அளவிலா விருப்பத்தோடு தானே முன்னுக்கு நின்று உண்ணச்செய்தான்’ என்று சிறுபாணாற்றுப்படையில் சொன்னது போல தமக்கு ஒருவர் செய்த நன்மையை எப்போதும் நினைத்துப் பார்ப்பர். 

ஆனால் கயவர்களோ தம்மைப்[கய்ந்தன்னை] பிறர்  இழிவாகப்  பேசியதை [வைததை] நினைத்துப்[உள்ளி] பார்ப்பார்களாம் என்று நாலடியார் கூறுகிறது.

மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநலம் உள்ளும் உழவன்  - சிறந்தொருவர்
செய்தநன்று உள்ளுவர் சான்றோர் கய்ந்தன்னை
வைததை உள்ளி விடும்.                                      
                                                                - (நாலடியார்: 356)

இனிதே
தமிழரசி.

No comments:

Post a Comment