Sunday, 16 February 2014

காவியமாய் கூவிடுக!


இலக்கியங்கள் யாவற்றிலும் காதலர்கள் தாம் வளர்க்கும் அன்னத்தை, கிளியை, குயிலை ஒருவருக்கு ஒருவர் தூது அனுப்புவதைக் காணலாம். அந்த மரபு நாட்டுப்புற மக்களின் காதல் வாழ்வில் இருந்து வந்ததேயாகும்.  

புங்குடுதீவில் வாழ்ந்த கன்னியொருத்தி ஆலத்தூர் நந்தனைக் காதலித்தாள். ஆலத்தூர் நந்தனின்  காதலி தான் வளர்த்த சேவல் குனிந்து நிமிர்ந்து சிறகடித்துக் கூவுவதைக் கண்டாள். காதலனைக் காணாது தன் உயிர் துடிப்பதை அவள் உணர முடிந்ததால் அந்தச் சேவலைப் பார்த்து, ‘தன் உயிர் போகுதென்று, அவனது காதில் கேட்கும்படி' கூவச்சொல்கிறாள். அவளது உயிர் போவதையும் 'காவியம் போலக் கூவுவச் சொல்லும்’ பாங்கு அக்காலப் புங்குடுதீவுப் பெண்களின் இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுவதோடு, அவளது காதலும் காவியம் போன்றது என்பதையும் உணர்த்துகிறது. 

காதலியின் உயிர் போகுதென்றால் காதலன் ஓடிவருவான் அல்லவா? அதனாலேயே காதலனைக் கூவி அழைப்பதற்கு சேவலைத் தூது சொல்லச் சொல்கிறாள். புங்குடுதீவில் இருந்து ஆலத்தூர் நந்தனின் காதுவரை கேட்கக் கூவுவதற்கு புங்குடுதீவுச் சேவலும் வலிமையுடையதாக இருந்ததோ! ஆலத்தூர் நந்தனின் காதலி சொல்லச் சொன்ன சேவல் தூது. உங்களுக்காக..

காதலி: கூரையிலே ஏறிநின்று
                       குனிந்து நிமிர்ந்து
             சிறகடித்து கூவுகின்ற
                       சேவலாரே! எந்தன்
             ஆவிஉயிர் போகுதென்று
                      ஆலத்தூர் நந்தன்
             காதினிலே கேட்பதற்கு
                       காவியமாய் கூவிடுக! 
                                                   - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு) 
                                             - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

புங்குடுதீவுக் கன்னி காதலித்த ஆலத்தூர் நந்தன் ஈழத்து ஆலத்தூரைச் சேர்ந்தவனா? தமிழ்நாட்டு ஆலத்தூரைச் சேர்ந்தவனா என்பது தெரியவில்லை. இலங்கையில் ஆலத்தூர் எங்கே இருக்கின்றது என்பதும் தெரியவில்லை. காதலுக்கு ஊரென்ன! நாடென்ன! தடை என்ன இருக்கிறது?

இப்படி தூதுவிடும் மரபை பக்தி இலக்கியங்களிலும் காணலாம். திருமங்கைஆழ்வார், திருமாலாகிய மணிவண்ணனைக் கூவி அழைப்பதற்கு குயிலைத் தூது சொல்லச் சொல்கிறார்.

கூவாய் பூங்குயிலே!
குளிர்மாரி தடுத்து உகந்த
மாவூய் கீண்ட மணிவண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே!                                  - (நாலாயிரதிவ்: 1944)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment