Tuesday 25 February 2014

குறள் அமுது - (89)




குறள்:
“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு”                                  - 841

பொருள்:
அறிவு இல்லாமையே இல்லாமைகளில் பெரிய இல்லாமையாகும். மற்றைய பொருட்கள் இல்லை எனினும் உலகம் அதனை இல்லாமையாக எண்ணிப் பழித்துக் கூறாது.

விளக்கம்:
புல்லறிவாண்மை என்னும் அதிகாரத்தில்  முதலாவது திருக்குறளாக இக்குறள் இருக்கிறது. இல்லாமைகளில் பெரிய இல்லாமை எது என்பதை விளங்க வைக்கிறது. இல்லாமை என்பது வறுமையாகும். பலவகைப் பட்ட துன்பங்கள் சேர்ந்து கூடிக் குலாவி கொட்டமடிக்கும் இடமே வறுமை. ஆதலால் இல்லாமை என்பதும் பல துன்பங்களின் ஒட்டுமொத்த வடிவமேயேகும். 

ஒருவரிடம் பொருளில்லாமை, வீடில்லாமை, உணவில்லாமை, குடிக்க நீரில்லாமை, படுக்க பாய்யில்லாமை, உடுக்க உடை இல்லாமை போன்ற இல்லாமைகள் மட்டுமல்ல தாயில்லை, தந்தையில்லை, மகனில்லை, உறவில்லை, படிப்பில்லை, கையில்லை, காலில்லை போன்ற எல்லா இல்லாமைகளும் இருந்தாலும் உலகம் இகழ்ந்து கூறாது. ஆனால் எவரிடமாவது அறிவு இல்லை என்பதைக் கண்டால் உலகம் அவரை இழிவாகப் பேசும்.

ஏனெனில் அறிவு உள்ளவன் இறந்த உறவுகளைத் தவிர ஏனையவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும். அறிவில்லாதவனாய், சிற்றறிவு உள்ளவனாய் வாழ்பவர்களால் தமக்கு ஏற்பட்ட இல்லாமையைப் போக்கிக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல அறிவு இல்லாதவரிடம் செல்வம் இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் வழி அறியாது அழிப்பர். நல்லறிவு இல்லாதோர் படித்திருந்தாலும் வாழும் வகை அறியாது தமது வாழ்க்கையை மட்டுமல்ல அவரோடு சேர்ந்து வாழ்வோரின் வாழ்க்கையையும் முழுமையாகச் சிதறடிப்பர்.

நாலடியாரும் "நுட்பமான அறிவு இன்மையே வறுமை. அறிவு இருப்பது [அஃதுடைமை] மிகப்பெரிய [பண்ணப் பணைத்த] பெருஞ்செல்வம் என்கின்றது.
"நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்"
                                                                                        - (நாலடியார்: 251: 1 - 2)

அதனால் ஒருவரிடம் அறிவு இல்லை என்றால் உலகோர் அவரைப் இகழ்ந்து பேசுவர். மற்றைய இல்லாமைகளைப் பற்றி இவ்வுலகம் பெருட்படுத்துவதில்லை. ஆதலால் இல்லாமைகளிலே அறிவு இல்லாமையே கொடிய இல்லாமையாகும். எனவே இவ்வுலகில் நாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு நல்ல அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment