தேன்குருவி நான் என்பார் தேசத்தே உள்ளோர்கள்
தேன் அருந்த முடியாதே தேடுகிறேன் பூமரங்கள்
தேன் அருந்த பூத்தேடி தேசத்தே அலைந்தே
தேன் சிந்தும் பூமரத்தைத் தேடியே இளைத்தேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தெருவோரம் கண்டீரோ!
தேனினிக்கும் தமிழாலே தெண்டனிட்டு கேட்கிறேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தேசத்தே கண்டீரேல்
தேன்குருவி எந்தனுக்கு தேடிவந்து சொல்லிடுவீர்!
பார் எங்கும் பறந்து பாழடைந்த நிலமெங்கும்
பார்த்துப் பார்த்து அலுத்துப் பதறிப் பரிதவித்து
வேர்த்து விறுவிறுத்து வெந்து உடல் நூலாய்
வேரற்ற மரம் போல வீழும்நிலை வந்ததனால்
நீர் அருந்த நினைத்து நீர்நிலைகள் தேடி
நீர் அற்று வாடி நிம்மதியைத் தொலைத்தேன்
நீர் அற்றுத் தேனற்று நிலம்பாழாக காரணம்
யார் என்று அறிவீரோ! மானிடரே! சொல்லிடுவீர்!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment