Wednesday, 5 February 2014

அத்தைமக மீனாட்சி!

ஆசைக்கவிதைகள் - 86

புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் உள்ள ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவ்விடத்தில் நின்று போவோர் வருவோருக்கு நல்ல காற்றையும் நிழலையும் தருவதோடு,  பறவைகள், பூச்சி, புழுக்களுக்கு உணவையும், வாழும் இடத்தையும் வழங்கி வருகிறது. அந்த ஆலமரத்தடியில் அக்காலத்தில் சந்தை ஒன்று இருந்திதிருக்கலாம். அல்லது சந்தையடியில் ஆலமரம் இருந்திருக்கலாம். அச்சந்தையில் ஒருவர் அரிசிக்கடை வைத்திருந்தார். சிலவேளைகளில் அவரது மகன் அந்த அரிசிக்கடைக்கு வந்து அவருக்கு உதவி செய்வது வழக்கம். வழமைபோல் அன்றும் தந்தைக்கு உதவி செய்ய அரிசிக்கடைக்கு அவன் சென்று இருந்தான்.

அந்த அரிசிக் கடைக்காரரின் தங்கையும் அன்று பொருட்கள் வாங்கச் சந்தைக்கு வந்தாள். அவளுடன் அவளது மகள் மீனாட்சியையும் சேலை உடுத்திக் கூட்டி வந்தாள். சந்தைக்கு வந்தவள் அண்ணனைப் பார்க்காமல் போவாளா? அதுவும் அவளது மகள் மீனாட்சி முதன்முதல் சேலைகட்டி இருப்பதை அண்ணனுக்குக் காட்டாமல் போவாளா? அதனால் மீனாட்சியைக் கூட்டிக் கொண்டு வந்து தன் தமையனுக்குக் காட்டினாள். 

அப்போது அங்கே அரிசி அளந்துகொண்டிருந்த அண்ணனின் மகன், அத்தை மகள் மீனாட்சி சீலை உடுத்தி வந்திருப்பதைக் கண்டான். இவ்வளவு காலமும் சின்னஞ்சிறு பெண்ணாய் சிற்றாடையுடன் திரிந்தவளைச் சீலையில் பார்த்ததும் அதிர்ந்து போனான். இவ்வளவு அழகா அவள்! அவனது தந்தைக்கும் அத்தைக்கும் முன்னால் மீனாட்சியின் அழகைப் பார்த்து மகிழமுடியாது திண்டாடினான். அரிசி அளக்கும் சாட்டில் குனிந்த தலைநிமிராமலே அவளின் பாதத்தின் அழகைமட்டும் அவனால் பார்த்து இரசிக்க முடிந்தது. அவள் கடையைவிட்டு போகும் போது எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பாதக்கொலுசு சிணுங்கிய சிணுக்கத்துள் அவன் மனதும் சிக்கிக் கொண்டு போய்விட்டது.

தனது மனநிலையை ஆசைக்கவிதையாக அவன் பாடித்திரிந்தான்.

மச்சான்: ஆலடிச் சந்தையில
                        அரிசியளந்த நேரத்தில
             சேலகட்டி வந்தாளே
                       அத்தமக மீனாட்சி!
             பால்வடியும் முகத்தழக
                       பாத்திருக்க முடியலயே!
             பாதக் கொலுசுக்க
                      பாவிமனம் போனதையே!  
                                                           - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                                          (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அந்நாளில் யாழ்ப்பாணம் தீவுப்பகுதிப் பெண்கள் கெண்டைக்கால் தெரிய சீலைகட்டுவது வழக்கம். அதனாலேயே அவனால் மீனாட்சியின் பாதத்தையும் பாதக்கொலுசையும் பார்க்க முடிந்தது. இக்காலத்தவர் போல் சீலை உடுத்திருந்தால் அவளின் பாதத்தையோ பாதக்கொலுசையோ அவன் பார்த்திருக்க முடியாது. எனவே இந்நாட்டுப்பாடல் அக்காலத்தில் புங்குடுதீவுப் பெண்கள் கெண்டைக்கால் தெரிய சீலைகட்டியதை  வரலாறாய்த் தருகிறது.

No comments:

Post a Comment