Monday 3 February 2014

குறள் அமுது - (87)



குறள்:
“மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து”                                                  - 968

பொருள்:
மேன்மையின் பெருமை எல்லாம் அழிய நேர்ந்த இடத்து, தன் உடம்பைப் பாதுகாத்து வாழும் வாழ்க்கை மீண்டும் உயிர் வாழ்வதற்கான மருந்தோ?

விளக்கம்:
மனிதன் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து நன்மை தீமைகளையும் பெருமை சிறுமைகளையும் மான அவமானங்களையும் கண்டறிந்தான். அவற்றுள் மானம் என்பது எல்லா உயிர்களுக்கும்  உள்ள ஓர் உணர்ச்சியாகும். மான உணர்ச்சி தன் உயிரையே துச்சமாக மதிக்கச் சொல்லும். எமது மானத்தைக் காக்க, உடையை அணிகின்றோம் எனச்சொல்கின்றோம். அந்த மானத்திற்கும் இந்தக் குறள் கூறும் மானத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இக்குறள் கூறும் மானம் தன்னலம் கருதாது  பொதுநலம் பேணும்போது மிகவும் சிறப்படையும்.

உயிர் போவதாக இருந்தாலும் தமது மேன்மைக்கு, புகழுக்கு பிறரால் ஏற்படுத்தப்படும் களங்கத்தை எண்ணி அதைப் போக்கத் துடிப்பதும், மிகவுயர்ந்த கொள்கையை வாழவைக்க தன் உயிரைத் தியாகம் செய்வதும் மானம் உடையோர் செயலாகும்.  நன்கு உண்டு மகிழ்ந்து இன்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த போது தமது இனத்தின் நிகரில்லா பெருமைக்கு இழுக்கு வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது, தொடர்ந்தும் உடம்பை வளர்த்து வாழும் வாழ்க்கை; சாகாது என்றும் நிலைத்து வாழ்வதற்கான மருந்தாகுமா? சிந்தித்துப் பாருங்கள். 

ஈழத்தமிழினத்தின் மானத்தைக் காக்கவென்று திலீபன், இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, 265 மணி நேரம் நீரும் அருந்தாது உண்ணாவிரதம் இருந்து, ஈழத்தமிழரின் பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து மருந்தோ ஊன்ஓம்பும் வாழ்க்கை’ என நினைந்து உயிர் துறந்து திருவள்ளுவரின் வாய்மொழிக்கு காவியமானான்.

நம் முன்னோர்கள் காலங்காலமாக முயன்று சேர்த்து வைத்திருக்கும் அரிய பெருமைகளை சதைப்பிண்டமாகிய இவ்வுடலை வளர்க்க [ஊன் ஓம்ப] சிதறடித்து சின்னாபின்னம் ஆக்குவது சரியா? அப்படி வாழ்ந்தாலும் இறந்து போகாது வாழ்ந்திட முடியுமா? அதனாலேயே திருவள்ளுவர், அத்தகைய வாழ்க்கை இறவாமல் நிலைத்து வாழ்வதற்கான தேவாமிர்தமா! [மருந்தா!] என்று வியந்து கேட்கிறார்.

No comments:

Post a Comment