உலக உயிர்கள் தமது பாவ புண்ணியத்திற்குத் தக மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கின்றன என்பர். அதனை மாணிக்கவாசகர் கூறிய
“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகிப் பறவையாப் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”
என்பதாலும் அறியலாம்.
அதனாலேயே காரைக்கால் அம்மையார் சிவனிடம்
“பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்”
என்று கேட்டதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியிருக்கிறார். நம் முன்னோர் 'இறந்தோர் பிறப்பதும் பிறந்தோர் இறப்பதும் என்றும் அழியா உண்மை' என்று நம்பினர்.
ஆனால் சித்தரான சிவவாக்கியர் ‘பசுவிடம் இருந்து கறந்து எடுத்த பால் மீண்டும் பசுவின் முலைக்குள் செல்லாது. தயிரில் இருந்து கடைந்து எடுத்த வெண்ணெய் மோருக்குள் புகுந்து மீண்டும் தயிராக மாட்டாது. உடைந்து போன சங்கை ஊதி ஒலி ஏற்படுத்த முடியாது. அத்துடன் சங்கின் ஓட்டினுள் புகுந்து வாழும் ஓடற்ற மற்றைய உயிர்களும் உடைந்த சங்கினுள் புகுந்து இருந்து வாழமுடியாது. அரும்பாய், மொட்டாய் இருந்து விரிந்த பூ மீண்டும் மரத்தினுள் புக மாட்டாது. மரத்தில் இருந்து உதிர்ந்து வீழ்ந்த காயும் மீண்டும் போய் மரத்தில் ஒட்டிக்கொள்ளாது. இவை போல இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை.’ இறந்தவர் இறந்தவரே என்கிறார்.
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே!
- [சிவவாக்கியர் : 48]
அதாவது இறந்தவர் மீண்டும் நாம் பார்த்த அதே உடலோடு பிறந்து வருவதில்லை என்கிறார் எனக் கொள்ளலே நம் முன்னோர் கொள்கைக்கு ஏற்புடையதாகும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment