குறள்:
“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்” - (980)
பொருள்:
பெருமை உடையோர் பிறரின் குற்றத்தை மறைப்பர். சிறுமை உடையோர் மற்றவர்களின் குற்றத்தையே கூறுவர்.
விளக்கம்:
எம்முடன் கூடிப் பழகுபவர்களில், பெருமைக் குணம் உடையவர் எவர்? சிறுமைக் குணம் உடையவர் எவர்? என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை திருவள்ளுவர் இத்திருக்குறளில் கோடிட்டுக் காட்டுகிறார்.
எவரொருவர் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைத்து அவற்றைப் பேசாது அவர்களின் நன்மைகளை நன்றாகப் புகழ்ந்து பேசுவார்கள் ஆயின் அவர்களிடம் பெருமைக்குணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதுபோல எவரொருவர் ஏனையோரின் சிறப்புக்களை, நல்ல பண்புகளை மறைத்து அவற்றைப் பேசாது அவர்களின் குற்றங்குறைகளையே மிகவும் பெரிதாகப் பேசுவார்களாயின் அவர்களிடம் சிறுமைக் குணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெருமை உடையோர் குணம் எப்படிப்பட்டது என்பதை நாலடியாரும் கூறுகின்றது. ‘தன்னை ஒருவன் அளவுக்கு மிஞ்சி கொடுமையாக இல்லாத பொல்லாத வசைகளைக் கூறி நிந்திப்பதைக் கேட்டு, அதை நம்பி பிறர் மயங்கிவிட்டாலும், மனவேறுபாடு ஒன்றும் இல்லாமல் கலக்கமடையாது தூய்மையான மனத்தோடு விளக்கின் சுடர் போல ஒளிவீசியபடி பெருமையுடையவர் இருப்பார்களாம்’ என்கின்றது நாலடியார்.
“கடுக்கி [அளவுக்கு மிஞ்சி] ஒருவன் கடுங்குறளைப் [கடும் நிந்தனை] பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பு [மனவேறுபாடு] ஒன்றின்றித் [ஒன்றும் இல்லாமல்]
துளக்க [கலக்க] மிலாதவர் தூய மனத்தர்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று” - (நாலடியார்: 189)
பிறரை இழிவுபடுத்துதலே சிறுமையுடையோர் செயலாகும். அதனை அவர்கள் சொல்லாலும் செயலாலும் செய்வர். எனவே பிறரது நன்மையை மட்டும் பாராட்டிப் புகழ்ந்து பேசுவோர் பெருமையுடையோர் ஆவர். சிறுமையுடையோரே பிறரைத் தூற்றுவோர் ஆவர். சிறுமையுடையோரது கண்ணுக்கு நல்லன தெரியவே தெரியாது.
No comments:
Post a Comment