Thursday, 31 January 2013

மானுட வீரமா? விவேகமா?



மனிதநேயம் என்னவென்று அறியாது
மனம்அது இருண்டு மனக்குருடான
மானிடரே! மானுடனெனும் மமதையில்
மரம்அதை வெட்டுதல் வீரமா? விவேகமா?

ஊரெங்கும் உள்ள மரங்களை வெட்டி
ஊர்குருவி தன்னோடு குஞ்சுகள் மாள
ஏறெடுத்தும் பாரா ஏதிலாரே! உங்கள்
ஏகபோக வாழ்க்கை வீரமா? விவேகமா?

ஆறறிவு படைத்தீர்! ஆற்றலும் கொண்டீர்!
ஆனந்த வாழ்வென்று சொல்லி நாளும்
பாரெங்கும் உள்ள பசுமையை அழித்து
பாழாக்குதல் உமது வீரமா? விவேகமா?

பாழான நிலத்தில் நீரற்றுப் போம்
பாழ்நிலம் தன்னில் நீர்அது தேடி
நிழல்அது தேடி நித்தமும் அலைந்து
நுடங்குதல் மானுட வீரமா? விவேகமா?

இனிதே,
தமிழரசி.

Wednesday, 30 January 2013

ஆசைக்கவிதைகள் - 52

மறக்க மனம் நாடுதில்லை

அந்திவானம் மெல்ல சிவந்தது. அதைக் கண்ட இலுப்பக்கடவையில் வாழ்ந்த இளநங்கை மனமும் துள்ளல் நடை போட்டது.  மாலை நேரம் ஆகும் போது அவளது மச்சான் அங்கு வருவான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் வருவது அவளைப் பார்க்கவே என்பது ஊரே அறிந்த விடயம். ஆனால் அவளோ ஏதும் அறியாதவள் போல நடந்து கொள்வாள். மாலை நேரம் ஆனதும் அவள் தன்னை அலங்கரித்தாள்.  மெல்லச்சென்று கட்டிலில் சாய்ந்து இருந்தாள். மச்சான் வரும் சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்குவது போல் கிடந்தாள். வந்தவன் அவள் அருகே வந்து பார்த்தான். அவள் தனக்காகவே, ஒரு திட்டதுடன் (சூசனம்) பொய்த்தூக்கம் கொள்கிறாள் என்பதை அவன் அறிந்து கொண்டான். அதனால் அவள் கேட்கட்டும் என்று சொல்கின்றான். 

மச்சான்: கண்டு உவக்கும் பூநிறத்தாள்
                     கமலப்புள்ளி மான்குலத்தாள்
               சுரும்பிரையும் பூமுலையாள் இப்ப 
                     சூசனத்தில் நித்திரை காண்

மச்சான்: தங்கக் குடமே
                     தளம்பாத பாற்குடமே
               மங்காத மாணிக்கமே
                     மறக்க மனம் நாடுதில்லை
                                      - நாட்டுப்பாடல் (இலுப்பைக்கடவை)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Tuesday, 29 January 2013

குறள் அமுது - (53)




குறள்:
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”                       - 202

பொருள்:
கொடிய செயல்கள் தீமைகளை உண்டாக்கி, பலவகையான கேடுகளைத் தருவதால் நெருப்புக்கு பயப்படுவதைவிட கொடிய செயல்கள் செய்யப் பயப்பட வேண்டும்.

விளக்கம்:
‘கொடிய செயல்களைச் செய்ய ஏன் பயப்பட வேண்டும்?’ என உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். தீயசெயலால் துன்பம் வருகின்றது என்றோ, தீமை விளைகின்றது என்றோ உங்கள் மனம் சொல்லக்கூடும். எந்த எந்தச் செயல்கள் எமக்குத் தீமையை உண்டாக்கும் என நான் நினைக்கிறோமோ அத்தகைய செயல்களைச் செய்ய நாம் பயப்பட வேண்டும். 

நெருப்பு அது பற்றி எரிவதற்கு தகுந்த சூழல் மட்டும் கிடைத்து விட்டால் தொடர்ந்து எரிந்து எல்லாவற்றையும் அழிக்கும். கெட்ட செயல்களும் வளவர்வதற்கு ஏற்ற சூழல் அமைந்துவிட்டால் அதனால் பாதிப்படைந்தோரை மட்டுமல்ல,  செய்யத்தூண்டியோரையும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தோரையும் கூட சேர்த்து அழிக்கும்.

அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
என்பது பாரதியார் பாடல்.

பாரதியார் ஒரு சிறிய நெருப்புப் பொறியை எடுத்து மரப்பொந்தில் பத்திரமாக இருக்கட்டும் என்று வைத்தாராம். அது அக்காட்டையே அழித்துவிட்டதாம். நெருப்பின் தீவிரத்தன்மையில் சிறிய பெரிய நெருப்பு என்ற வேறுபாடு இருக்கிறதா? இல்லையே. தீயசெயல்களிலும் பெரியவை சிறியவை என்ற பேதம் கிடையாது.

நெருப்பு எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கவும், குளிர் போக்கவும், வெளிச்சத்தை பெறவும் எனப்பலவகையிலும் உதவுகிறது. எனினும் அது எம்மைச் சுடுகிறது, எரிக்கிறது என்று அதனை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? இல்லையே. ஏனெனில் நெருப்பு எமக்கு பல நன்மைகளைச் செய்கிறது. ஆனால் தீய செயல்கள் அப்படிபட்டவை அல்ல. என்றோ அறியாப்பருவத்தில் செய்த தீய செயல்கூட, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் வேறு வடிவமாக வந்து தாக்கும். அதனாலேயே தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார். 

நம் முன்னோர்கள் தாம் கண்ட அனுபவத்தால் தீயவை எவை, நல்லவை எவை என எமக்குப் பிரித்து எழுதி வைத்துள்ளார்கள். கொலை செய்தல், களவு எடுத்தல், பொய்சொல்லல், புறங்கூறல், மது அருந்துதல் போன்ற எத்தனையோ தீய செயல்களை பெரிய பட்டியலிட்டு எமக்காக வைத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலிருந்து விலகி வாழ்தல் நன்றாகும்.

நெருப்பில் எம்மை நாமே எரித்துக் கொள்வோமா? அந்த நெருப்புக்கு பயப்படும் நாம் அதைவிடக் கூடிய துன்பங்களை அள்ளித்தரும் கொடிய செயல்களுக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர். 

Saturday, 26 January 2013

அடிசில் 43


கரட் அல்வா       
                              - நீரா -

















தேவையான பொருட்கள்:
கரட் துருவல்  -  200 கிராம்
சீனி  -  ½ கப்
பால்  -  ½ கப்
சிறிதாக ஒடித்த முந்திரிப்பருப்பு  -  ¼ கப்
நெய்  -  1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி  -  1சிட்டிகை
உப்பு  -  ½ சிட்டிகை

 செய்முறை:
1.  பாலை நன்கு சூடாக்கிக் கொள்க.
2.  அரைவாசி நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3.  அந்த நெய்யினுள் துருவிய கரட்டைப் போட்டு ஈரத்தன்மை நீங்கும்வரை வறுக்கவும்.
4.  அதனுள் சூடாக்கிய பாலைச் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும். 
5.  பால் வற்றியதும் சீனி, நெய், முந்திரிப்பருப்பு போட்டுக் கிளறி, யாவும் ஒன்றாக கரண்டியுடன் சேர்ந்து வரும் போது உப்பும், ஏலப்பொடியும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Friday, 25 January 2013

திருவருள் செய் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                   
























அன்புருகு செந்தமிழில் அருணகிரி நாதருக்கு
          அடியெடுத்துக் கொடுத்தும்
ஆராய்ந்த களவியலில் நம்பிமகள் ஈடேற
           அருங்கா மகிழ்ந்தணைந்தும்
என்புருக நோற்ற நக்கீரன் சிறைமீள
           ஏந்துவேல் ஏவிநின்றும்
ஏழுலகும் அடிதொழப் பேரருள் புரிந்துசீ
           ரலைவாய் மகிழ்ந்திருந்தும்
இன்புதவு குஞ்சரியை இந்திரனிடந் திருப்
           பரங்குன்றி லேற்றருளியும்
ஏகுநீர் ஓங்கார இசைமருவு இரணைமடு
          எழில் வளர்க்குங்கழனியிற்
செந்நெல்விளை கிளிநொச்சி சேர்கந்த கோட்டம்
          திருமருவ வீற்றிறிருக்குஞ்
செவ்வேழெனும் பெயர்கொள் செல்வனே!
           திருவருள்செய் கந்தவேளே!
                                                                    - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்[எனது தந்தை]
                                                    [அறுபது வருடங்களுக்கு முன்னர் எழுதியது]
இனிதே, 
தமிழரசி.

Thursday, 24 January 2013

பக்திச்சிமிழ் - 43

ஒற்றைக் கண்ணால் விழித்திடுமே!

- சாலினி -













சங்ககாலத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் ஓர் அழகிய சித்திர மண்டபம் இருந்தது. அதனை எழுத்து நிலை மண்டபம் என அழைத்தனர். அங்கே பலவகையான ஓவியங்கள் கீறப்பட்டிருந்தன. அவற்றை சென்று மக்கள் பார்த்தனர். அப்படி பார்ப்போரில் சிலர் தமக்கு தெரியாதை தெரிந்தவரிடம் கேட்டனர். தெரிந்தவர்கள் அதற்கு பதில் கூறினர்’ என்கிறது பரிபாடல்.

“என்று ஊழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும் 
இரதி காமன் இவள் இவன் எனா அ
விரகியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக்கல்லுரு
ஒன்றியபடி இதென்று உரை செய்வோரும்
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்”            - (பரிபாடல்: 19: 48 - 53)

அந்த சித்திர மாண்டபம், ‘வானத்திலுள்ள சந்திரன் சூரியனுடன் சேர்ந்த சுடர்களாகிய நட்சத்திரங்களையும் பார்த்து எப்போ அவற்றுக்கு அழிவுவரும் என ஆராய்வோரும், இவள் இரதி, இவன் காமன் எனக்காட்டி மயங்கி கேட்போரும், அதற்கு விடை கூறுவோரும், இந்தப் பூனை இந்திரன், இவள் அகலிகை, இவன் எழுந்து சென்ற கவுதமன், இவன் கோபத்தால் உண்டான கல்லுருவம் (அகலிகை) இது என்று ஒவ்வொரு ஒவியங்களையும் காட்டி சொல்வோருமாக’ பல வகைப்பட்ட ஓவியங்களுடன் இருந்தது. 

இப்பரிபாடல் சொல்லும் காமனை, சிவன் எரித்தை இராவணன் தனது சிவதாண்டவ தோத்திரத்தில் 
“கராளபால பட்டிகா தகக் தகக் தகக் ஜ்வலத்
தநஞ் ஜயாதூரரீக்ருத ப்ரசண்டபஞ்ச சாயகே”     - (சிவதாண்டவதோத்திரம்: 7)
என்று பாடியுள்ளான். அதாவது விழித்த நெற்றிக்கண்ணின் தக தக தக எனப் பிரகாசிக்கும் அக்கினிச் சுவாலையால் மன்மதனை எரித்தாராம்.

திருநாவுக்கரசு நாயனாரும் சிவனின் ஒற்றைக் கண்ணே காமனைப் பொடியாய் வீழ்த்தியது என்கிறார்.
“ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள
          உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
           வெள்ளப் புணற்கங்கை செஞ்சடை மேல்  
இழித்திடுமே ஏழுலகுந் தானாகுமே
           இயங்கும் திரிபுரங்கள் ஓரம்பினால் 
அழித்திடுமே ஆதி மாதவத்துளானே
           அவனாகில் அதிகை வீரட்டனாமே”             - (பன்.திருமுறை: 6: 4: 6)

காமனை பொடியாகக் எரித்ததை தஞ்சைப் பெரிய கோயிலில் புடைப்புச்சிற்பமாகக் காணலாம். புடைப்புச் சிற்பத்தின் இரண்டாவது வரியில் காமன் சிவனுக்கு கணை தொடுப்பதையும், மூன்றாவது வரியில் காமன் எரியுண்டு வீழ்வதையும், அதற்குப் பக்கத்தில் ரதியும் காமனும் சிவனை வணங்குவதையும் காணலாம். இராவணன் காலம் தொடங்கி இன்றுவரை காமனை எரித்த கதை தமிழர்களால் பேசப்படுகிறது. அதன் காரணம் என்ன? 

Wednesday, 23 January 2013

மிருகநேயத்துடன் பாருங்களேன்!





















முட்டும் முரட்டுக் காளை என்று
மூக்கணாம் கயிறு இட்ட மூடரே!
முட்டும் பிஞ்சுப் பாலகன் என்
முத்த மழையில் நனைந்து நல்ல
பட்டுக் கைவிரல் தழுவலிலே நிதம்
பரவசமாய் பரிவுடன் நிற்பது எது?
முட்டும் முரட்டுக் காளையா இது?
மூர்க்கம் தவிர்த்து மெல்லக் கொஞ்சம்
மிருக நேயத்துடன் பாருங்களேன்!
                                                                                                            - சிட்டு எழுதும் சீட்டு 48

Tuesday, 22 January 2013

தாயிருக்கும் இடம் எங்கே?

ஆசைக்கவிதைகள் - 51


கீழேயுள்ள நாட்டுப்பாடல் நெருப்பில் நீரும், கடலில் மேகமும் (மழை), விதையில் வேரும், தெருவில் தேரும், உலகில் ஊரும் இருப்பதாகாக் கூறி, தாய் எங்கே இருப்பாள் என்ற நல்ல பதிலை சொல்லு! சொல்லு! என்று விடுகதை போடுகிறது. அத்துடன் நெருப்பிலிருந்து நீரும், கடலில் இருந்து மழையும், விதையிலிருந்து தாவரங்களின் வேரும் வரும் என்ற விஞ்ஞானக் கருத்துக்களையும் சொல்கிறது. இன்றைய விஞ்ஞான உலகம் நிரிலிருந்து நெருப்பையும், நெருப்பில் இருந்து நீரையும் உண்டாக்கலாம் என்று சொல்கிறது. 

வன்னியின் கிடாப்பிடிச்ச குளத்தில் வாழ்ந்த மக்கள் 1946ம் ஆண்டிற்கு முன்பே அதனைஅறிந்து வைத்திருந்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் எமக்கு அறியத்தருகிறது. கடலில் இருந்து மழையும், விதையில் இருந்து வேரும் வரும் எனும் உண்மையை  வன்னிமக்கள் தமது அனுபவத்தால் கண்டனர் எனக் எடுத்துக்கொண்டாலும், நெருப்பில் நீர் இருக்கும் என்ற உண்மையை எப்படி அறிந்தனர்? விஞ்ஞான அறிஞர்கள் யாராவது அந்நாளில் வாழ்ந்தார்களா? இது பற்றி அறிந்தவர்கள் பதில் தாருங்கள். பெற்ற தாயிருக்கும் இடத்தையும் கண்டுபிடியுங்கள்.

நீரிருக்கும் இடம் எங்கே? 
           நெருப்பல்ல வோ!
காரிருக்கும் இடம் எங்கே
          கடலல்ல வோ!
வேரிருக்கும் இடம் எங்கே
          விதையல்ல வோ! 
தேரிருக்கும் இடம் எங்கே?
          தெருவல்ல வோ!
ஊரிருக்கும் இடம் எங்கே?
          உலகல்ல வோ!
தாயிருக்கும் இடம் எங்கே?
          சொல்லு! சொல்லு!
தட்டாமலே நல்ல பதில்
          சொல்லு! சொல்லு!
                                     - நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

Monday, 21 January 2013

குறள் அமுது - (52)


குறள்:
“உரம்ஒருவர்க்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார் 
மரம் மக்களாதலே வேறு”                                              - 600

பொருள்:
ஊக்க மிகுதியே ஒருவருக்கு வலிமையாகும். அந்த ஊக்கம் இல்லாதவர் மரங்களே. உருவத்தில் மனிதராகத் தெரிவதே அவர்களுக்கும் மரங்களுக்கும்  உள்ள வேறுபாடாகும்.

விளக்கம்:
திடமான உடலோடும் உயரமாகவும் இருப்பதால் ஒருவரை வலிமையுடையவர் எனச் சொல்ல முடியாது. உள்ளத்தின் வலிமையே உண்மையான வலிமையாகும். மனவலிமை இல்லாதவரின் உடல்வலிமை வலிமையாகாது. இக்குறளில் வெறுக்கை என்பது மிகுதியான என்ற கருத்தை தருகின்றது. ஊக்க மிகுதி உள்ள வெறுக்கை எனப்படும். மனவலிமை உள்ள ஒருவனுக்கு இன்னும் வலிமையைத் தருவது ஊக்க மிகுதியே ஆகும். ஆதலால் எவனிடம் விடாமுயற்சி எனும் ஊக்கம் மிகவும் கூடுதலாக இருக்கின்றதோ அவனே வலிமையுடையவன் ஆவான். 

மரம், தான் வளர்ந்த இடத்திலேயே அசையாது நிற்கும். ஊக்கம் இல்லாதோர் மரத்தைப் போல் அசையாது நின்ற இடத்தில் நிற்பர் என்பதை உணர்த்தவே ‘அஃது இல்லார் மரம்‘ என்றார்.  அத்துடன் மரத்தை போல் இல்லாது உருவத்தால் மனிதராகத் தெரிகின்றனர் எனக் கூறினார். ஊக்கமில்லா மனிதர் உடலால் இயங்கித் திரிவதை மரத்தின் வேர், தளிர், இலை, கிளை, காய்  போன்றவற்றின் இயக்கத்திற்கு சமமாகவே வள்ளுவர் எண்ணினார் போலும். 

அதுமட்டுமல்ல ‘மக்களாதலே வேறு’ என ஏகாரம் போட்டு, மரத்தைவிடவும் முயற்சி ஏதும் செய்யாது சோம்பலுடன் வாழும் மனிதரை பிரித்துக்காட்டுகிறார். ஏன் இந்தப் பிரிப்பு? மரங்களாவது உணவாகவும் மருந்தாகவும், விறகாகவும், வீடாகவும் எத்தனையோ விதத்தில் உயிர்களுக்கு உதவுகின்றது. தன்னையே காப்பாற்ற முடியாத ஊக்கமில்லாத மனிதரால் யாருக்கு உதவமுடியும்?

முயற்சி இல்லா மனிதரோ சோம்பலுக்கு அடிமைப்பட்டு மரத்தைவிடவும் வலிமை அற்று பேடியராய் வாழ்கின்றனர். வலிமையுடையோராய் வாழவேண்டுமா? முயற்சி உடையோராய் வாழுங்கள். விடாமுயற்சியே ஒருவரின் வலிமை எனக்கூறும் குறள் இது.  

Sunday, 20 January 2013

கண்கள் உறங்கிடுமா? - பகுதி 1


கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் மட்டுமா எப்பபோதும் உறங்காது கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன? பசியுள்ளவன் கண்களும், பிணியுள்ளவன் கண்களும், துன்பத்தால் துடிப்பவன் கண்களும், தனது குறிக்கோளை அடைய ஏங்குபவனது கண்களும் ஏன் பொறாமையும் வஞ்சகமும் உள்ள கண்கள் கூட உறங்குவதில்லை. 2009 மே மாதம் 18ம் திகதியின் பின் எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களின் கண்கள் இன்னும் உறங்காது விழித்திருக்கின்றன தெரியுமா? ஏனெனில் அவை யாவும் காதற்கண்களே. தன் நாட்டின் மேலும், தன் மொழியின் மேலும், உற்றார், பெற்றார், உறவுகள், குழந்தைகள் மேலும், மனிதர்கள் மேலும் வைத்த காதலால் எமது கண்கள் உறங்கிடுமா?

இப்படி காதல் வசப்பட்டு உறங்காத கண்ணை குறுந்தொகையும் சொல்கிறது. காதல் வசப்பட்ட சங்க காலத் தலைவி ஒருத்தி தன் தோழியிடம், தோழியே! வெண் நாரைகள் (குருகு)  வாழ்ந்து உறங்கும், இனிய நிழலைத் தரும் புன்னை மரம், கரையை மோதி உடைக்கும் கடல் அலை எற்றும் திவலையால் அரும்பி துளிர்விட்டு வளரும். அத்தகைய இனிய நீருள்ள மென்மையான கடற்கரையையுடைய தலைவன் என்னைப்  பிரிந்தான். [மெல்லம் புலம் என்பது மறவன் புலம் என்பது போன்றது. ‘புலம்’ - நெய்தல் நிலத்தைக் குறிக்கும்.] ஆதலால் பல இதழ்களையுடைய  தாமரை மலர் போன்ற என் கண்கள் உறங்கிடுமா?  காமநோய் என்பது அதுவோ!’ எனக்கேட்பதாக குறுந்தொகை சொல்கின்றது.



அதுகொல் தோழி! காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பின் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவோ.           
                                     - [குறுந்தொகை - 5]

இப்பாடலை இயற்றிய சங்ககாலப் புலவரின் பெயர் நரிவெரூஉத் தலையனார். சாவகச்சேரி - தனங்கிளப்பில் இருந்து  பூநகரி செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக உள்ள ஒரு சிற்றூரின் பெயர் நரிவெரூட்டித்தலை. மண்ணித்தலை, மிகுந்தலை என்பது போல் இதுவும் இடப்பெயர் ஆகும். பூநகரியில் உள்ள ஓர் இடமே மண்ணித்தலை. 1989ம் ஆண்டு இந்த மண்ணித்தலை என்ற இடத்திலேயே புராதன சிவன் கோயிலும் சுட்டமண்ணால் ஆன உடைந்த பல பெண் உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.  இலங்கையிலுள்ள தலை எனமுடியும் இடப்பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களே. எனெனில் தமிழில் தலை என்பது இடப்பொருள் உருபு. அதனை
“கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வளி உழி உளி 
உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே”       
                                                        - [நன்னூல் - 302]
என்னும் நன்னூல் சூத்திரத்தால் அறியலாம்.

நரிவெருட்டி[கிலுகிலுப்பை]

ஈழத்தின் பண்டைய ஊர்களின் பெயர்களை அறிய வேண்டுமாயின் காணிகளின் அடி உறுதிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். ஈழத்திலுள்ள காணிகளின் பழைய உறுதிகள் நல்ல பழந்தமிழில் எழுதப்பட்டிருக்கும். பழைய காணி உறுதியைப் பார்த்து என் தந்தையால் அறியப்பட்ட பண்டைய ஊர்களில் ஒன்றே நரிவெரூட்டித்தலை. கிலுகிலுப்பை செடியை நரிவெரூட்டி என்று அழைப்பர். கிலுகிலுப்பை நெற்றுக்கள் காற்றில் அசையும் பொழுது உண்டாக்கும் கிலு கிலு சத்தம் நரிகளை வெருட்டி ஓட வைத்தன. அதனைக் கண்ட நம் முன்னோர் நரி வெரூட்டி என கிலுகிலுப்பை செடியை அழைத்தனர். இப்பாடலை இயற்றிய சங்க காலப் புலவரான நரிவெரூஉத் தலையனார் ஈழத்தின் நரிவெரூட்டித்தலையைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவர்பாடியதாகக் குறுந்தொகையில் இரண்டும், புறநானூற்றில் இரண்டுமாக நான்கு சங்க இலக்கியப் பாடல்களே இப்போது இருக்கின்றன. அந்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்களின் கருப்பொருளாக நெய்தல் நிலப் புன்னை மரத்தையும் கயல் மீனையும் குறிப்பிட்டுள்ளார். ஈழத்திலுள்ள நரிவெரூட்டித்தலை என்ற இடமும் நெய்தல் நிலமான  கடற்கரையிலேயே இருக்கின்றது. நான்காவது பாடலில் மாந்தையை ஆண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற  சேர அரசனின் முன்னோனான, சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை நரிவெரூஉத் தலையனார் பாடி இருப்பதால் அவர் கி மு முதலாம் நூற்றாண்டிற்கும் முன் ஈழத்தில் வாழ்ந்திருக்கலாம். 

அந்தச் சேர அரசனின், கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை எனும் பெயரில் வரும் கருவூர் ஏறிய ஒள்வாள் என்பதிலுள்ள ஏறிய எனும் சொல் ஒள்வாளுக்கு அடைமொழியாக வந்துள்ளது. தமிழகத்து இலக்கியவாதிகள் சொல்வது போல் ஏறிய என்ற சொல் கருவூரை அரசு செய்தவன் எனும் கருத்தில் வரவில்லை. எனவே கரூவூர் ஏறிய ஒள்வாள் என்பது  கருவூர் அரசனுடன் மோதிய (ஏறிய) ஒளிபொருந்திய வாள் என்பதையே குறிக்கின்றது. கோப்பெருஞ்சேரல் இரும்பொறை ஈழத்திலிருந்து கரூவூர் அரசனுடன் மோதியவனே.  சங்ககால சேர அரசர்கள் மாந்தையிலிருந்து தமிழகத்தை ஆண்டதற்கு சங்க இலக்கியங்களில்  நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.  அந்நாளைய அரேபிய வணிகர்களும் இலங்கையை Serendip அதாவது சேரன் தீவு என்றே அழைத்தார்கள் என்பதையும் நாம் மனங்கொள்ளுதல் நன்றாகும்.

ஆனால்  ஒருசில இலக்கியவாதிகளும் வரலாற்றாய்வாளர்களும்  தமக்கு தகுந்தது போல் சங்ககாலப் பாடல்களுக்கு பாடபேதங் கொண்டு பொருள் காண்பதால் ஈழத்து மாந்தையைக் குறிக்கும் பாடல்கள் அவற்றின் கருத்தை இழந்து நிற்கின்றன. அப்படி சிலர் செய்த, செய்யும் சில சிறிய தவறுகள் ஈழத்தமிழரை நாடற்ற அகதிகளாக்கி கண்கள் உறங்கிடுமா? என ஏங்கவைக்கின்றன. இந்த எமது அவல நிலையை அவர்கள் எப்போது உணர்வார்கள்? 

அவர்களே சங்கஇலக்கியங்கள் கூறும் வரலாற்று உண்மைகளை கண்டு உணர்ந்து திருத்துவர் என நினைப்பது தவறு. நாமே நம் வரலாற்றை சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக் காட்டவேண்டும். ஏனெனில் தமிழகத்தோடு சேர்ந்திருந்த, இருக்கும் கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழர் கொண்டாடிய திருவிழா என்பதைக்கூட சங்க இலக்கியம் கொண்டு அறியமுடியாது இருக்கிறார்கள். ஈழத்திருநாட்டிலுள்ள பண்டைய ஊர்களின் பெயர்களையா அறியப்போகிறார்கள்? அவர்கள் செய்யும் வரலாற்றுத் தவறுக்கு முதலில் மாந்தையைப் பற்றிய  இரண்டு குறுந்தொகைப் பாடல்களை இங்கு எடுத்துக் கூறலாம் என நினைக்கிறேன். 

சங்ககாலக் கன்னிப்பெண்ணொருத்தி ஒருவனைக் காதலித்தாள். அவள் காதலித்தவனையே வீட்டார் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். அதனை அவளது தோழி அவளுக்குக் கூறினாள். அதனைக் கேட்ட அவள்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே!
முனாஅ தியானை உண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னஎம்
குழைவிளங்காய் நுதற்கிழவனும் அவனே”
                                       - (குறுந்தொகை: 34)
உற்றார் வெறுக்கவும், மறுக்கவும், காதலரோடு வாழமுடியாது தனிமையில் தவிப்போர் பழிச்சொல் இன்றி உறங்க, திருமணம் என்னும் இனிய சொல்லைக் கேட்டு இந்த ஊர் இன்பமடையட்டும். பலம்மிக்க யானை உண்ணும் குருக்கத்தி கொடிபடர்ந்த கடற்கரைச் சோலையுடையது மாதோட்டம். மாதோட்ட மள்ளரது ஆரவார ஒலி, அச்சமூட்டும், குட்டுவனது மாந்தையைப் போல ஒலிசெய்யும் எனது குண்டலம் துலங்குகின்ற நெற்றியையுடைய தலைவன் அவனே’என்கின்றாள். [நெற்றியைத் தொடர்ந்து  காதுக் குண்டலம் தெரிவதால் நுதற்கிழவன் எனக்கூறப்பட்டது]. ஊரார் தூற்றும் பழிச்சொல்லைக் கேட்டு தனிமைவாட்ட  கண்கள் உறங்கிடுமா? என இருந்த தலைவி, இப்போ காதலித்தவனை திருமணம் செய்வதால் ஊரார் அரட்டை அற்று நிம்மதியாக உறங்கட்டும் என்கிறாள்.
குருக்கத்தி மலர்[மாதவி]

மாதோட்டத்தில் வாழ்ந்த மள்ளர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டதால் எழும் ஆரவாரச் சத்தம், பார்ப்போரை பயம் கொள்ள வைக்கின்ற குட்டுவனின் மாந்தை என, ஈழத்தின் மாந்தை நகர் இந்தப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இன்றும் மாதோட்ட காட்டில் மாதவி எனச் சொல்லப்படும் குருக்கத்தி இருப்பதையும் காணலாம். யானைகளும் அங்கு உலாவருகின்றன. 

ஆனால் சங்கப்புலவரான கொல்லிக்கண்ணன் சொன்ன பெருந்தோட்டத்தை - மாதோட்டமாகக் கொள்ளாமல் ‘பெருந்தோடு அட்ட’ என்று  மாற்றியும் மாந்தை என்பதை மரந்தை என்னும் ஊராக மாற்றியும் எழுதி பொருள் கொள்கிறார்கள். இப்பாடலோ இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே மாந்தைநகரின் மாதோட்டத்தில் மள்ள மறவர்கள் போர் பயிற்சி செய்ததை வரலாறாக பொதிந்து வைத்துள்ளது.

இதேபோல் 
“தண்கடல் படுதிரை பெயர்தலின் வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
ஊரோ நன்றுமன் மாந்தை
ஒருதனி வைகின் புலம்பாகின்றதே”       
                               - (குறுந்தொகை: 166)
அயிரை தேடும் நாரை

'கடல் கொந்தளித்து அலை மோதுவதால் வெண் நாரைக்கூட்டம், இடம் பெயர்ந்து சென்று அயிரை மீன்களை (அயிரை நன்னீரில் வாழும் மீன்) உண்ணும் தன்மை உடையது மாந்தை. அது நல்லதே, ஆனால் தன்னந்தனியாய் தலைவனைப்பிரிந்து இருப்பதால் மாந்தை தனக்கு துயரத்தத்தை தருகிறதே' என்கிறாள். 

இந்தக் குறுந்தொகைப் பாடலில் கூடலூர் கிழார் கூறியுள்ள மாந்தையை ‘மாநகை’ எனவும் ‘மரந்தை’ எனவும் பாடம் கொண்டு பொருள் எழுதுகின்றனர். அப்படி எழுதுவோரில் சிலர் ஈழத்தில் இருக்கும் மாந்தை நகர் பற்றிய விடயத்தை அறியாதே  எழுதுகின்றனர். அதனால் ஒரு வரலாற்றுச் சிதைவை அவர்களை அறியாமலேயே செய்கிறார்கள் என்பதை எவரும் உணர்வதில்லை. ஈழத்தமிழ் மக்கள் நலன் கருதி இத்தகைய வரலாற்றுச் சிதைவை அவர்கள் செய்யாதிருக்க வேண்டும். இவற்றைப் பார்க்க கண்கள் உறங்கிடுமா? சொல்லுங்கள்! மிகுதியும் காண்போம்.
இனிதே,
தமிழரசி.