Monday 30 April 2012

குறள் அமுது - (31)



குறள்:
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்லென்னும் சொல்”               - 70

பொருள்:
இவனைப் பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர் புகழும்படி வாழ்வதே ஒரு மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.
விளக்கம்:
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”                                         
என தந்தையின் கடமையை 67வது குறளில் சொன்ன திருவள்ளுவர், அப்படி தந்தை செய்த நன்றிக்கு அதாவது நன்மைக்கு உதவி செய்யவேண்டியது பிள்ளையின் கடமை என்கிறார். பிள்ளை செய்யவேண்டிய கடமை அப்பிள்ளை புகழுடன் வாழ்தலேயாகும். அவன் புகழுடன் வாழ்வதால் தன்னைப் பெற்று பெருமையோடு வளர்க்கப் பாடுபட்ட பெற்றோரை உலகம் போற்ற வாழச்செய்ய முடியும். 
பெற்றோர் செய்த நன்மைக்கு பிள்ளைகள் செய்யும் உதவி முதியோர் இல்லத்திற்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் பெற்றோரை அனுப்புவதாக இருக்கக் கூடாது. பெற்றோரின் புகழுக்கு களங்கம் ஏற்படாது நடக்க வேண்டிய பொறுப்பும் பிள்ளைகளுக்கு உண்டு. தன்னைப் பெற்றவரை உலகம் புகழ வழி செய்பவராக, தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவராகா இருப்பவரைப் பார்த்தே உலகம் புகழும். ஆனால் இன்று பகட்டுக்கும், பணத்துக்கும் மயங்கி புகழ்பவரே அநேகர். அந்தப்புகழ் நீர்க்குமிழி போல் என்றும் நிலைக்காது.  
இந்த உலகம் புகழ நீங்களும் வாழ்ந்து உங்களது பெற்றொரும் வாழவேண்டுமானால் பட்டுக்கு  மயங்காது நேர்மையற்ற செயல்களை, கொடுஞ் செயல்களை செய்யாது அன்பாகப் பண்பாக கல்வியாளனாக, அறிஞனாக, சான்றோனாக வாழுங்கள். உங்களது பெருமையைப் பார்த்தவர்கள் ‘இந்த நல்ல பிள்ளையைப் பெற்று வளர்க்க இவன் தந்தை என்ன தவம் செய்தானோ’ என்று புகழ்வார்கள். அப்படி புகழும்படி வாழ்வதே ஒரு மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.

Saturday 28 April 2012

நீயாரு! நானார்!

பக்திச்சிமிழ் - 24

மனித வாழ்க்கை கணத்துக்குக் கணம் மாறும் பல அற்புதங்களால் ஆனது. எமக்கு நல்ல வழிகாட்டியாய் உறவென்றும் நட்பென்றும் வாழ்ந்தோர் என்றும் எம்மோடு கூடவருவதில்லை. ரயில் பயணிகள் போல எம்மைவிட்டு, ஏன் இவ்வுலகை விட்டே போய்விடுகின்றனர். எவர் முந்திச் செல்வார் எவர் பிந்திச் செல்வார் என்பதும் எமக்குத் தெரிவதில்லை.  முதுமை அடைய அடைய எமது பண்பை, ஆற்றலை அறிந்து போற்றிய உறவும், நட்பும்  சுருங்கிச் செல்லும்.  வீட்டில் இருப்போர் தம்மைக் கேட்டு ஒன்றும் செய்வதில்லை, கேட்டாலும் எவரும் சொல்வதில்லை என முதுமை புலம்பும். புதிய தலைமுறையினர், புதிய உறவுகள் தம்மை மதிப்பதில்லை என முதுமை ஏங்கும்.
கண்தெரியாது, காது கேட்காமல், உண்டது செரியாது, நித்திரை வராமல், ஓயாது இருமல் வாட்ட தூங்காது தவிப்பது ஒருபுறம். இருமல் சத்தம் வீட்டில் இருப்போர் தூக்கத்தைக் கலைக்க, அவர்களின் திட்டு மறுபுறம். இரு தலைக்கொள்ளி எறும்பாக முதுமை திண்டாடும். அவை மட்டுமா? மூட்டுவலி நடக்க முடிவதில்லை. இருந்த இடத்தில் மலசலம் கழிக்க வேண்டிய நிலை. யார் வருவார், சீராட்டிப் பாராட்டிப் பார்க்க? முதுமை வந்தபின் சீரேது வாழ்வில்? நாம் மனமுவந்து  பாராட்டிச் சீராட்டிப் பார்த்த சுற்றமும் கொண்டோரும் மக்களும் நீயாரு நானார் எனக்கேட்டோ, அன்றேல் கேளாமலோ கைவிட்டு யாருமற்று நிற்கும் நாள் ஒன்று வருமல்லவா! அப்போதும் எம்மோடு கூடவே பிரியாது இருப்பவை எவை?
திருவெண்காடர் என அழைக்கப்பட்ட பட்டினத்தார், முதுமைப்பற்றி மிகநன்றாகச் சிந்தித்து எமக்காகக் கூறிச்சென்றுள்ளார்.
"தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடும் நாள்
நீயாரு நானார் எனப்பகர்வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயும் அல்லாமல் பின்னை ஏது நட்பாம் உடலே”
முதுமையின் எல்லையை நாம் அடையும் போது எமது  வேதனையின் அவத்தையில் எம்மைவிட்டுப் பிரியாது நட்பாக இருப்பவை மூன்று. ஒன்று எமக்கு வரும் நோய். இரண்டாவது நாம் படுத்திருக்கும் பாய். மூன்றாவது எம் உடல். எம்முயிர் பிரியும் வரை நட்பாய் தொடர்ந்தும் இருப்பவை நோய், பாய், உடல் மூன்றுமே. இந்த மூன்றும் அஃறிணைப் பொருட்கள். ஆனால் பட்டினத்தார் நோயை நோயார் என்றும், பாயை பாயார் என்றும், உடலை நீ என்றும் உயர்திணையாகச் சுட்டுகிறார். அவர் அப்படிச் சுட்டக் காரணம் என்ன? உயிர் எனும் உயர் பொருளோடு என்றும் நீங்கா நட்புப் பூண்டிருப்பவை உடலும் நோயும் படுக்கையுமே. இவை அரசனானாலும் ஆண்டி ஆனாலும் மாறாது. ஆதலால் உயிருக்கு கொடுக்கும் மதிப்பை இவை மூன்றுக்கும் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளார். 
உடலைப் பார்த்து, உடலே! என விளித்து அதற்குச் சொல்கிறார் - நீ முதுமை அடையும் போது, தாயும் சுற்றமும் பெண்டிரும் உன்னைக் கைவிட்டு உன் நிலையில் இருந்து தாழ்ந்து போவாய். அப்போது நீயார்? நானார்? எனக்கேட்டு வெறுப்பு ஏற்றுவர். அந்த நேரம் பார்த்து நோயாரும் வந்து சேர்ந்து நட்பாய் விடுவார். நோயார் வந்து சேர்ந்ததால் பாயாரின் நீங்கா நட்பும் உனக்குக் கிடைக்கும். நோயும் பாயும் நீயும் ஒன்றோடு ஒன்றாய் பிரியாது நட்பாய் இருப்பீர். இவை அல்லாமல் உனக்கு வேறு நட்பு இருக்கிறதா?
பட்டினத்தார் கேட்ட அக்கேள்வியை நாம் உணர்வது எப்போது? 
இனிதே,
தமிழரசி.  

Friday 27 April 2012

பகுத்துண்டு வாழ்தலை தடுப்பது எது?


இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எம் தமிழ் மூதாதையர் வெளிநாடுகளுக்கு உணவை கப்பல்களில் அனுப்பினர். ஆனால் இன்று எமது வருங்கால பாலகர் நிலை எப்படி இருக்கிறது பார்ப்போமா? உங்களில் பலருக்கு ஆபுத்திரன் கதை நன்றாகத் தெரிந்திருக்கும். ஆ என்றால் பசு. பசு ஒன்று தாயில்லாக் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்த கதை அது. ஆனால் இன்று தாய்யற்ற பிள்ளைக்கு நாய் பால் கொடுக்கின்றது. பால் கொடுத்து வளர்ப்பார் இல்லா நிலையில் பசியின் கொடுமையில் அந்தப் பச்சிளம்பிள்ளை நாயில் பால்குடிக்கிறான். அந்த நாயாய் இருக்கும் நிலை கூட எனக்குக் கிடைக்கவில்லையே. அந்த நாயாம் தாயைப் பார்த்து நாணித் தலை வணங்குகிறேன். மானுடப் பிறவி எடுத்ததற்குகே நாணுகிறேன். தாயிடம் பால் குடிக்க வேண்டியவன் நாயிடம் குடிப்பதா? மானுடரா நாம்? அந்தப்பிள்ளை வளர்ந்து தன்னை என்ன என்று சொல்வான்? மானுடரை மதிப்பானா? மிதிப்பானா? அவனின் அருகில் எத்தனை கால்கள்?
ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கு உள்ள ஈவு இரக்கம் கூட மனிதராகிய எம்மிடம் இல்லையே. ஆறறிவு படைத்தோம். ஆற்றல் உள்ளோம். வானை அளந்தோம். கடல் மீனை அளந்தோம். விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் கண்டோம். ஆனால் போட்டியும் பொறாமையும் வஞ்சனையும் சூழ்ச்சியும் மூடநம்பிக்கையும் கொண்ட மனித மனங்களை வெல்ல வழிகாணமுடியவில்லையே. மனித மனங்களை வெல்ல மனிதன் என்று கற்கின்றானோ அன்றே மானுடன் எனும் தகுதியை அவன் அடையமுடியும். அதுவரை மனிதன் விலங்கைவிட கொடூரமானவனே. ஆதலால் நானும் கொடியவளே என நினைக்க நெஞ்சம் சுடுகின்றதே.
இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உயிர் வாழ்வதற்காக போராடியே வாழ்கின்றன. ஆதலால் வாழ்க்கைப் போராட்டம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல உயிர்கள் யாவற்றிற்கும் பொதுவானது. அது உலக இயற்கை தனக்குத் தானே வரைந்து கொண்ட ஏட்டில் எழுதாத சட்டமாகும்.  அதனை இந்த உலகம் நன்கு அறியும்.  எனினும் இவ்வுலகம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நிலை அறியாது தடுமாறிச் சீரழிந்து போகின்றது. 

அதுவே அரசியல் சாணக்கியம் எனக்கூறி பேரினவாத அடக்குமுறையால் உலகில் மிக உன்னத நிலையில் இருந்த எத்தனையோ மனித இனங்களை அழித்து ஒழித்து குழிதோண்டிப் புதைத்துவிட்டது. குறுகிய நிலப்பரப்பில் முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு குழி தோண்டிய பேரினவாதத்திற்கு, உலகமே கைகொடுத்து உதவியதே! அது ஏன்? அதன் விடையை அறியாதா! இவ்வுலகம் இருக்கிறது?  ஈழத்தமிழரின் வளர்ச்சி, இன்றைய உலகத்தை பயங்கொள்ள வைத்ததையே முள்ளிவாய்க்கால் அவலம் வருங்கால உலகிற்கு வரலாறாகச் சொல்லப் போகின்றது. அந்த உண்மை முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு துணை போன சில நாடுகளை இருதலைக் கொள்ளி எறுப்பாக அலைய வைக்கிறது.
தமிழ் இனத்தின் வரலாறு பல்லாயிர வருடப் பழமையானது. அந்த பழமையின் அநுபவத்தால் தமிழர் தனக்கென வாழாது பிறர்க்கெனெ வாழும் உயர்ந்த கொள்கை உடையோராய் வாழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. இன்னொரு விதமாகச் சொல்வதானால் உழைப்போர் இல்லாதவர்க்கு அள்ளிக் கொடுத்தனர். தான் உழைத்து சேர்த்த பொருட்கள் தன் பிள்ளைகளுக்கே என்ற குறுகிய வட்டத்துள் வாழாது பகுந்து உண்டு வாழ்ந்தனர். அதனை திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில் சொல்லும் 
 “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
எனும் திருக்குறள் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது. கொல்லாமை என்றால் எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாது இருத்தலாகும். 
விலங்குகள் தமது பசியைப் போக்க பசி எடுத்தால் மட்டுமே கொலை செய்யும்.  ஆனால் மனிதனோ பசிக்கொடுமையைப் போக்க உயிர்களைக் கொலை செய்தல், கொள்ளை இடுவதற்காக கொலை செய்தல். பொறாமையாலும் தனிப்பட்ட பகைமையாலும் கொல்லுதல். கொல்வதால் அடையும் இன்பத்துக்காகக் கொல்லுதல், போர் செய்து கொல்லுதல் என பலவகையாக கொலைத்தொழில் புரிகின்றான். போரையும் எதற்காகச் செய்கின்றான்? மற்றைய நாட்டின் வளங்களைச் சூரையாடவும், தத்தமது மதங்களே சிறந்தது எனக்கூறி அவற்றை மனிதர் மேல் திணிக்கவும், தாமே உயர்ந்தோர் எனக் காட்டவும் இனத்தோடு இனம், மதத்தோடு மதம், நாட்டோடு நாடு போரிடுகின்றான். இதனால் மனிதன் கணும் இன்பந்தான் என்ன? இப்போர்களும் மனித இனங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து  பகுத்துண்டு பகுத்துண்டு வாழ்தலைத் தடுக்கின்றன.
போர்களால் கொலைகள் நடக்காமல் இருக்க வேண்டுமேயானால் மனிதர் தம்மிடம் இருக்கும்  உணவைப் பிரித்துக் கொடுத்து, தாமும் உண்டு பல உயிர்களைக் பாதுகாத்து வாழ வேண்டும். ஏனெனில் பண்டைய அறிஞர்கள் ஒவ்வொரு நூலாக ஆராய்ந்து, எடுத்துத் தொகுத்துத்தந்த அறங்களில் தலைசிறந்ததாக 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்தலையே'  சொல்லாம் என்கிறார் வள்ளுவர். உலகில்  இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் வளம், பகிர்ந்து கொடுத்து மற்றைய உயிர்களையும் பாதுகாத்து வாழ போதுமானது என்பது பழந்தமிழர் கண்ட முடிவாகும். ஆதலால் முதியோரையும் நோயுற்றோரையும் பேணிக்காக்கும் பொறுப்பு நாட்டில் வாழும் எல்லோரிடமுமே இருந்தது. பழந்தமிழர் விலங்குகளையும் பாதுகாத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள கொட்டடி, யானைகோட்டை போன்ற இடப்பெயர்கள் விலங்குகளை பேணியதைச் சொல்கின்றன. அறிவும் ஆற்றலும் பிறருக்காக வாழும் பண்பும் தமிழர் விரும்பும் சொத்துக்களாகின. தாம் பிறந்த குடிக்காக, ஊருக்காக, நாட்டிற்காக வாழ்வோரை போற்றிப் புகழ்ந்தனர்.
சிறந்த நாடு என்பது பெரும் பொருள் வளத்தால்  பிறதேசத்தவராலும் விரும்பத்தக்கதாய், அழிவுகள் இன்றி  நன்கு பயிர்விளைவதாக இருக்கும் என திருவள்ளுவர் நாடு எனும் அதிகாரத்தில் கூறி இருக்கிறார். பண்டைய தமிழரிடம் இருந்த வளமும், தொழில் நுட்பமும், செல்வச் செழிப்பும், பகுத்து உண்டு எல்லா உயிர்களையும் காக்கும் பண்பும் பல மனித இனக்குழுக்களை தமிழ்த்தேசத்தை நோக்கி வரவைத்தது. தமிழரின் முக்கிய செல்வமாக மாடுகளும், நீர்நிலைகளும், வயல்களும் மரங்களும் இருந்தன. இவற்றுள்ளும் மாடுகளே பெரும் செல்வமாகக் கருதப்பட்டதால் தமிழில் மாடு என்ற சொல்லுக்கு  செல்வம் எனும் கருத்தும் உண்டு. எனவே தாம் பிறந்த இடத்தின் செல்வமான மாடுகளை களவாகப் பிடித்துச் சென்றோரையும், நீர்நிலைகளை தகர்த்தோரையும் வயல்களையும் மரங்களையும் அழித்தோரையும் எதிர்த்துக் களமாடினர். அப்படி போர் புரிந்து மரணம் அடைவதை பெரும் பேறாகக் கருதினர். இருக்கு வேதகாலத்திலேயே அத்தகைய போரை தமிழர் செய்யத் தொடங்கி விட்டனர் என்பதற்கு இருக்கு வேதமே சாட்சி.                                                                                               
                                                              இரணைமடு - கிளிநொச்சி  
இருக்கு வேதம் தமிழரை தாசர்கள் எனச்சொல்லும். தமிழர்கள் பலவகை நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தது பற்றி இருக்கு வேதம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம். “மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பது போல தாசர்கள் தண்ணீரை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவது போல அவர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை அவிழ்த்து விடு” என இந்திரனிடம் ஆரியர் வேண்டியதை இருக்குவேதம் சொல்கிறது. 

கட்டுத்தறியில் கடப்பட்ட மாடு.

வடவரின் வேள்விக்குத் தேவையான மாடுகளை தமிழரின் கட்டுத்தறியில் இருந்து அவிழ்த்து விட்டவன் இந்திரன் என்பதையும், அவனிடம் தமிழரின் நீர்நிலைகளையும் தகர்த்து விடும்படி வடவர் கேட்டதைச் சொல்லும் இருக்கு வேதம் இந்திரனை தமிழனாகவும் சொல்கிறது. ஆதலால் இந்திரன் முதற்கொண்டு இன்றுவரை தமிழ்க்குடியை வேரறுக்க நம் குடியில் பிறந்த பல கோடாரிக்காம்புகள் உதவிக் கொண்டேயிருக்கின்றன.  இந்திரனின் படை தமிழரின் நீர்த் தேக்கங்களைப் பாதுகாத்த ‘அகி‘ எனும் தலைவனைக் கொன்றது. நீர் நிலைகளை உடைத்தது. அந்தவெள்ளத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். வயல்கள் அழிந்தொழிந்தன. தமிழர் நிலங்கள் வடவர் வசமாயின. அதனாலேயே சங்ககால தமிழ் அரசர் பலமுறை இமயம் வரை சென்று வடவரை வென்று அடக்கி இமயத்தில் தமது முத்திரையை பொறித்து வந்தனர் போலும். 

ஓரினம் நன்கு வாழ்தலைக் பார்த்து மகிழமுடியாத காழ்ப்புணர்ச்சி பொறாமையை உண்டாக்கிறது. அதனால் உலகவுயிர்களை வாழ்விக்கும் உணவையும் நீரையும் போர் என்ற போர்வையில் அழித்து ஒழித்து மகிழ்கின்றனர். பகுத்துண்டு வாழ்தல் என்னும் மனிதப் பண்பை சிதைத்தது போர்களே எனின் மிகையாகாது.
இனிதே,
தமிழரசி.

Thursday 26 April 2012

நெஞ்சம் பாடுது பாட்டே













கொஞ்சும் சிலம்பொலி கேட்டே
          கொஞ்சம் எனை மறந்தேன் நானே
நெஞ்சம் பாடுது பாட்டே
          நங்கை உனை அடையத் தானே
மஞ்சம் காண வரு மாதே
          மனமன்றில் ஆடுவாய் நீயே
தஞ்சம் அடைந்தனன் நானே
          தந்தருள்வாய் தளிர்க்கரம் நீயே.     
                                                  - சிட்டு எழுதும் சீட்டு - 29

Wednesday 25 April 2012

புற அழகு

மனித மனம் விசித்திரமானது. அது இயற்கையின் எந்த அழகையும் இரசிக்கின்றது. அதனால் அழகு என்னும் மாய மந்திரம் உலகில் உள்ள பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம் ஆண்கள். ஆண்கள் பெண்களின் அழகை இரசிப்பதால் அந்தக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு பெண்கள் அழகு நிலையங்களுக்குச் செல்கிறார்கள். அங்கு தமது நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள். 
உண்மையில் ஆண் பெண் என்ற பேதம் அற்று அழகைப் பேண எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். முகப்பருக்களைப் போக்குவது எப்படி? நரையை மறைப்பது எப்படி? தலமுடியைப் பாதுகாப்பது முதல் முகம், கை, கால் இவற்றில் வளரும் மயிர்களை நீக்குவது, நகங்களைப் பராமரிப்பது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கின்றது. 
அதற்காக கிழமைக்கு நான்கு ஐந்து என்று அழகு சாதனப் பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்குகிறோம். இரண்டு கிழமை பாவித்துவிட்டு அவை சரியில்லை என குப்பைக் கூடைக்குள் போடுகிறோம். அல்லது ‘என் சிநேகிதி சொன்னாள் இது சரியில்லையாம் அது நல்லதாம்’ என்றும் சில பொருட்கள் குப்பைக்கூடைகளை அடைகின்றன. இவற்றை நம்மவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது. 
இந்த உலகில் பிறப்பவர் எவருமே நான் இப்படி அழகாக இருக்க வேண்டும் எனக்கேட்டுப் பிறப்பதில்லை. அப்படிக் கேட்டுப் பிறந்திருப்பமேயானால் நாம் அழகை இரசிக்க மாட்டோம். யார் அழகை யார் இரசிப்பது? அழகு நிலையங்களும் உருவாகி இருக்காது. புற அழகு என்பது மிக முக்கியமானது தான். அதனாலேயே ‘இரக்கப் போனாலும் சிறக்கப் போ’ என்ற பழமொழி உருவாகியுள்ளது. பிச்சை எடுப்பதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்ற அழகுணர்ச்சி நம் முன்னோரிடம் இருந்திருக்கின்றது.
பிச்சை எடுப்பவரிடம் என்ன அழகு சாதனப் பொருட்கள் கொட்டியாகிடக்கப் போகின்றன? எனவே நம் முன்னோர்கள் எதிர்பார்த்த சிறப்பு என்ன? கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டி, குளித்து சுத்தமாக இருப்பதையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். அழகுணர்ச்சிக்காக இது போன்ற பல விடயங்களை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். 
மிகவும் அழகாக உடையுடுத்தி நளினமாக இருப்பவர்களைக் கண்டால் அவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்க நம் கண்கள் தாவும். அப்படி உடுப்பவரைப் பற்றி நல்லெண்ணம் தோன்றும். அவர்கள் கலை உணர்ச்சி உள்ளவர்கள் என்றோ, எதையும் நிதானமாகச் செய்பவர் என்றோ நாமே முடிவு செய்து கொள்கிறோம். இதே போல் ஏனோ தானோ என்று ஒரு பக்கம் தொங்க வரிந்து கட்டிக் கொண்டு சீலை உடுப்பவரைக் கண்டால் பொறுப்பற்றவ்அர் என்று எண்ணத் தோன்றும். இந்த எண்ணம் உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எனவே சபைகளிலும் முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கும் முன் உங்களை நீங்களே ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். 'ஆள் பாதி ஆடை பாதி' என்பதை மறக்காதீர்கள்.   

Tuesday 24 April 2012

அடிசில் 22

தக்காளி முட்டைக்கறி 

                                                - நீரா -

தேவையான பொருட்கள்:
வெட்டிய தக்காளி  -  200 கிராம்
முட்டை  -  6
வெட்டிய வெங்காயம்  - 1 பெரியது
வெட்டிய பச்சை மிளகாய்  -  4
செத்தல் மிளகாய்  2  
கொஞ்சம் கறிவேப்பிலை
கறுவாப்பட்டை  -  1” துண்டு
இஞ்சி  -  1” துண்டு
உள்ளி  -  3
கடுகு  -  1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  -  2 தேக்கரண்டி
மல்லித்தூள்  - 1 தேக்கரண்டி
எண்ணெய்  1 மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
  1. முட்டைகளை அவித்து உரித்து மேலிருந்து கீழாக சுற்றிவர 4, 5 இடங்களில் கத்தியால் கீறிக்கொள்க.
  2. எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, கறுவாப்பட்டை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  3. அதனுள் இஞ்சி, உள்ளி, பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிடவும்.
  4. பின் தக்காளியைப் போட்டு வதங்கியதும் உப்பு, மிளகாய், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, அளவாக தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
  5. கொதிக்கும் போது முட்டைகளைப் போட்டு  தூள் மணம் போன பின் குழப்பு தடித்து வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் பால் சேர்க்கலாம்.

Monday 23 April 2012

மிதிப்போமா சொல்லுமம்மா?

[இரு]பத்து ஆண்டுகளுக்கு முன் கடுங்குளிர் வாட்டிய பனி பெய்த ஓர் இரவு நேரம், இலண்டன் பாரதிய வித்தியபவன் மாணவரும் ஆசிரியரும் பெற்றோரும் தமது மேலாடைகள் (கோட்) பாதணிகளுக்காக இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகியிடம் மன்றாடி நின்றனர். ஏனெனில் அன்று இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் மேல் மண்டபத்தில் இலண்டன் பாரதிய வித்தியபவன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்காக குறித்த நேரத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் சென்றனர். ஆனால் அம்மண்டபத்தில் வேறுநிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதாவது பிற்பகல் நேரம் மண்டபத்தை வாடகைக்கு எடுத்தவர்களால் குறித்த நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக் கொடுக்க முடியவில்லை. 
பனியும் குளிருமாய் இருந்ததால் எல்லோரும் கோயிலுக்குள் சென்று முத்துமாரி அம்மனை வணங்கச் சென்றனர். அப்போது தமது மேலாடை, பாதணி யாவற்றையும் கோயிலுகுள் செல்லமுன் கழற்றி வைக்கும் இடத்தில் விட்டுச்சென்றனர். மற்றவர்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்ததும் யாவரும் கோயிலுக்கு உட்பக்கமாக மண்டபத்திற்கு போகும் வழியால் மண்டபத்திற்குச் சென்று கலை நிகழ்ச்சியைச் செய்தனர். நிகழ்ச்சியின் இடையே இரவு 21:30 மணி போல் இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகி பாதணிகளை எடுக்கும்படி சில பெற்றோரிடம் கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் நிகழ்ச்சி முடிவடையுமென்பதால் அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் மேடைக்கு மறுபக்கம் இருந்ததால் அவர்களுக்கு அது தெரியாது. 
இரவு 22:00 மணிக்கு முன் கலை நிகழ்ச்சி முடிந்து அவர்கள் தமது உடைமைகளை எடுக்கச் சென்றால் 21:30 மணிக்கு கோயில் பூட்டுவது வழக்கம் என்றும் மறுநாள் வந்து உடைமைகளை எடுத்துச் செல்லுமாறும் கோயில் நிர்வாகி கூறினார். எவ்வளவோ நேரம் கெஞ்சிப்பார்த்தும் அவர் அசையவில்லை. பச்சிளம் குழந்தை முதற்கொண்டு முதியோர்வரை யாவருமே பாதணியும் மேலாடையுமின்றி இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. நடனம் ஆடிய பிள்ளைகளுக்கு காலுறைகூட இருக்கவில்லை. வெறுங்காலுடன் வெண்பனியில் நடந்தனர்.

அப்பொழுது  முத்துமாரி அம்மனுக்கு விண்ணப்பம் எழுதி ‘கலசம்’ இதழுக்குக் கொடுத்தேன். அச்சகம் வரை சென்ற அவ்விண்ணப்பம் அச்சாகவில்லை. அப்போது நானும் கலசம் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தேன். அதன் பின்னர் கலசத்திற்கு எழுதுவதைச் சுருக்கிக் கொண்டேன்.]
இலண்டன் டூட்டிங் முத்துமாரி அம்மனுக்கு ஒரு விண்ணப்பம்.
முத்துமாரி அம்மனுக்கு முற்பகலில் தீ மிதித்தால்
இத்தரையின் இன்னலெல்லாம் இக்கணமே போகுமென்பார்
மிக்ககுளிர் இராவினிலே மேலாடை தானுமின்றி
பத்தினியே உன்வாசலிலெம் பாதணிக்குப் பரிதவித்து
பச்சிளம் பாலகர்நாம் பனிமிதித்து வந்தோமே!
கற்சிலை நீயலையானால் காட்டிடுவாய் உன்மகிமை
நித்தமுமே அவன்நிழலில் நிற்பாயெனும் மமதையினால்
சித்தமது இரங்காதெம் செருப்புகளைத் தாராதே
வக்கணையாய் கதைகதைத்து வாசற்கதவை பூட்டிவைத்த
மதியாதான் கோயில்வாசல் மிதிப்போமா சொல்லுமம்மா?
இனிதே,
தமிழரசி.

Sunday 22 April 2012

மரநடுகை



உலக உயிர்களின் வாழ்விற்கு வேண்டிய உயிர்க்ககாற்று முதற்கொண்டு உணவையும்  தருபவை தாவரங்களே.   ஆதலால் அவை மனிதவாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரம், செடி, கொடிகளின் தேவையை உணர்ந்த ஆதிமனிதன் அவற்றைப் பேணிக்காத்தான். அவை வெய்யிலாலும், வெள்ளத்தாலும் அழிவதைக் கண்டு அவற்றைப் பயிரிட்டு நட்டு வளர்த்தான். மனித நாகரிக வளர்ச்சியின் உச்சியில் வைத்து புகழ்ந்து கூறப்பட வேண்டிய விடயம் மரநடுகையே ஆகும். மரத்தை நட்டு வளர்க்கலாம் என்பதை மனிதன் அறிந்திராவிட்டால் இன்றும் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்திருப்பான். மனிதன் விலங்குகள் போல் திரிந்த காலத்தில் பெண்கள் தமது குழந்தைகளுக்காக ஓரிடத்தில் தங்கி வாழவேண்டியவர்களாக இருந்தார்ககள். அதனால் தமக்கு வேண்டிய உணவைத் தரும் தாவரங்களை அவர்களே நட்டு வளர்த்தார்கள்.

ஆதலால் ஆதி மனிதரின் வாழ்வில், பயிர்களை நட்டு விவசாயம் செய்தவர்கள் பெண்களே  என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவாகும். மனிதவாழ்வைச் சீரமைத்த மரநடுகையை நாட்டுப்புறப் பாடல்களும் எடுத்துடுச் சொல்கின்றன. வாழை, தென்னை போன்றவற்றையும் நட்டு பெண்கள் வளர்த்ததை ஈழத்து நாட்டுப் பாடல் ஒன்று சொல்கின்றது.
பெண்: வாழை வச்சேன் தென்னை வச்சேன்
                       வாழைக்குள்ளே தேனை வச்சேன்
             தேனெடுத்துத் தின்னமுன்னம் 
                       சின்னமச்சான் கையவச்சான்.
வன்னிமக்கள் வாழைத் தண்டைச் சுற்றியிருக்கும் பச்சை வாழைமடலின் உள்ளே மல்லிகைப்பூ, தாழம்பூ, தாமரை மொட்டு, முருங்கக்காய், பாகற்காய், வெற்றிலை போன்றவற்றை பல நாட்கள் வைத்து எடுத்து பயன்படுத்துவர். ஏனெனில் வாழை குளுமையாக இருப்பதால் வாழைமடலினுள் இருக்கும் பொருட்கள் வாடாது இருக்கும். அதுபோல் சூரிய வெப்பத்தால் புளித்துப் போகாது இருக்க தேன், தயிர், பனம்பாணி, பாலைப்பாணி போன்றவற்றியும் மருந்துப் பொருட்களையும் வாழைமடலுள் வைத்து பாதுகாப்பது அந்நாளைய வழக்காகும். அந்த வழக்ககத்தை இந்த நாட்டுப்பாடலில் உள்ள "வாழைக்குள்ளே தேனை வச்சேன்" என்ற வரி வரலாற்றுப் பதிவாக எமக்கு எடுத்துக் காட்டுகிறது.




பெண்: தாழ்வுக் கிடங்கு வெட்டி 
                      தலைமுறைக்கு கட்டை நட்டு
            சன்னியாசி வச்சமரம் 
                      சரியான ஆலமரம்.
                                          -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இரண்டாவது நாட்டுப்பாடல் ஆண்கள் ஆலமரம் நட்டு வளர்த்ததைக் காட்டுவதோடு அதனைத் தமது சந்ததியினருக்காக[தலைமுறைக்கு] நட்டனர் என்பதை எடுத்துச் சொல்லி எம்மையும் சிந்திக்க வைக்கின்றது. இந்த இரு நாட்டுப்பாடல்களிலும் சிலேடை இழையோடுவதையும் காணலாம். 

பாலியாற்றுப் பக்கம் 1962 - 1967 களில் ஆலமர விழுதுகளில் நான் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திருக்கிறேன். அந்த ஆலமரங்கள் இப்போ எங்கே தொலைந்தன. அவற்றை ஈடு செய்ய எவராவது ஆலமரங்கள் நடுவதுண்டா? ஊர்கள் தோறும் குறைந்தது இரண்டு ஆலமரங்கள் நின்றல் அவை மண்ணுக்கு நிழலைக் கொடுத்து ஊரில் வாழ்வோருக்கு நல்ல காற்றை சுவாசிக்கத் தரும். மற்றைய உயிரினங்களும் மகிழ்ந்து வாழும்.
இனிதே,
தமிழரசி.

Saturday 21 April 2012

குறள் அமுது - (30)


குறள்:
“பண்என்னாம் பாடற்குஇயைபு இன்றேல் கண்என்னாம்
கண்னோட்டம் இல்லாத கண்”                                       - 573

பொருள்:
பாடுவதற்கு பொருந்திவராத பண்ணால் என்ன பயன் உண்டாகும்? அது போல இரக்கம் இல்லாத கண் என்ன பயனைக் கொடுக்கும்?
விளக்கம்:
ஒருவரைப் பார்த்து என்ன செய்கிறாய் எனக் கேட்பதற்குப் பதிலாக என்ன பண்ணுகிறாய் எனக்கேட்கும் வழக்கம் இன்றும் ஈழத்தமிழரிடம் இருக்கிறது. பண் என்ற சொல்லும் பண்ணிய (செய்த) என்ற கருத்தையே தருகின்றது. அதாவது பாடலுக்கு அமையப் பண்ணப்படுவதால் அதற்கு ‘பண்’ என்று பெயர் என பஞ்சமரபு என்ற இசைநூலின் ஆசிரியரான அறிவனார் சொல்கிறார்.
நான்மணிக்கடிகையும் 
“மண்ணி அறிப மணிநலம் பண்ணமைத்து 
ஏறியபின் அறிப பாநலம்”                          -(நான்மணிக்கடிகை: 3: 1-2)
என்கிறது. அதாவது மணிகளின் தரத்தை இது நல்ல வைரமா? மாணிக்கமா? எனப்பார்த்து அறிய அவற்றை கழுவி மெருகேற்றி அறிவது போல எழுதிய பாடலின் சுவையை பண்ணமைத்து பாடி அறிய வேண்டுமென கூறுகின்றது. 

கவிஞன் தன் மனநிலைக்கு ஏற்பவே பாடல் எழுதுவான். அப்பாடல் வெளிப்படுத்தும் சுவைக்கு  (நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை) ஏற்றவாறு பாடலின் பண் அமைய வேண்டும். பாடலின் தன்மைக்கு பொருந்தாத பண் பாட்டின் சிறப்பையே கெடுத்துவிடும்.
அதுபோல் கண் கணோட்டத்தைக் காட்ட வேண்டும். ஒருவரது மனநெகிழ்ச்சியைக் காட்டுவது அவரது கண்ணே. அதனால் மனநெகிழ்ச்சியை உள்ளக்கனிவை கண்ணோட்டம் என்று சொல்வர். ஒரு பாட்டிற்கு எப்படி பண்ணின் இசைபு முக்கியமோ அப்படி கண்ணோட்டம் கண்ணுக்கு முக்கியம் என்பதை எதிர்மறையாக இக்குறள் கூறுகின்றது. பாடலுக்கு இசைந்த பண்ணும் கண்ணுக்கு அமைந்த கண்ணோட்டமும் தேவை என்பது வள்ளுவரின் கருத்து.

Thursday 19 April 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 4

சோற்றுக்கு நின்று சுழல்கின்றார்

அன்றைய ஞானச் செல்வர்கள் சொல்லிய பக்தியின் உண்மை நிலைக்கும், இன்றைய சுவாமிமார் தம்மைக் கடவுளாகாக் காட்டும் மூடப்பக்திக்கும் நிறைய வேறுபாடு உண்டு. உண்மையான பக்தி என்ன என்பதைத் அறியாததாலேயே நாம் இன்றைய உலகில் வலம்வரும் கள்ளச்சுவாமிமார் கால்களில் வீழ்ந்து வணங்கி, அவர்களின் பணம் கறக்கும் சீடர்களின் மாயவலையில் சிக்குண்டு அடிமைகளாய் அவர்கள் முன் கைகட்டி, வாய் பொத்தி நிற்கிறோம். ஒவ்வொரு சுவாமிமாரிடமும் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி பொருள்கள் குவிந்து கிடக்கின்றன? எவர்களால் இந்தச் செல்வம் எல்லாம் சுவாமிமாரைச் சென்று சேர்ந்தன? 

இவர்கள் எதைத் துறந்தார்கள் என்பதை இருவரின் கண்களையும் பார்த்துச் சிந்தியுங்கள்.


சுவாமி சரவணபணை வீட்டுக்கு அழைக்க அறுநூறு பவுண் என அவரின் சீடர் ஒருவர் சொல்ல, அதைக்கேட்ட மற்றவர் நான் ஆயிரம் பவுண் தருவேனே என்வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்கிறார்? இப்படித்தான் சுவாமி பிரேமானந்தாவை அழைத்தார்கள். சுவாமி நித்தியானந்தாவை அழைத்தார்கள். இப்போ சரவணபவானந்தா? நாம் ஆனந்தா என பெயரிட்டு அழைப்பதால் அவர்களும் ஆனந்தத்துள் மூழ்கிக் களிக்கிறார்கள் போலும். இந்த சுவாமிமாரால் உங்கள் வீடுகள் புனிதம் ஆயினவா? கடவுள் எனும் தேனாற்றுள் மூழ்கிக் களித்தீர்களா? உங்கள் மனதைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள்.  நாம் இறைவனைப் பக்தி பண்ண, நமக்கு எதற்கு சுவாமிமார்? உண்மையை உள்ளபடி சிந்தியுங்கள்.
சுவாமிமார் எல்லோரும் தவம் செய்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். அப்படி நாம் நினைப்பதால் கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்ற வேறுபாட்டை அறியாது அவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கி, பாதபூசை செய்கிறோம். ஒரு நிமிட நேரமாவது அவர்களும் எம்போன்ற மனிதரே, அவர்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் என எண்ணுகிறோமா? இல்லையே அது ஏன்? சரி எது? பிழை எது? எனச் சிந்திப்பது தவறா? அப்படி சிந்தியாது மற்றவர் செய்கிறார் என்று நாமும் செய்யலாமா?

கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்பதை எப்படி அறியலாம் என்பதை திருவள்ளுவர் எமக்குக் காட்டித்தந்துள்ளார். நாம் அவரின் சொற்களை ஏறெடுத்தும் பார்க்காது புறக்கணிக்கிறோம். அம்பு நேராக இருந்தாலும் உயிரைக் கொல்வதால் தீமை செய்கிறது. யாழ் வளைந்து இருப்பினும் இசையைத் தருவதால் நன்மை செய்கிறது. அது போல சுவாமிமார் செய்யும் நன்மை, தீமைகளை வைத்து அவர்களது குணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”                                   - (குறள்: 279) 

கள்ளச்சுவாமிமார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை திருவள்ளுவர் கூடாஒழுக்கம் என்ற அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். அந்த அதிகாரம் தவம் செய்வோரின் கூடா ஒழுக்கத்தையே எடுத்துச் சொல்கிறது. எனினும் எல்லா மனிதருக்கும் அது பொருந்தும். அவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் தவம் செய்வோர்  தமது தவவேடத்துள் மறைந்திருந்து பெண்களை வசப்படுத்துவதை, வேடர்கள் புதரில் மறைந்திருந்து பறைவைகளைப் பிடிப்பது போன்றது என்கிறார்.
“தவம்மறைத்து அல்லவை செய்தல் புதல்மறைத்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று                                   - (குறள்: 274)

அல்லவை செய்தல் என்பது காமவசப்படுத்தலாகும். பரிமேலழகரும் “தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறருக்குரிய மகளிரைத் தன்வயத்ததாக்குதல்” எனக் கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.


தவம் செய்வோரின் செயலைத் திருவள்ளுவர் மிக மிக அழகாகச் சொல்லுகிறார்,
தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றால்லார்  
அவம்செய்வார் ஆசையுள் பட்டு”            - (குறள்: 274) 
அதாவது தவம் செய்கின்றவர் எவராய் இருந்தாலும் - இல்லறத்தவனாய் இருந்தாலும் கூட அவர்கள் யாவரும் தன்நலவாதிகள். ஏனெனில் தாம் கடவுளை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கில் உலகில் வாழும் ஏனைய உயிர்கள் பற்றிய எதுவித எண்ணமும் இல்லாது தவம் செய்கிறார்கள். உண்மையாகத் தவம் செய்வதற்கு, எந்தவொரு ஆசைக்கும் உட்படாத நெஞ்சுரம் வேண்டும். அத்தகைய நெஞ்சுரம் இல்லாத எவரும் உண்மையான தவத்தை மேற்கொள்ள முடியாது. அது அவமே காலத்தை வீணாக்குவதாகும். 

அதனாலேயே  கள்ளச்சுவாமிமார் பொருளாசையில் நின்று சுழல்வதை
ஆற்றில் கிடந்த முதலைக்கண் அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே”


எனத் திருமூலர் அழகாகக் எமக்குக் காட்டித்தந்துள்ளார். ஆற்றில் வாழும் முதலைக்குப் பயந்துபோய், குட்டி போட்ட கரடிக்கு முன் நின்றது போல, மெய்ப்பொருள் எது என்னும் ஆழ்ந்த அறிவு இல்லாது, மனதை அடக்கி தவம் செய்யும் வலிமை அற்றவராய், சோற்றுக்கு நின்று வட்டம் அடிக்கிறார்களாம். சோறு என்பது இங்கு பொருளையே குறிக்கின்றது. 

உண்மையான தவத்தை  செய்யாதவர்களின் நோக்கம் பொருளும், பதவியும், புகழுமே அல்லாமல் கடவுளை அடைதல் அல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனாலேயே ஞானச்செல்வர்கள் யாவரும் கள்ளச்சுவாமிமாரின் தன்மைகளை வெளிச்சம் போட்டு காட்டிச்சென்றுள்ளனர். திருமூலரைவிடச் சிறந்த ஞானியர் எவராவது இந்நாளில் இருக்கிறார்களா? இனிமேலாவது நாமும் அவர் காட்டியவழி நடக்க முயற்சிக்கலாமே!

இனிதே,

தமிழரசி.