Monday 2 April 2012

ஆசைக்கவிதைகள் - 27

கட்டறுத்து திரிஞ்ச மச்சான் 
சூரைக்காற்றோடு சோவெனப் பொழிந்த விடா மழையால் முல்லைத்தீவில் இருந்த காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரங்கள் முறிந்து காட்டாற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. வெகு ஆழத்தில் ஓடும் பேராறு கூட நிரம்பிக் கரை உடைத்துப் பாய்ந்தது. வீடுகள், மரங்கள், மிருகங்கள் யாவும் இயற்கையின் சீற்றத்தில் சிக்கிச் சிதைந்து அழிந்தன. 
முல்லைத்தீவு மக்களுக்கு இது ஒன்றும் புதுமையானது அல்ல. காலங்காலமாக அங்கு அரங்கேறும் காட்சி அது. எனினும் அங்கு வாழும் மனிதநேயம் மிக்க பலசாலிகளான நீச்சல் காரர்களும், சுழியோடுவோரும் இயற்கையின் சீற்றத்தை எதிர்த்து, தமது உயிரை துச்சமாக மதித்து உயிர்களை காப்பாற்றி மீட்டு எடுப்பதும் அங்கே அரங்கேறும் காட்சிதான். அதனாலேயே முல்லைத்தீவில் மக்கள் இயற்கையை எதிர்த்து நிலைத்து வாழ்கின்றனர்.
இளைஞனாக இருந்த காலத்தில் பல வெள்ளப்பெருக்குகளை, இயற்கையின் சீற்றங்களை எதிர்த்துப் போராடி எத்தனையோ உயிர்களை யமனிடம் இருந்து காப்பாற்றியவர். ஆனால் இன்றோ வயது எண்பதைத் தாண்டிவிட்டது. முன்போல் அவரால் எவரையும் காப்பாற்ற உடலில் வலு இல்லை. ஆனால் மனதில் வலிமை இருந்தது. அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன் உடமைகளை எடுத்துக் கொண்டு மேட்டு நிலத்தில் குடியிருக்கும் தன் மச்சாள் வீட்டிற்கு வருகிரார்.
அவர் வருவதைப் பார்த்த அவரது மச்சாளுக்கு மச்சானின் இளமைக்காலம் நினைவுக்கு வருகிறது. காட்டில் வாழும் எருதைப் பிடித்து வீட்டில் வளர்ப்போம் என்று கட்டிவைத்தால் அது கட்டிவைத்த இடத்தில் நில்லாது. அது கட்டை அறுத்துக் கொண்டு தன் எண்ணப்படி அங்கும் இங்கும் அலைந்து திரியும். ‘அந்தக் காட்டு எருது போல அவரும் வாலிப முறுக்கில் தன் எண்ணப்படி  திரிந்தவர். ஆனால் இன்று காட்டாறு கரை தட்டுவதைக் கேள்விப்பட்டு ஓடிவருகிறாரே’ என நினைக்கிறாள் அந்த மச்சாள் கிழவி. 
நினைத்தவளுக்கு அவரது இளமைக்காலத்தில் எத்தனை உயிர்களை காப்பாற்றியவர் என்ற எண்ணம் வர, இப்போ இங்கே வந்திருந்து, இன்றைய இளைஞர்களால் தன்னைப்போல் கல்லுகள் புரண்டோடும் பேராற்றில் அடிபட்டு போகும் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை என வம்பளப்பாரே என்று தனக்குள்ளே சொல்கிறாள். 

அந்தக்கிழவியின் முணுமுணுப்பு நாட்டுப்பாடலாக சிந்தியது.
பெண்: காட்டேறு போல அன்று
                     கட்டறுத்து திரிஞ்ச மச்சா(ன்)
            காட்டாறு கரை தட்ட
                     கதிகலங்கி தவிப்பதென்ன!
பெண்: பேராறு கரை உடைத்து
                     பே(ர்)த்து எங்கும் ஓடையில
             வாராரு எங்க மச்சான்
                      வம்பளக்க வக்கணையாய்!
                               -  நாட்டுப்பாடல் (முல்லைத்தீவு)
                               - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment