Saturday 28 April 2012

நீயாரு! நானார்!

பக்திச்சிமிழ் - 24

மனித வாழ்க்கை கணத்துக்குக் கணம் மாறும் பல அற்புதங்களால் ஆனது. எமக்கு நல்ல வழிகாட்டியாய் உறவென்றும் நட்பென்றும் வாழ்ந்தோர் என்றும் எம்மோடு கூடவருவதில்லை. ரயில் பயணிகள் போல எம்மைவிட்டு, ஏன் இவ்வுலகை விட்டே போய்விடுகின்றனர். எவர் முந்திச் செல்வார் எவர் பிந்திச் செல்வார் என்பதும் எமக்குத் தெரிவதில்லை.  முதுமை அடைய அடைய எமது பண்பை, ஆற்றலை அறிந்து போற்றிய உறவும், நட்பும்  சுருங்கிச் செல்லும்.  வீட்டில் இருப்போர் தம்மைக் கேட்டு ஒன்றும் செய்வதில்லை, கேட்டாலும் எவரும் சொல்வதில்லை என முதுமை புலம்பும். புதிய தலைமுறையினர், புதிய உறவுகள் தம்மை மதிப்பதில்லை என முதுமை ஏங்கும்.
கண்தெரியாது, காது கேட்காமல், உண்டது செரியாது, நித்திரை வராமல், ஓயாது இருமல் வாட்ட தூங்காது தவிப்பது ஒருபுறம். இருமல் சத்தம் வீட்டில் இருப்போர் தூக்கத்தைக் கலைக்க, அவர்களின் திட்டு மறுபுறம். இரு தலைக்கொள்ளி எறும்பாக முதுமை திண்டாடும். அவை மட்டுமா? மூட்டுவலி நடக்க முடிவதில்லை. இருந்த இடத்தில் மலசலம் கழிக்க வேண்டிய நிலை. யார் வருவார், சீராட்டிப் பாராட்டிப் பார்க்க? முதுமை வந்தபின் சீரேது வாழ்வில்? நாம் மனமுவந்து  பாராட்டிச் சீராட்டிப் பார்த்த சுற்றமும் கொண்டோரும் மக்களும் நீயாரு நானார் எனக்கேட்டோ, அன்றேல் கேளாமலோ கைவிட்டு யாருமற்று நிற்கும் நாள் ஒன்று வருமல்லவா! அப்போதும் எம்மோடு கூடவே பிரியாது இருப்பவை எவை?
திருவெண்காடர் என அழைக்கப்பட்ட பட்டினத்தார், முதுமைப்பற்றி மிகநன்றாகச் சிந்தித்து எமக்காகக் கூறிச்சென்றுள்ளார்.
"தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடும் நாள்
நீயாரு நானார் எனப்பகர்வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயும் அல்லாமல் பின்னை ஏது நட்பாம் உடலே”
முதுமையின் எல்லையை நாம் அடையும் போது எமது  வேதனையின் அவத்தையில் எம்மைவிட்டுப் பிரியாது நட்பாக இருப்பவை மூன்று. ஒன்று எமக்கு வரும் நோய். இரண்டாவது நாம் படுத்திருக்கும் பாய். மூன்றாவது எம் உடல். எம்முயிர் பிரியும் வரை நட்பாய் தொடர்ந்தும் இருப்பவை நோய், பாய், உடல் மூன்றுமே. இந்த மூன்றும் அஃறிணைப் பொருட்கள். ஆனால் பட்டினத்தார் நோயை நோயார் என்றும், பாயை பாயார் என்றும், உடலை நீ என்றும் உயர்திணையாகச் சுட்டுகிறார். அவர் அப்படிச் சுட்டக் காரணம் என்ன? உயிர் எனும் உயர் பொருளோடு என்றும் நீங்கா நட்புப் பூண்டிருப்பவை உடலும் நோயும் படுக்கையுமே. இவை அரசனானாலும் ஆண்டி ஆனாலும் மாறாது. ஆதலால் உயிருக்கு கொடுக்கும் மதிப்பை இவை மூன்றுக்கும் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளார். 
உடலைப் பார்த்து, உடலே! என விளித்து அதற்குச் சொல்கிறார் - நீ முதுமை அடையும் போது, தாயும் சுற்றமும் பெண்டிரும் உன்னைக் கைவிட்டு உன் நிலையில் இருந்து தாழ்ந்து போவாய். அப்போது நீயார்? நானார்? எனக்கேட்டு வெறுப்பு ஏற்றுவர். அந்த நேரம் பார்த்து நோயாரும் வந்து சேர்ந்து நட்பாய் விடுவார். நோயார் வந்து சேர்ந்ததால் பாயாரின் நீங்கா நட்பும் உனக்குக் கிடைக்கும். நோயும் பாயும் நீயும் ஒன்றோடு ஒன்றாய் பிரியாது நட்பாய் இருப்பீர். இவை அல்லாமல் உனக்கு வேறு நட்பு இருக்கிறதா?
பட்டினத்தார் கேட்ட அக்கேள்வியை நாம் உணர்வது எப்போது? 
இனிதே,
தமிழரசி.  

No comments:

Post a Comment