Tuesday 10 April 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 6



சங்கஇலக்கியமான பதிற்றுப்பத்து ‘கொடுமணம்’ என்று சொல்லும் ஊரே இன்று கொடுமணல் என்று அழைக்கப்படுகின்றது.  கொடுமணலில் செய்த அகழாய்வின் தரவினைக் கொண்டு கி மு 3ம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்து முறை புழக்கத்திற்கு வந்துவிட்டதாகத் தொல்லியலாளர் கா இராஜன்  கூறியிருந்தார். கி மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பே படித்த மேல்மட்டத்தோரான அரசர்கள் புலவர்கள் அல்லாத ஈமத்தாழி செய்வோரும், கற்படுக்கை செய்வோரும் கூட தமிழை எழுதவும் வாசிக்கவும் அறிந்திருந்தனர் என்பதையும் தொல்பொருள் ஆய்வுகள் மிகத்தெளிவாகாக் காட்டுகின்றன.

அமரர் சிவத்தம்பி, திரு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களின் கருத்துகளுக்கு சற்று மாறுபட்டு சிந்திக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கா ராஜனும், அவரது மாணவர்களும் சேர்ந்து ‘பொருந்தல்’ என்ற இடத்தில் அகழ்வாராச்சி செய்தனர். கி மு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த நெல்மணிகள், தமிழி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், பல்வேறு நிற காண்ணாடி மணிகள், சதுரங்கம் விளையாடப் பாவிக்கும் காய்கள், தந்தததால் செய்த தாயக்கட்டைகள், செப்புக்காசு தங்கப்பொருள்கள்  கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த அகழாய்வு பொருந்தல் ஊரின் ஈமக்காட்டில், அதாவது சுடுகாட்டில் 4 ஈமக்குழிகளில் செய்யப்பட்டன. அந்தக் குழிகளில் நான்கு கால்களுள்ள ஜாடியில் நெல்மணிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நெல்மணிகள் கி மு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் ஆய்வுக்கூடம் காலக்கணிப்பு செய்துள்ளது. அந்த நெற்கள் தானாக விளைந்தவை அல்ல என்றும் அவை பயிர்செய்யப்பட்டு விளைந்தவை என்றும் கண்டறிந்துள்ளனர். 

நெல்மணிகளோடு ‘வைய்ரா‘ என தமிழ்-பிராமி எழுத்துப்பொறித்த பிரிமனை கிடைத்தது. அந்த நெல்லோடு இருந்த தமிழ்-பிராமி எழுத்துக்களும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யலாம் என பேராசிரியர் இராஜன் கூறியதாக பொருந்தலில் நடந்த அகழாய்வு பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் ஒக்டோபர் 2011ல் வெளியிட்டிருந்தது. இன்றைய நிலையில் பொருந்தல் ஆய்வு தமிழ் எழுத்து முறையை கி மு 5ம் நூற்றாண்டிற்கு எடுத்துச் சென்றுள்ளது. 


இந்த அகழாய்வில் ஒரு கல்லறையில் மெருகூட்டப்பட்ட 8000 கண்ணாடி மணிகள் கிடைத்திருக்கின்றனவாம். இந்த ஆதாரங்கள் தமிழருக்கு எழுத்தறிவையும் தொழில் நுட்பத்தையும்  உழவுத்தொழிலையும் வடநாட்டார் சொல்லித்தரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன. 
திருவள்ளுவரும்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின் செல்பவர்”
என்ற திருக்குறளை வடித்திருப்பது இதற்கு அணிசேர்க்கிறது.
இலங்கையின் அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழிக் கல்வெட்டை சிரான் தரணியகல கி மு 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைத்த எழுத்துக்களில் சிந்துவெளி எழுத்துக்களுக்கு பிந்திய எழுத்துக்களில் தமிழி எழுத்தே காலத்தால் முந்தியதாகும். எனவே அசோகப் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச் சொல்லிவந்த புரட்டுக்கள் எல்லாம் தலைகீழாக மாறி உண்மை வெளிவரும் காலம் தொடங்கிவிட்டது. 
இன்றைய கல்வெட்டு ஆதாரங்களின்படி அசோகனின் காலத்திற்கு முந்நூறு வருடங்களுக்கு முந்திய கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் எப்படி அசோகனின் பிராமி எழுத்தில் இருந்து எழுத்து வடிவத்தைப் பெற்றிருக்க முடியும்? யார் கொடுத்தார்கள் யார் வாங்கினார்கள் என்பதை இனியாவது சிந்திப்பார்களா? 















கல்வெட்டுக்களை பதுக்கைகளிலும் காணலாம். பதுக்கை என்பது கற்குவியல். பதுக்குதல் மறைத்து வைத்தலாகும். இறந்தவரின் உடலை கற்குவியலின் கீழே மறைத்து - புதைத்து வைத்த இடத்தை பதுக்கை என சங்கத்தமிழர் அழைத்தனர். இது தொல்லியல் ஆய்வின்படி பெருங்கற்படைச் சின்னங்களாகும். தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை Megalithic என அழைப்பர். பதுக்கைகள் பெருங்கற்களால் ஆனதால் அவற்றை பெருங்கற்படை என்கின்றனர். இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட சங்ககாலத்தமிழரின் அந்தப் பண்பாடு பெருங்கற்படைப் பண்பாடு என தொல்லியளார்களால் அழைக்கப்படுகின்றது.
அப்பதுக்கைகள் தொடர்ந்து நீண்ட முள்வேலி போலவும் இருந்ததை கலித்தொகை
“இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தோய்ந்தார் பதுக்கை
எனச் சொல்கின்றது. இதில் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ ‘போடப்படும் [இடும்] நெடிய முள்வேலி போல வேடரின் [கொலைவர்] அம்பு [கொடுமரம்] தைத்து இறந்தாரின் [தோய்ந்தார்] பதுக்கை எனச் சொல்லியுள்ளார்.
கல்லால் மட்டும் அல்லாமல் சறுகு, தழை போன்றவற்றால் மூடியும் பதுக்கைகளை செய்திருக்கிறார்கள். அப்பதுக்கை, உவல்இடு பதுக்கை [உவல் - சறுகு, தழை] என சங்கத் தமிழரால் அழைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைத்த பதுக்கைகள் எத்தனை இருக்கின்றன என்று கணக்குப் பார்க்க முடியாத அளவிற்கு இருந்தனவாம். அதனை 
“வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை          - (அகம்: 109)  
என அகநானூறு கூறுவதால் அறியலாம்.

இடத்துக்கிடம் தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு பதுக்கைகளை அமைத்தாலும் அவற்றின் அருகே கல்லை நட்டு இறந்தவரின் பேரும், புகழும் எதற்காக இறந்தார் என்ற செய்தியையும் எழுதி வைத்ததை  
“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுத்து தொடுத்த செம்பூங்கண்ணியொடு 
அணி மயில் பீலிசூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்”                                     
                                 - (அகம்: 264: 1 - 4)
என்று அகநானூறு கூற, இன்றைய தொல்லியல் ஆய்வுகள், அந்நடுகற்களில் உள்ள எழுத்துக்கள் தமிழி எழுத்துக்களே என்பதை தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன. தமிழிக் கல்வெட்டை இந்தியா இலங்கை மட்டுமல்ல உலகநாடுகளிலும் சென்று காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment