Thursday 19 April 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 4

சோற்றுக்கு நின்று சுழல்கின்றார்

அன்றைய ஞானச் செல்வர்கள் சொல்லிய பக்தியின் உண்மை நிலைக்கும், இன்றைய சுவாமிமார் தம்மைக் கடவுளாகாக் காட்டும் மூடப்பக்திக்கும் நிறைய வேறுபாடு உண்டு. உண்மையான பக்தி என்ன என்பதைத் அறியாததாலேயே நாம் இன்றைய உலகில் வலம்வரும் கள்ளச்சுவாமிமார் கால்களில் வீழ்ந்து வணங்கி, அவர்களின் பணம் கறக்கும் சீடர்களின் மாயவலையில் சிக்குண்டு அடிமைகளாய் அவர்கள் முன் கைகட்டி, வாய் பொத்தி நிற்கிறோம். ஒவ்வொரு சுவாமிமாரிடமும் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி பொருள்கள் குவிந்து கிடக்கின்றன? எவர்களால் இந்தச் செல்வம் எல்லாம் சுவாமிமாரைச் சென்று சேர்ந்தன? 

இவர்கள் எதைத் துறந்தார்கள் என்பதை இருவரின் கண்களையும் பார்த்துச் சிந்தியுங்கள்.


சுவாமி சரவணபணை வீட்டுக்கு அழைக்க அறுநூறு பவுண் என அவரின் சீடர் ஒருவர் சொல்ல, அதைக்கேட்ட மற்றவர் நான் ஆயிரம் பவுண் தருவேனே என்வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்கிறார்? இப்படித்தான் சுவாமி பிரேமானந்தாவை அழைத்தார்கள். சுவாமி நித்தியானந்தாவை அழைத்தார்கள். இப்போ சரவணபவானந்தா? நாம் ஆனந்தா என பெயரிட்டு அழைப்பதால் அவர்களும் ஆனந்தத்துள் மூழ்கிக் களிக்கிறார்கள் போலும். இந்த சுவாமிமாரால் உங்கள் வீடுகள் புனிதம் ஆயினவா? கடவுள் எனும் தேனாற்றுள் மூழ்கிக் களித்தீர்களா? உங்கள் மனதைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள்.  நாம் இறைவனைப் பக்தி பண்ண, நமக்கு எதற்கு சுவாமிமார்? உண்மையை உள்ளபடி சிந்தியுங்கள்.
சுவாமிமார் எல்லோரும் தவம் செய்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். அப்படி நாம் நினைப்பதால் கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்ற வேறுபாட்டை அறியாது அவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கி, பாதபூசை செய்கிறோம். ஒரு நிமிட நேரமாவது அவர்களும் எம்போன்ற மனிதரே, அவர்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் என எண்ணுகிறோமா? இல்லையே அது ஏன்? சரி எது? பிழை எது? எனச் சிந்திப்பது தவறா? அப்படி சிந்தியாது மற்றவர் செய்கிறார் என்று நாமும் செய்யலாமா?

கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்பதை எப்படி அறியலாம் என்பதை திருவள்ளுவர் எமக்குக் காட்டித்தந்துள்ளார். நாம் அவரின் சொற்களை ஏறெடுத்தும் பார்க்காது புறக்கணிக்கிறோம். அம்பு நேராக இருந்தாலும் உயிரைக் கொல்வதால் தீமை செய்கிறது. யாழ் வளைந்து இருப்பினும் இசையைத் தருவதால் நன்மை செய்கிறது. அது போல சுவாமிமார் செய்யும் நன்மை, தீமைகளை வைத்து அவர்களது குணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”                                   - (குறள்: 279) 

கள்ளச்சுவாமிமார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை திருவள்ளுவர் கூடாஒழுக்கம் என்ற அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். அந்த அதிகாரம் தவம் செய்வோரின் கூடா ஒழுக்கத்தையே எடுத்துச் சொல்கிறது. எனினும் எல்லா மனிதருக்கும் அது பொருந்தும். அவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் தவம் செய்வோர்  தமது தவவேடத்துள் மறைந்திருந்து பெண்களை வசப்படுத்துவதை, வேடர்கள் புதரில் மறைந்திருந்து பறைவைகளைப் பிடிப்பது போன்றது என்கிறார்.
“தவம்மறைத்து அல்லவை செய்தல் புதல்மறைத்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று                                   - (குறள்: 274)

அல்லவை செய்தல் என்பது காமவசப்படுத்தலாகும். பரிமேலழகரும் “தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறருக்குரிய மகளிரைத் தன்வயத்ததாக்குதல்” எனக் கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.


தவம் செய்வோரின் செயலைத் திருவள்ளுவர் மிக மிக அழகாகச் சொல்லுகிறார்,
தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றால்லார்  
அவம்செய்வார் ஆசையுள் பட்டு”            - (குறள்: 274) 
அதாவது தவம் செய்கின்றவர் எவராய் இருந்தாலும் - இல்லறத்தவனாய் இருந்தாலும் கூட அவர்கள் யாவரும் தன்நலவாதிகள். ஏனெனில் தாம் கடவுளை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கில் உலகில் வாழும் ஏனைய உயிர்கள் பற்றிய எதுவித எண்ணமும் இல்லாது தவம் செய்கிறார்கள். உண்மையாகத் தவம் செய்வதற்கு, எந்தவொரு ஆசைக்கும் உட்படாத நெஞ்சுரம் வேண்டும். அத்தகைய நெஞ்சுரம் இல்லாத எவரும் உண்மையான தவத்தை மேற்கொள்ள முடியாது. அது அவமே காலத்தை வீணாக்குவதாகும். 

அதனாலேயே  கள்ளச்சுவாமிமார் பொருளாசையில் நின்று சுழல்வதை
ஆற்றில் கிடந்த முதலைக்கண் அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே”


எனத் திருமூலர் அழகாகக் எமக்குக் காட்டித்தந்துள்ளார். ஆற்றில் வாழும் முதலைக்குப் பயந்துபோய், குட்டி போட்ட கரடிக்கு முன் நின்றது போல, மெய்ப்பொருள் எது என்னும் ஆழ்ந்த அறிவு இல்லாது, மனதை அடக்கி தவம் செய்யும் வலிமை அற்றவராய், சோற்றுக்கு நின்று வட்டம் அடிக்கிறார்களாம். சோறு என்பது இங்கு பொருளையே குறிக்கின்றது. 

உண்மையான தவத்தை  செய்யாதவர்களின் நோக்கம் பொருளும், பதவியும், புகழுமே அல்லாமல் கடவுளை அடைதல் அல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனாலேயே ஞானச்செல்வர்கள் யாவரும் கள்ளச்சுவாமிமாரின் தன்மைகளை வெளிச்சம் போட்டு காட்டிச்சென்றுள்ளனர். திருமூலரைவிடச் சிறந்த ஞானியர் எவராவது இந்நாளில் இருக்கிறார்களா? இனிமேலாவது நாமும் அவர் காட்டியவழி நடக்க முயற்சிக்கலாமே!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment