Friday 25 May 2012

ஆம்பல் - பகுதி 2

ஆம்பல் மருந்து

சங்க காலத்தில் ஆம்பலின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன மருந்தாகப் பாவிக்கப்பட்டன. போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் (மைஇழுது) பூசி (இழுகி), நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதி இருக்கிறார்கள். அதனை புறநானூற்றில்
“கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறிக்கழல் கால் நெடுந்தகைப் புண்ணே”
என்று அரிசில் கிழார் குறிப்பிட்டுள்ளார். இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், குஷ்டம் போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்களுக்கும் புகையாக ஊதப்படுகின்றன.
ஆம்பல் குழல்
35,000 ம் ஆண்டுகள் பழைமையான  குழல்
சங்க இலக்கியங்கள் ஒருவகை [புல்லாங்]குழலை ஆம்பல் என சங்கத்தமிழர் அழைத்ததைக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அழகிய ஆம்பல் குழல் தெளிவான இசையை வெளிப்படுத்தும் என்பதை
“ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற”   
                                                - (குறிஞ்சிப்பாட்டு: 222)
எனக் கூறுகின்றது.
சிலப்பதிகாரம்,
“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ!”                                  - (சிலம்பு: 7: 2)
பாம்பைக் கயிறாக பால்கடல் கடைந்த திருமால் இங்கு நம் பசு நிரைக்குள் வந்தால் அவன் வாயிலிருந்து இனிமையான ஆம்பல் குழலிசையை கேட்போமா தோழி!' என்கின்றது.

ஆம்பல் தண்டு நடுவே துளையுடையது. அதனை
நீர்வளர் ஆம்பல் தூம்பு திரள் கால்”          - (நற்றிணை: 6)
என நற்றிணை சொல்வதால் அறியலாம். ஆதலால் ஆம்பலின் தண்டில் குழல் செய்திருக்கலாம். மூங்கிலையும் ஆம்பல் என்று பண்டைய சங்கத்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ஆம்பல் பண்ணை இசைத்த குழலை ஆம்பல் குழல் எனவும் அழைத்திருக்கலாம். அக்கருத்தை ஐங்குறுநூறு 
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்”
                                  - (ஐங்குறுநூறு: 215: 4)
என ஆம்பல் பண் இனியாய்  ஒலித்ததை சொல்வதால் அறியலாம்.

ஆம்பல் பண் [இராகம்]
சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் இராகத்தை பண் என்று அழைத்தார்கள். ஆம்பல் என்பது ஒரு பண். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் பயன்படுத்திய ஒரு இராகத்தின் பெயர் ஆம்பல். பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்த்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகு ஊட்டினார்கள் என்பதை
"ஆபெயர் கோவலர் ஆம்பல் ஒடு அளைஇ
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப”             - (அகம்: 214: 10 - 11)
அகநானூறு சொல்கின்றது.
ஆம்பல் வண்ணம் [இசைப்பாட்டு]
வண்ணம் என்பதை வடிவம், நிறம் (வர்ணம்), குணம், சாயல், விதம் , சந்தம் என பலவிதமாகச் சொல்லலாம். இன்றைய கர்நாடக சங்கீதத்தில் வர்ணம் என்று படிப்பதும் வண்ணம் என்பதும் ஒரே கருத்தையே சுட்டும். சிலப்பதிகாரத்திற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ‘பஞ்சமரபு’ எனும் இசைநூலை அறிவனார் இயற்றியதாகக் கூறியுள்ளார். அந்த பஞ்சமரபு என்ற நூல் இசைப்பாடல்களின் வண்ணங்களை ஐந்தாகாக் கூறுகின்றது. 
  1. பத்திய வண்ணம்
  2. சித்திர வண்ணம்
  3. ஆம்பல் வண்ணம்
  4. பாத்திப வண்ணம்
  5. குவளை வண்ணம்
எனவே தமிழின் இசைப்பாடல் வண்ணத்தில் ஆம்பல் வண்ணமும் ஒன்று. பஞ்சமரபு கூறும் இந்த ஐந்து வகை இசைப்பாடல் வண்ணத்துக்கும் தொல்காப்பியரின் இருபதுவகை பாடல்வண்ணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 
ஆம்பல் எண் [இலக்கம்]
பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர்.
ஆம்பல்  = 100,000,000,000,000 = 1014  = one hundred trillion
சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் பெறுமதியான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்ன கைவிட்டான் என்பதை  
“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”
என அகநானூறு மிக விரிவாகச் சொல்கிறது.

ஆம்பல் காலாளவு
Picture courtesy: NASA
இலத்தீன் மொழியில் மேகத்தை நெபுலா என்பர். அண்டவெளியில் உள்ள தூசியும் வளியும் சேர்ந்த திரட்சியே நெபுலா. நெபுலாக்களில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. காற்றின் உந்து சக்தியால் நெபுலாக்கள் சக்கரம் போல் சுழல்கின்றன. அப்படி சுழலும் போது ஏற்படும் சக்தியால் இட்லி போல் உப்பி கோளமாக மாறும். அண்டவெளியின் தூசு, கோளமாக (நட்சத்திரமாக, கிரகமாக) மாற எடுக்கும் கால அளவை ஆம்பல் என்று சங்ககால [விண்வெளி] அறிஞர்கள் அழைத்தனர் என்பதை 
"உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்"
என பரிபாடல் சொல்வதால் அறியலாம். ஒன்றின் ஆயுட்காலத்தை ஊழி எனும் சொல் குறிக்கும். 

வான்வெளியில் நட்சத்திரம் உருவாக முன்னர் நெபுலா உப்பி வர எடுக்கும் காலத்தை காற்று ஊழி என்றும், அதற்கான கால அளவை ஆம்பல் என்றும் சங்கத்தமிழர் அழைத்ததைச் சொல்கின்றது. ஓர் ஆம்பல் என்பது எண்ணளவில் நூறு திரிலியனைக் குறித்தாலும், நட்சதிரம் உருவாகும் கால அளவில் அது நிமிடமா, நாளா, மாதமா வருடமா என்பதை அறியமுடியவில்லை. தேடுகிறேன். கிடைத்தால் தருவேன். அழிந்து போன பரிபாடல் பாடல்களில் அவை அழிந்திருக்கலாம்.  எனினும் நம் முன்னோரான சங்ககாலத் தமிழர் இன்றைய விண்வெளி ஆய்வாளர்களிலும் பார்க்க மிக நுட்பமாக நட்சத்திரம் எப்படிப் பிறக்கும் என்பதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை நம் நெஞ்சம் இனிக்கச் சொல்லலாம்.
இனிதே, 
தமிழரசி

2 comments:

  1. நன்கு எழுதினீர் நம் தமிழ் அழியாதிருக்கவும், தமிழன் பெருமை பல்கிப் பெருகவும் வாழ்க நும் தமிழ்ப்பணி வளர்க உமது ஆரோக்கியமும், செல்வங்களும், வாழ்க வாழ்க உமது சந்ததிகள்

    ReplyDelete