Thursday 10 May 2012

குறள் அமுது - (32)


குறள்:
“உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு”                                    - 993
பொருள்:
உடல் உறுப்புக்களால் ஒப்பிட்டுப் பார்த்து எல்லா மனிதரையும் மனித இனத்தவர் எனச்சொல்லமுடியாது. நற்பண்புகளால் ஒத்திருந்தால் மட்டுமே ஒருவரோடு ஒருவர் ஒத்தவராவார்.
விளக்கம்:
நாம் மற்றைய விலங்குகளில் இருந்து கை, கால், தலை போன்ற உறுப்புகளால் ஒத்து இருப்பதைக் கொண்டு எம்மை மனிதர் எனக்கொள்ள முடியாது. சாதி, இன, மத, நிற வேறுபாடுகளைக் கடந்து மனிதனுக்குரிய நற்பண்புகளில் ஒத்திருப்போரே மனிதராவர். 
பண்பென்றால் என்ன? ‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என கலித்தொகை கூறுகிறது. பாடு என்றால் ஒழுக்கம். இன ஒழுக்கம் மனித ஒழுக்கம் என்பவற்றை அறிந்து அதன்படி நடத்தலே மனிதப் பண்பாகும். வேறோர் உயிர்படும் துன்பத்தை தன்துன்பமாக உணர்தலும், அறிவிற்சிறந்து விளங்குவதும், பிறருக்கு அறிவூட்டுவதும்,  பசித்தோரை, நோயுற்றோரை, முதியோரைப் பாதுகாத்தலும், மரம், செடி, கொடி விலங்குகளைப் பேணுவதும் மனிதப்பண்பே. 
மனிதப் பண்புகள் மாய்ந்து போவதாலேயே உலகெங்கும் போர்கள் நடைபெறுகின்றன. போர் புரிபவர் கண்ணுக்கு மனிதரின் உடல் உறுப்புக்கள் ஒத்திருப்பது தெரிவதில்லை. தெரிந்திருந்தால் வன்னிமண்ணில் ஆயிரமாயிரம் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்குமா? தம்மை ஒத்த மனிதரைக் கொல்கிறோம் என எவராவது சிந்திக்கிறார்களா? எப்போது மனிதர் மனிதப்பண்புகளில் ஒருவரோடு ஒருவர் ஒத்தவர் ஆகின்றனரோ அன்றே போர்கள் போரிட்டு மாயும்.
மனிதர் தம்மிடையே உறுப்புக்களால் ஒத்திருப்பதைக் கொண்டு ஒரு மனிதரோடு மற்றவரை ஒப்பானவர் எனக்கூறமுடியாது. மனிதரிடையே பொருந்தக்கூடிய ஒற்றுமை என்னவெனில் நெருங்கிய நற்பண்புகளில் ஒத்திருத்தலேயாகும். 

No comments:

Post a Comment