Monday, 7 May 2012

நெஞ்சக் கனல் - 3

ஆண்மையும் வீரமும் போரும் தமிழரின் மறம் என எண்ணி வாழ்ந்தவன் தமிழன். அதனால் அவன் காலங்காலமாக இழந்தவை எண்ணில் அடங்கா. உலகெலாம் கூடி நடத்திய இன்றைய வன்னிப்போரை மட்டுமா ஈழத்து வன்னிமண் கண்டது? அதற்குமுன் எத்தனையோ போர்களைக் கண்ட களபூமியது. ஆங்கிலேயரும், ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும், சாவகரும், சோழரும், சிங்களவரும் தாக்கத் தாக்க எதிர்த்து நின்று களமாடி பகைவரை வென்றாரும் வீழ்ந்தாருமாய் வாழ்ந்த தமிழரின் களபூமிதானே வன்னிமண்.
(கீழ்லுள்ள படம், 1870ல் இலங்கையில் யானை வயல் உழுததற்கான ஆதாரம்) [Image courtesy: Wade G Burck]
அப்படி நடந்த ஒரு போரில் முல்லைத்தீவின் பேராற்றங்கரையிலிருந்த மணிபூங்குன்றும்  அழிந்தது.   அவ்வூரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என முழங்கிய மணிபூங்குன்றனார் ஊராகும். அங்கே உயிர் தப்பியோரில் வயதான ஒரு கிழவனும் ஒருகிழவியும் இருந்தனர். அவர்களுக்கு உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லாது எல்லோரும் இறந்துபோயினர். அந்த ஊரே அழிந்து, உண்ண உணவற்று இடுகாடாயிற்று. அவர்களால் அங்கு வாழமுடியாத நிலை. உயிர் தப்பியோர் வேறு வேறு ஊருக்குப் போய்விட்டனர். ஆதலால் அவர்கள் இருவரும் அந்த தள்ளாத வயதிலும் வேறு ஊர் செல்வதற்கு  பேராற்றங்கரையில் ஓடத்திற்காக காத்திருந்தனர். 
அந்நாளில் வன்னிப்பகுதி மக்களிடம் ஐம்பது, நூறு ஏக்கர் என வயல் நிலம் இருக்கும். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை  மாட்டைக் கொண்டு போரடிக்கலாம் (சூடுமிதிக்கலாம்). ஐம்பது ஏக்கர்,  நூறு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை மாட்டைக் கொண்டு அடிக்க முடியுமா? அதனால் யானையைக் கொண்டே போரடிப்பர். ஆனையைக் கொண்டு சூடுமிதிப்போர் பெரும்வீரர்களாக இருப்பர்.
ஓடத்திற்காக காத்திருந்த போது அந்த மூதாட்டிக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. இளமையில் சிங்கம் போலிருந்த தன் காதற்கணவன் முதுமையில் அல்லற்படுவதையும் போரால் ஊரழிந்ததையும் யாருமற்றவராய் தாமிருப்பதையும் எண்ணிக் கலங்குகிறார்.
பெண்:  மாடுகட்டிப் போரடிச்சா
                      மாளாது என்னு சொல்லி
             ஆனகட்டி போரடிச்ச
                       ஆளான சிங்கமல்லோ!
பெண்:  ஆடுகட்டக் கூடாம
                      அல்லற்படு நாளாச்சு
             ஊரு சனமெல்லாமே
                       கூண்டோடு போயாச்சி
பெண்:  ஓடுகின்ற ஆற்றோரம்
                       ஓடம்வரும் காத்திருப்பம்
             தேடிவர யாரிருக்கா
                        தேம்பியழக் கூடலயே!
                                          -  நாட்டுப்பாடல் (மணிபூங்குன்று - பேராற்றங்கரை)
                                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
தமிழர் போர் செய்தபோது பெரும்பாலும் முதியோர்களை, பெண்களை, நோயுற்றோரை தவிர்த்தே செய்தனர். ஆதலால் இந்த அவலம் மேலைநாட்டினர் இலங்கை வரமுன்னர் நடந்திருக்க வேண்டும். 
ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த போரால் மனிதர் பிணங்களாய் கிடந்த அவலத்தை இன்னொரு நாட்டுபாடல் சொல்கின்றது. 

காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
றோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
இப்படி நடந்த போர்களைப் புறட்டிப்பார்த்தால் நெஞ்சம் கனன்று கனலாய்க் கொதிக்கின்றதே! ஏன்? ஏன்? நானும் பெண் என்பதால். மனிதன் தோன்றிய காலம் தொட்டு உலகவரலாற்றில் நடந்த போர்கள் காட்டும் மிகக் கேவலமான கொடிய உண்மை எது தெரியுமா? போர்களால் சிதைந்து சீரழியப்படுபவர்கள் பெண்கள் என்பதே அந்தக் கசப்பான உன்மை. பெண்கள் தங்கள் மானத்தை மட்டுமா இழக்கிறார்கள்? வீட்டை, நாட்டை, உற்றாரை, பெற்றாரை, கணவனை அவற்றுக்கும் மேலே தன் கருவில் சுமந்த பிள்ளைகளை இழக்கிறாளே! அதுவே பெண்மை நிலைகுலைந்து நிற்கும் பேரவலமாகும். கன்னியராகாத இளம் பிஞ்சுகளின் பெண்மை சூரையாடப்படுகின்றது. அவர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஏதேதோ காரணங்களுக்காக நடந்த போர்களின் முடிவுகளில் எல்லாம் போகப்பொருளாய் பெண்ணே இருக்கின்றாள். எந்தப் போரானாலும் அவற்றின் முடிவில் போகப்பொருளாய் பெண்களை இழிவுபடுத்தி, அழித்து ஒழிக்கும் ஒற்றுமை இழையோடிக் கொண்டே இருக்கின்றது.
அதனாலேயே சங்ககாலப் புலவரான ஔவையாரும் ‘நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தாய் என்ன? எந்த வழியில் ஆண்கள் நல்லவர்களாய் இருக்கிறார்களோ, அந்த வழியில் இந்த நிலமும் நல்லதாக இருக்கும்’ என்றார். 
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”
நமது வாழ்வும் தாழ்வும் வாழும் நிலத்தை பொறுத்தில்லை. அந்தந்த நிலத்தில் வாழும் ஆண்களைப் பொறுத்தது என்கின்றார். ஔவையாரின் பெண்மையின் திண்மையே அவரை இப்படிப் பாடவைத்தது.
ஆதலால் உலகில் நடக்கும் எல்லா போர்களையும் அழித்து ஒழிக்கவேண்டிய பொறுப்பு பெண்ணிடமே இருக்கின்றது. ஏனெனில் அவளின் பிள்ளைகளே கொல்லப்படுகிறார்கள், உறுப்பிழந்தோராய், அறிவிலியாய் ஆக்கப்படுகிறார்கள். ஈழத்தின் மிகச் சிறிய இடத்தில் நடந்த போரிலே 93 ஆயிரம் விதவைகள் என்றால் உலக வரலாற்றின் போர்களிலே எத்தனை எத்தனை கோடானு கோடி பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், மானம் அழிக்கப்பட்டும் இருப்பர். நினைக்க உங்கள் நெஞ்சம் கனலாய் சுடவில்லையா? எனவே முள்ளிவாய்க்கால் போரின் போது மாபெரும் இன்னலை அனுபவித்த இளம்  பொண்ணொருத்தி உலகப் போர்களை அழிக்க போர்க்கொடி உயர்த்த வேண்டும். அவளிடமே அந்த ஆர்வமும் ஆற்றலும் எந்நேரமும் கனன்று கொண்டிருக்கும். நீ யாராக, எங்கே இருந்தாலும் இனிவாழும் பெண்களின் நலனுக்காக உலகப் போர்களை ஒழிக்க போர்க்கொடி தூக்கிப் புறப்பட்டு வா மகளே! என நெஞ்சக் கனலோடு இரந்து  கேட்கிறேன். மகளே! அதுவரை தமிழினம் அதிலும் தமிழ்ப்பெண்ணினம் நெஞ்சக் கனலை சுமந்து நிற்கும். 
இனிதே, 
தமிழரசி. 

No comments:

Post a Comment