வாடி பெண்ணே என்னோட!
அந்நாளில் பெண்கள் கூடையில் பொருட்களை எடுத்துச் சென்று கோயில்களிலும் சந்தைகளிலும் விற்பது வழக்கமாகும். பொலநறுவையில் வாழ்ந்த இளம் பெண்ணொருத்தியும் ஒவ்வொரு நாளும் கூடை மேலே கூடை வைத்து பொருட்களை விற்பதற்காக எடுத்துச் சென்று விற்று வந்தாள். அவள் கூடை மேலே கூடை வைத்து பொருட்களை எடுத்துச் செல்வதை பல நாட்களாக பார்த்து மகிழ்ந்தான் ஓர் இளைஞன். அவனை அறியாமல் அவள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் எப்போ அவள் வருவாள் எனப்பார்த்திருந்தான். அவளைக் கண்டதும் தனது ஆசையை வெளிப்படுத்துகிறான்.
ஆண்: கூடைமேல கூடை வைத்து
குடுகுடுஎன்னு போற பெண்ணே
கூட நானும் வந்திடட்டா
குமரி உன்னை கொஞ்சிடட்டா.
அவளும் அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் எதிர்ப்பாட்டு (எசப்பாட்டு) பாடுகிறாள். அவன் அவளைக் கொஞ்சினால் அந்த ஊரார் அவனை சும்மா விட்டுவிடுவரா? மரண அடி கொடுப்பர். அந்த வேதனையை தாங்கமுடியாமல் அவன் பாழும் கிணற்றில் விழவேண்டி வரும் என்பதை மிக நளினமாகச் சொல்கிறாள்.
பெண்: கூட நீயும் வந்திடலாம்
குமரி என்னை கொஞ்சிடலாம்
பாட(டை)யில போறதற்கு நல்ல
பாழும் கிணறு பாருமய்யா.
அவளின் எசப்பாட்டுக்கு அவனும் விடாமல் எசப்பாட்டு பாடுகிறான். மரண அடியையோ மரணத்தையோ அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதற்கு முன் அவளுடன் வாழ்ந்தால் போதும் என்றே நினைக்கிறான்.
ஆண்: பாட(டை)யில போறதற்கு நல்ல
பாழும் கிணறு பாக்கமுன்னம்
வாழவேணும் உன்னோட
வாடி பெண்ணே என்னோட.
- நாட்டுப்பாடல் (பொலனறுவை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment