குறள்:
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்லென்னும் சொல்” - 70
பொருள்:
இவனைப் பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர் புகழும்படி வாழ்வதே ஒரு மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.
விளக்கம்:
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
என தந்தையின் கடமையை 67வது குறளில் சொன்ன திருவள்ளுவர், அப்படி தந்தை செய்த நன்றிக்கு அதாவது நன்மைக்கு உதவி செய்யவேண்டியது பிள்ளையின் கடமை என்கிறார். பிள்ளை செய்யவேண்டிய கடமை அப்பிள்ளை புகழுடன் வாழ்தலேயாகும். அவன் புகழுடன் வாழ்வதால் தன்னைப் பெற்று பெருமையோடு வளர்க்கப் பாடுபட்ட பெற்றோரை உலகம் போற்ற வாழச்செய்ய முடியும்.
பெற்றோர் செய்த நன்மைக்கு பிள்ளைகள் செய்யும் உதவி முதியோர் இல்லத்திற்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் பெற்றோரை அனுப்புவதாக இருக்கக் கூடாது. பெற்றோரின் புகழுக்கு களங்கம் ஏற்படாது நடக்க வேண்டிய பொறுப்பும் பிள்ளைகளுக்கு உண்டு. தன்னைப் பெற்றவரை உலகம் புகழ வழி செய்பவராக, தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவராகா இருப்பவரைப் பார்த்தே உலகம் புகழும். ஆனால் இன்று பகட்டுக்கும், பணத்துக்கும் மயங்கி புகழ்பவரே அநேகர். அந்தப்புகழ் நீர்க்குமிழி போல் என்றும் நிலைக்காது.
இந்த உலகம் புகழ நீங்களும் வாழ்ந்து உங்களது பெற்றொரும் வாழவேண்டுமானால் பட்டுக்கு மயங்காது நேர்மையற்ற செயல்களை, கொடுஞ் செயல்களை செய்யாது அன்பாகப் பண்பாக கல்வியாளனாக, அறிஞனாக, சான்றோனாக வாழுங்கள். உங்களது பெருமையைப் பார்த்தவர்கள் ‘இந்த நல்ல பிள்ளையைப் பெற்று வளர்க்க இவன் தந்தை என்ன தவம் செய்தானோ’ என்று புகழ்வார்கள். அப்படி புகழும்படி வாழ்வதே ஒரு மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.