இன்று நாம் மனிதர்களின் கடவுட்கொள்கையை ‘மதம்’ என்று அழைக்கிறோம். மதம் என்ற சொல் சங்கத்தமிழ் நூல்களில் அழகு, வலிமை, செருக்கு என்ற கருத்திலேயே வருகின்றது. முதன் முதலில் மதம் என்ற சொல்லை மாணிக்கவாசகரே கடவுட் கொள்கையாகப் போற்றித்திருவகவலில்,
“சமயவாதிகள் தம் தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைத்தனர்”
-(திருமுறை: 8: 4: 52 - 53)
எனக்குறிப்பிடுகின்றார்.
இவருக்கு முன் ‘சமயம்’ என்ற சொல்லை கடவுட்கொள்கையாக கி பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீத்தலைச்சாத்தனார்,
“நவை அறு நன் பொருள் உரைமினோ, என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள்”
- (மணிமேகலை: 27: 1 - 4)
என்று தாமியற்றிய மணிமேகலையில் ‘சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையில்' பயன்படுத்தி இருக்கிறார்.
இதிகாசகாலத்திற்கு முன்பிருந்தே சிவவழிபாடு தமிழரிடம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் ‘மதம்’ என்றோ 'சமயம்' என்றோ அதனை அழைக்கவில்லை. அது ஏன்? நாமே சமைத்துச் சாப்பிடும் போது அதனை விருந்து என்கிறோமா? இல்லையே. உறவினரோ, நண்பரோ வந்து உண்டால் அதனை விருந்து என்கிறோம். அதுபோல் தமிழ் தனிமொழியாயும் ஒரே கடவுட்கொள்கையுடனும் இருந்த போது மதம் என்றோ, சமயம் என்றோ அழைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை.
தமிழர்களாகிய திராவிடர்களை நோக்கி ஆரியமும் ஆரியக் கடவுட் கொள்கையும் இந்தியாவின் வடக்கே இருந்து வந்தது. அதனை இலங்கைவரை பரப்பியவர்கள் ஆரிய முனிவர்களும் அவர்கட்கு துணைநின்ற இராம இலட்சுமணருமே. அக்காலத் தமிழரிடம் கொலை வேள்வி செய்யும் பழக்கம் இருக்கவில்லை. அந்நாளில் யாகங்கள் செய்தவர்கள் வடநாட்டினரே. அவர்கள் அசுவமேத யாகம் (உயிருடன் குதிரையை நெருப்பிலிடல்), கஜமேத யாகம் (உயிருடன் யானையை நெருப்பிலிடல்), நரமேத யாகம் (உயிருடன் மனிதனை நெருப்பிலிடல்) போன்ற பல யாகங்களைச் செய்தனர். அதனை அவர்கள் புனித வேள்வி என்றும் அக்கொலை வேள்வியைத் தடுத்தவர்களை அரக்கர் என்றும் அழைத்தனர். அத்தகைய கொலைவேள்வி செய்தவர்கள் அரக்கர்களா? தடுத்தவர்கள் அரக்கர்களா?
இராம இலட்சுமணர் துணையுடன் முனிவர்கள் செய்த கொலைவேள்வி காட்டுமிராண்டிச் செயல் அல்லவா? இராம இலட்சுமணர்களால் கொல்லப்பட்டவர்களில் திரிசிராவும் ஒருவன். இராம பாணத்தால் திரிசிரா இறந்ததைக் கம்பர்
“திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும்”
- (கம்பராமாயணம்: 3010)
என, அமெரிக்க இரட்டைக் கோபுரம் சரிந்தது போல அங்கலாய்க்கிறார். சிகரம் என்று சொல்வதிலிருந்து அவனது உயர்வை, மேம்பாட்டை எமக்குக் காட்டிச் சென்றுள்ளார். இராவணனின் தாய் கைகசியின் தங்கை மகனே திரிசிரா. திரிசிரா ஆண்ட இடம் இன்றும் அவன் பெயராலே அழைக்கப்படுகின்றது. அதுவே தமிழகத்தின் திரிச்சிராப்பள்ளி [திரிசிரா + பள்ளி]. தற்போது திருச்சி என்கின்றோம். அவனை மட்டுமல்ல,
“கோல மாமலரொடு தூபமும்
சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வலிபடப் பொருந்தினார்”
-(திருமுறை: 3: 91: 6)
எனச் திருஞானசம்பந்தரும்
திருவையாறு
“வாலியார் வணங்கி ஏத்தும்
திருவையாறு அமர்ந்த தேன்”
-(திருமுறை: 4: 39: 2)
என நாவினிக்க திருநாவுக்கரசரும் சொல்லி மகிழ்ந்த வாலியை இராமர் மறைந்து இருந்து கொன்றார்.
ஈழத்தமிழர் வரலாற்றிலே முதன் முதல் மதமாற்றத்தை சாடிய சான்றோன் இராவணனே. திருமுறைகள் போற்றும் இராவணன் சைவன் என்பதற்கு அவன் பாடிய சிவதாண்டவ தோத்திரமும் சாமகீதமுமே சாட்சி.
இராமேஸ்வரத்தில் இராமர் ஆலமர நிழலில் இருந்து ஆகமங்களை ஆராய்ந்தார். ஆலமரப் பறவைகளின் சத்தம் அவரது ஆராய்ச்சியைத் தடைசெய்தது. அதனால் அவர் பறவைகளைக் கொன்று பறவைகள் எழுப்பிய சத்தத்தை அடக்கினார் என்று ஆழ்வார்கள் விதந்து உரைக்கிறார்கள். சீதையை சிறைமீட்க இராமேஸ்வரம் வந்தவருக்கு ஆகம ஆராய்ச்சி எதற்கு? மதபோதனை ஆளர்களுக்கே அது தேவையானது. அதுமட்டுமல்ல, விபீடணனை வைணவர்கள் ஆழ்வார் (விபீடண ஆழ்வார்) என்றழைப்பதும், ‘விபீடண சரணாகதி’ வைணவமதக் கருப்பொருளாக இருப்பதும், இராமர் திராவிடரை மதம் மாற்றவே தெற்கே வந்தார் என்பதை உறுதி செய்கின்றன.
இராமர் சிவபூசை செய்தார். ஏனெனில் பழம்பெரும் சிவபக்தர்களான வாலியை, இராவணனைக் கொன்றபாவம் தொலையச் செய்ததாக பல இடங்களில் தேவாரம் செப்புகின்றது.
“தென்னிலங்கைத் தசமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்”
-(திருமுறை: 3: 10: 2)
என இராமேஸ்வரத்தில் இராமர் சிவலிங்கம் ஸ்தாபித்ததை, திருஞானசம்பந்தர் தமது மூன்றாம் திருமுறைத் தேவாரத்தில் சுட்டுகிறார்.
இராமர் ஆரியக் கடவுட்கொள்கையை இலங்கைவரைப் பரவச்செய்த பின்னர் ஆரிய, திராவிடக் கடவுட்கொள்கைகள் ஒன்று சேர்ந்து தோன்றிய சமயத்தையே நாம் இன்று ‘இந்துசமயம்’ என்று அழைக்கின்றோம். அப்படித் தோன்றிய இந்துமதம் கொலைவேள்வியைத் தடுக்கவில்லை. இந்துவாகப் பிறந்த புத்தர், அரசவாழ்வையும் மனைவியையும் மகனையும் துறந்து ஒவ்வொரு வேள்வி வேள்வியாய்ச் சென்று வேள்விகளைத் தடைசெய்தார். அவரது கொல்லா அறக்கொள்கையே பின்னாளில் பௌத்த மதம் ஆகியது.
புத்தரைவிடக் கடுமையாக உயிர்க்கொலையை எதிர்த்த ‘மாவீரர்’ இந்துமதத்தில் இருந்த சைவமதக் கொள்கையை ஆதரித்தார். ஆதலால் சமணம் தமிழகத்தில் நிலைத்தது. புத்தரும், மாவீரரும் இந்துவாகப் பிறந்து இந்துமத தத்துவத்தைச் சாடியவர்களே. இவர்களது பெயரைக்கூறி இவர்களுக்குப் பின்வந்த பௌத்தரும், சமணரும் பிறமதத்தவரைத் துன்புறுத்தியதால் தமிழர்கள் அம்மதங்களை வெறுத்தனர். இவ்விரு மதங்களைச் சாட திருஞானசம்பந்தர் பிறந்தார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் காலத்தில் சைவமும் தமிழும் நலிந்து கிடந்ததை நாம்,
“வாயிருந்தும் தமிழே படித்தாளுறா
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்”
-(திருமுறை: 5: 58: 9)
என திருநாவுக்கரசர் பாடி வருந்தியதில் இருந்து அறியலாம்.
திருஞானசம்பந்தர் தாம்பாடிய ‘தோடுடைய செவியன்’ பதிகத்திலேயே
‘புத்தரொடு பொறியில் சமணும் புறங்கூற”
-(திருமுறை: 1: 1: 10)
என தமது மூன்று வயதிலேயே அவர்களை வம்புக்கிழுக்கத் தொடங்கி, 8000 சமணர்களை கழுவில் ஏற்றி சைவசமயத்தை நிலைநாட்டினார்.
“நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு
அரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத்”
-(திருமுறை: 7:67: 5)
என்ற சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருஞானசம்பந்தர் காலத்தில் மீண்டும் தமிழ்ப்பாமாலை பாடி அர்ச்சித்தல் தொடங்கி அது சுந்தரர் காலத்திலும் நடந்ததற்குச் சான்றாகிறது.
எட்டு வயதான ஆதிசங்கரர் பிறமதங்களைச் சாடி, மாயாவாதப் பிரசாரத்தை சுழற்காற்றுப் போல் நாடெங்கும் செய்ததை மாணிக்கவாசகர்,
“மிண்டிய மாயா வாத மென்னும்
சண்ட மாருதம் சுழித்தடித் தார்த்து”
-(திருமுறை: 8: 4: 54 - 55)
என்கிறார்.
இவ்வாறு காலத்துக்கு காலம் மதமாற்றச் சாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. புதிய மதக் கொள்கைகள் உருவாகவும் அதனால் மதமாற்றம் ஏற்படவும் காரணம் என்ன? எமது மதக் கொள்கையில் இருக்கும் மூடநம்பிக்கைளும், பல முரண்பாடுகளும், எவருக்கும் புரியாத மொழியில் எமது மதக்கொள்கைகளைப் பேணுவதுமே. இதனை உணர்ந்தே சுவாமி விவேகானந்தரும் மதச் சண்டைகளூக்குக் காரணம் சமஸ்கிருத மொழியே, சமஸ்கிருத மொழிநூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றார்.
இங்கு கோயில் ஒன்றில் அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கண்மூடிக்கேட்டேன். தொலைக்காட்சியில் நீங்கள் செய்தி பார்க்கிறீர்கள். செய்தியாளர் தமிழைக் கொலை செய்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சியை நிறுத்துவீர்கள். அன்றேல் வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்பீர்கள். கோயிலில் அதைச் செய்யமுடியுமா? நான் இளவயதில் சமஸ்கிருதம் கற்றபோது ஆசிரியர் கூறினார், ‘செந்தமிழும் நாப்பழக்கம்' என்று கூறுவது தவறு. எந்த மொழியும் நாப்பழக்கமே. அதிலும் சமஸ்கிருதம் - மறைமொழி ஆதலால் அதனை உச்சரிக்கும் போது முறையாக உச்சரிக்க வேண்டும். அல்லது கும்பகர்ணன் ‘நித்திய வரம்’ வாங்கப்போய் ‘நித்திரா வரம், வாங்கிய கதையாய் முடியும்‘ என்று. அதன் உண்மையை அன்று உணர்ந்தேன்.
அது அர்ச்சகர் தவறு அல்ல. எமது தவறே. நாமோ கோயில் பொறுப்பாளர்களோ, சமஸ்கிருதம் அறிந்திருந்தால் இப்பிழைகளை உணரமுடியும். நயினை கைலாயநாதக்குருக்கள் போன்ற சமஸ்கிருதம் வல்ல அந்தணர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த, என் தந்தை போன்ற அறிஞர்களும் சமஸ்கிருத புலமையுடையவர்களாக இருந்ததால் கோயில் மந்திரங்கள் இலக்கணச்சுத்தமாக சொல்லப்படுவதை ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டனர். அந்த நிலை இன்று இல்லை. அர்ச்சகர்விடும் தவறு மற்றவர்க்கு தெரிவதில்லை.
அனேகமான மந்திரங்கள் ஒலிநாடாவாகவும் ஒலித்தட்டாகவும் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவற்றிற்கு ஆங்கிலத்தில் கருத்தும் கூறப்பட்டுள்ளது. நம் இளம் தலைமுறையினர் மந்திரங்களின் உண்மைத்தன்மையை அறிய ஆங்கிலக் கருத்து உதவிபுரியும். எனவே பக்தர்களுக்கு கோயிலில் அர்ச்சனை செய்யும் மந்திரங்களையும் அவற்றின் கருத்துக்களையும் எழுதிக் கொடுத்தால் எல்லோரும் படித்துப் பயனடைவார்களே! இதனை இலண்டன் திருக்கோயில்கள் ஒன்றிய நிர்வாகிகள் செய்வார்களா?
எல்லா மதங்களூம் உண்மைதான். ஆனால் ஒரு மதமும் முழுமையானது இல்லை. இந்த உண்மை நம்மில் பலருக்கு நன்கு தெரியும். இருந்தும் 'எமக்கு இன்னும் ஏன் இந்த உறக்கம்?' எமது மதக் கொள்கைகளின் முரண்பாடுகளை, மூடநம்பிக்கைகளை களைந்து எறிந்தால் என்ன? ஒவ்வொரு சைவமகாநாடு நடக்கும் போதும் அடுத்த மகாநாட்டின் முன் இந்தக் கொள்கையை இப்படி சீர்திருத்துவது என முடிவெடுத்து, அதைச் செயற்படுத்தினால் சைவமகாநாடு நடத்துவதில் பயன் இருக்கும். நாம் அப்படி சீர் செய்யாவிட்டால் இன்றைய எமது மதக்கொள்கையைச் சாட யாரோ ஒருவர் நிச்சயம் வருவார்.
இனிதே,
தமிழரசி
(இலண்டன் சைவ மாநாடு சிறப்புமலர் - 2004ல் எழுதியது)